குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: நாம் போகும்போதும் வரும்போதும் காத்து வருகின்ற நம் ஆண்டவர் உங்களோடு என்றும் இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
(முன்னுரையாகச் சில வார்த்தைகள் கூறலாம்.)
நற்செய்தி லூக். 24:13-17, 25-32
சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் 'எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, "வழி நெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!" என்றார். மேலும் மோசே முதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறி கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார். அப்போது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பதிலுரைப்பாடல் திபா. 16:1-4; 3,5; 6-7; 8-9; 11
பல்லவி: இறைவா, எமக்கு வாழ்வும் வழியும் நீரே.
1. இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். – பல்லவி
2. பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம். ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. – பல்லவி
3. இனிமையான நிலங்கள் எனக்குப் பரிசாகக் கிடைத்தன; உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. – பல்லவி
4. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். – பல்லவி
5. வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி
குரு: மன்றாடுவோமாக:
நம்பினோர் அனைவரையும் பாதுகாக்கும் விண்ணகத் தந்தையே! நீர் உம் மக்களைப் பாலைவனத்தின் வழியாகப் பாதுகாப்புடன் வழிநடத்தி, செழிப்பான நாட்டிற்கு அழைத்துச் சென்றீரே! (இன்று) பயணம் தொடங்கவிருக்கும் உம் மக்களைப் பாதுகாப்புடன் வழிநடத்துவீராக. உமது அன்பின் ஆவியால் இவர்களை நிரப்பியருள்வீராக. அனைத்துத் தீமைகளிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றி, உடல் நலத்துடன் சென்றுவர அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தமது வலக் கையை அவர்(கள்) மீது நீட்டி)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்குக் காவலாயிருக்க உங்களுக்குப் பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)