பொதுச் சமூகத் தேவைகளில் உதவியளிக்கும் குழுக்கள்மீது ஆசியுரை

குறிப்பு : திருச்சபை நற்செய்திப் போதனைகளை உண்மையோடு கடைப்பிடித்து, மனித சமூகத்தில் நலமானவையாகக் காண்பவற்றையெல்லாம் போற்றிப் பேணுகிறது; உறுதிப்படுத்துகிறது.

சமூகத்தில் பொதுத் தேவைகள் எழும்போது மக்களின் துன்பம் துடைப்பதும், சுமையைக் குறைப்பதும் இறைமக்கள் அனைவருக்கும் கடமையாகும். எனினும் இந்த நோக்குடன் அமையப்பெற்ற சங்கம், சபை, குழுக்கள் எல்லாம் போற்றற்பாலவை, ஆதரவுக்கு உரியவை; ஏனெனில் இவை மக்களின் ஆற்றல்களை ஒன்றாகத் திரட்டி பேருதவி அளிக்கலாம். பிறரையும் தம்மோடு இணைத்து மிகப் பயனுடன் உழைக்கச் செய்யலாம்.

பொதுச் சமூகத் தேவைகளில் உதவியளிக்கும் குழுக்கள் என்றால், மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கூட்டிச் செல்லும் குழு, தீயணைக்கும் படை, வெள்ளப் பெருக்கில் துணைநிற்கும் குழு போன்றவையாகும். இவை அரசு ஏற்படுத்தும் அமைப்புக்களின் அங்கங்களாகவும் இருக்கலாம். இத்தகைய கிறிஸ்துவக் குழுக்களை ஊக்குவித்து ஆதரிப்பதே இந்த ஆசியுரையின் நோக்கம்.

தொடக்கச் சடங்கு

(குழுவின் உறுப்பினர் கூடிவந்தபின் பொருத்தமான ஒரு பாடல் பாடலாம்.) 

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

முன்னுரை

(குரு மக்களை ஆசி பெற அழைக்கிறார்.)

குரு: அன்புச் சகோதரர் சகோதரிகளே.

அன்பே கடவுள்; அவர் தமது அன்பில் மனிதருக்குப் பங்களிக்கத் தம் மகனை உலகிற்கு அனுப்பினார். அத்திருமகனோ நோயுற்றோர், நலிந்தோர், ஆதரவற்றோர், எதிர்ப்புக்குள்ளானோர் போன்ற அனைவருக்கும் கனிவுடன் உதவியளித்தார். அவர் மக்கள்மீது எத்துணை அன்புகூர்ந்தார் எனில், அவர்களுக்குச் செய்வதெல்லாம் தமக்கே செய்வதாக உறுதி கூறினார்; இரக்கமுள்ளவரைத் தந்தையின் ஆசிபெற்றவர் என்று அழைத்தார்; அவர்களுக்கு முடிவில்லா வாழ்வையும் வாக்களித்தார்.

எனவே பிறருக்குச் சேவை செய்யும் நோக்கம் கொண்ட இக்குழுவின் உறுப்பினர் மீது இறையாசி நிறைவாய் வர நாம் இறைஞ்சி மன்றாடுவோம்.

இறைவாக்கு வாசகம்

(இப்பொழுது குழுவினரில் ஒருவர் அல்லது குரு திருநூலிலிருந்து வாசிப்பார். அல்லது குழுவின் நோக்கத்திற்குப் பொருத்தமான பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.)

எ.கா. (மத்தேயு 25:31-46)

சகோதரரே, மத்தேயு எழுதிய தூய நற்செய்தி வாசகத்தைக் கேட்போம்.

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியதாவது:

வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன். என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள், 'ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், 'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், 'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

(அல்லது)

சகோதரர் சகோதரிகளே, இறைவாக்கினர் எசாயாவின் போதனைக்குச் செவிகொடுங்கள். (58:1,5-11).

பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து. ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கிறீர்கள்?

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல்போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் 'இதோ! நான்' என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ் சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

4. அல்லது வேறு பாடங்கள்:

தோபி. 12:6-15 (தானம் முடிவில்லா வாழ்வை அளிக்கும்.)

சீராக் 33:-4:11 (ஏழைகளுக்கு இரங்கல்.)

சீராக் 7:33-39 (அழுவோரைத் தவிர்க்காதே.)

மாற். 2:1-12 (முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்தல்.)

லூக். 10:25-37 (நல்ல சமாரியர்.)

யோவா 13:12-17(சீடரின் காலடிகளைக் கழுவுதல்.)

மறையுரை

5. குரு சுருக்கமான மறையுரை ஆற்றுவார்.

பொது மன்றாட்டு

6. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதை விட்டுவிடலாம். மேலும் இங்குள்ள மன்றாட்டுகளில் மிகப் பொருத்தமானவற்றைத் தேர்ந்துகொள்ளலாம்; தேவையானால் வேறு மன்றாட்டுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

குரு: நம் ஆண்டவர் கிறிஸ்து நமது வலுக்குறைவைத் தாங்கிக் கொண்டார், நம் துன்ப துயரங்களைச் சுமந்து கொண்டார்; எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். நாம் அவரைப் பின்பற்ற வேண்டுமென்று முன்மாதிரியாக விளங்கினார். அவர்தம் அன்பில் நிலைத்து நின்று நாம் அவரை இரந்து மன்றாடுவோம்.

1. நீர் எங்களுக்காக ஏழையாகி, பணிவிடை பெறவன்று. பணிவிடை புரியவே வந்தீர்; எங்கள் சகோதரருக்கு அன்பு செய்து, தேவைகளில் உதவிட எங்களுக்கு அருள்கூரும். 

எல்: ஆண்டவரே, பிறருக்கு உதவிடக் கற்றுத்தாரும்

2. மனிதர் எல்லாரும் ஒருவருக்கொருவர் அயலார் என்று ஒருவரை ஒருவர் நேசிக்குமாறு உமது மீட்பினால் புதிய உலகை உருவாக்கினீர்; நற்செய்திப்படி அனைவரும் வாழுமாறு நாங்கள் மனமுவந்து உழைக்க அருள்கூரும்.

3. உலகின் செல்வ நலன்கள் அனைத்திலும் மனிதர் எல்லாரும் உரிய பங்கு பெறவேண்டும் என விரும்புகிறீர்; வறியோருக்கும் துன்புறுவோருக்கும் உதவி புரியப் பலர் உமது அன்பினால் உந்தப்பட்டு, முழுமனதுடன் ஈடுபட அருள்கூரும்.

4. உம் அன்னை மரியா எங்களுக்கும் அன்னையாயிருக்க விரும்பினீர்; நாங்கள் அவருடைய பாதுகாவலில் அடைக்கலம் புகுந்து, அவரே எங்கள் வானகத் துணைவி எனக் கண்டுணர அருள்கூரும்.

செபம்

7. குரு: அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியின் பேரன்பு நம்மில் பற்றி எரியவும், கிறிஸ்து நம்மை நேசித்ததுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யவும் அன்பே உருவான இறைவனை வேண்டுவோம்.

(சிறிது நேர மௌன செபத்திற்குப்பின், குரு கைகளை விரித்து:)

ஆண்டவரே, இரக்கம் மிகுந்த இறைவா போற்றி. உம் திருமகனை எங்களுக்கு அன்பின் மாதிரியாகத் தந்தீர்; அவர் வழியாக அன்பின் கட்டளையை எங்களுக்குக் கற்பித்தீர்.

இந்த உம் அடியார்கள் சகோதரர் சகோதரிகளுக்குச் சேவை செய்ய மனத்தாராளமாகத் தம்மை அளித்துள்ளார்கள்; இவர்கள்மீது உமது ஆசியைப் பொழிந்தருளும். இவ்வாறு, இவர்கள் தேவை எழும்போது. முழுமனத்தோடும் தம் ஆற்றல் அனைத்தோடும் அயலாருக்காக உழைக்கவும், அதனால் உமக்கே பணிவிடை புரியவும் இவர்களுக்கு அருள்கூர்வீராக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

சடங்கின் முடிவு

8. இப்பொழுது பொருத்தமான பாடலைப் பாடலாம்.

பல்லவி : நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு கொண்டிருந்தால் நீங்கள் என் சீடர்கள் என உலகம் அறிந்துகொள்ளும், என்கிறார் ஆண்டவர்.

(அல்லது)

பல்லவி : எங்கே அன்பு மெய்யானதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்.

கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் 
ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே. 
அவரில் அக்களித்திடுவோம் யாம். 
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே.

சீவிய தேவனுக்கு அஞ்சிடுவோம். 
அவருக்கு அன்பு செய்திடுவோம்: 
நேரிய உள்ளத் துடனே யாம் 
ஒருவரை ஒருவர் நேசிப்போம். (பல்லவி)

(அல்லது)

வேறு பொருத்தமான பாடல்.