(குறிப்பு: கோவிலில் விவிலிய வழிபாடாக நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.)
(வருகைப் பாடல் பாடவும்)
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, நிலவளமும் நீர்வளமும் கொண்டது நம் அருமைத் தமிழ்நாடு. பண்டைக்காலம் தொட்டே, தமிழர் உழுதுண்டு வாழ்ந்தனர். தமது உழைப்பின் முதற்பலனை இறைவனுக்குப் படைத்து மகிழ்ந்தனர். இவ்விழாவைப் பொங்கல் விழாவாக, நன்றித் திருநாளாகக் கொண்டாடி வருகின்றோம். தமிழ்க் கத்தோலிக்கர்களாகிய நாமும் இறைவனின் எல்லையற்ற இரக்கப் பெருக்கால் பெற்ற அறுவடையின் முதற்பலனை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். நம் இதயங்களில் வழிந்தோடும் நன்றிப் பெருக்கினை இறைவனுக்கு எடுத்துக் கூறும் வகையில் இவ்வழிபாட்டில் பக்தி உருக்கத்துடன் பங்கு கொள்வோம்.
(குரு திருநூலுக்குத் தூபம் காட்டலாம் (அல்லது) சிறுவர் சிறுமியர் தீப தூப மலர்களினால் திருநூலுக்கு வணக்கம் செலுத்தலாம்.)
முதல் வாசகம் லேவி. 23: 9-14
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டு வர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். அதனை ஆரத்தியாகக் காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ உண்ணலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்களுக்குப்பின் வரும் உங்கள் வழிமரபினரும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள்ள நியமம் ஆகும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
(சிறிது நேரம் மெளனம்)
பதிலுரைப்பாடல் திபா. 65: 9, 10, 11, 12.
பல்லவி: கடவுளே, உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது.
1. மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்!– பல்லவி
2. கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. – பல்லவி
3. படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென் மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.
4. ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. – பல்லவி
5. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
6. அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். – பல்லவி
2ஆம் வாசகம் 1 கொரி. 1:2-9
இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப் பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப் பெற்று, சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும், கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
புகழ்ச்சிப் பாடல் திபா. 136:4, 8, 9, 23, 24, 25.
குரு: விண்ணுலகையும் மண்ணுலகையும் இணைப்பவர் இறைமகன் இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே நாம் அனைத்தையும் பெற்றோம். அவர் வழியாகவே இறைவனுக்கு நன்றி செலுத்தி இறைவனைப் புகழ்வோம்.
பதிலுரை: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர்.
1. தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு நன்றி செலுத்துங்கள்.- பல்லவி
2. பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள். - பல்லவி
3. இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்.- பல்லவி
4. தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்.- பல்லவி
5. நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்.- பல்லவி
6. உடல் கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவர்க்கு நன்றி செலுத்துங்கள்.- பல்லவி
(வேறு பாடலைப் பாடலாம்.)
நற்செய்தி வாசகம் லூக். 2:21-32
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக் குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். "ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப் பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டு வந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
(சிறிது நேரம் மௌனம்)
(கிறிஸ்து இறைவனின் தலைப்பேறு, முதற்கனி. அவர் தம்மையே கோவிலில் இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் நிகழ்ச்சியைக் கேட்டோம். நாமும் நம் விளைச்சலின் முதற்கனியை இறைவனுக்கு நன்றியுள்ளத்துடன் சமர்ப்பிக்கக் கூடியிருக்கின்றோம். இந்நன்றி உள்ளத்துடன் நாம் என்றும் இறைத் திருவுளத்திற்கேற்ப வாழ்வோம் எனும் பொருள்படக் குரு மறையுரை ஆற்றலாம்.)
விசுவாசிகள் மன்றாட்டு
அன்பார்ந்த சகோதரரே, பொங்கல் விழாவை நன்றித் திருவிழாவாகக் கொண்டாடும் அனைவர்க்காகவும் நம் அன்புத் தந்தையாகிய இறைவனை நோக்கி மன்றாடுவோமாக.
1. பொங்கல் விழா நன்றி விழா என்பதை உணர்ந்து, உமது கொடைகளுக்காக நாங்கள் செலுத்தும் நன்றியை அன்புடன் ஏற்றுக்கொள்ளும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. அனைத்துலகத் திருச்சபை, அந்தந்த நாட்டின் கலை, பண்பாடு, விழா இவற்றைப் பயன்படுத்தி, இறைவழிபாட்டில் புதிய திருப்பம் காணும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் உழைப்பை ஆசீர்வதித்து, உழைக்கும் கரங்களுக்குப் போதிய ஆற்றலைத் தந்து, உழைப்பின் பலனை நாங்கள் பெற்று மகிழும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
4. பருவமழை முறையாகப் பெய்து, நாட்டின் வளமும் வீட்டின் நலமும் நாளும் பெருகும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. உழவுத் தொழிலுக்கு உதவிடும் ஆடு மாடுகளை ஆசீர்வதித்து, நோயினின்று அவற்றைக் காப்பாற்றியருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
6. நிலத்தின் விளைவைப் பெறுவோர் உமது அன்பாலும் அருளாலும் நிரப்பப்படும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
7. பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் இறை அன்பும், பிறரன்பும் பொங்கி வழியும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.
குரு: (கைகளை விரித்து) ஆண்டவரே, அனைத்தையும் படைத்தவரே, படைத்தவற்றை உமது புகழுக்காக எமது வாழ்வுக்காகவும் பயன்படுத்தத் திருவுளங்கொண்டீரே! எங்கள் உழைப்பை உமது அருட்கரத்தால் ஆசீர்வதியும். எங்கள் உழைப்பின் பலனை மக்கள் அனைவரும் பெற்று, என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ வரமருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(பொங்கல் மந்திரிப்பு)
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
அனைத்து நன்மைக்கும் ஊற்றாகிய இறைவா, உழவர்களுக்கும், அவர்களது உழைக்கும் கரங்கள் மூலம் மற்ற அனைவருக்கும் நீர் அளித்துள்ள அருட்கொடைகளுக்கெல்லாம் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எங்கள் நன்றியின் அடையாளமாக நாங்கள் கொண்டுவந்திருக்கும் இப்பொங்கலையும் (கரும்பையும்,பழங்களையும் அல்லது இப்பொருட்களையும்) ✠ ஆசீர்வதித்தருளும். முதற்கனியெனப் புகழப்படும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு பொங்கலின்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)
குரு: (மக்கள்மீது கையை நீட்டி) உங்கள் அனைவருக்கும் உழைக்கும் திறனையும், அதன் பலனையும் நிறைய தந்து, களமிக்க நாட்டை வளமிக்க நாடாக்க இறைவன் அருள்புரிவாராக.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து என்றும் காப்பாராக.
எல்: ஆமென்.
(கோயிலுக்குக் கொண்டுவந்திருக்கும் பொங்கலின் ஒரு பாகத்தை, ஏழை எளியவர்களுக்கென்று கோயிலில் செலுத்திவிட்டு, மற்றப் பாகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.)