நோயாளிகளைப் பராமரிப்போருக்கு ஆசியுரை

குறிப்பு : ‘பராமரிப்போர்" என்பது மருத்துவர், தாதியர் போன்று மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், நோயாளிகளைச் சந்தித்துப் பல்வேறு வகைகளில் உதவியும் ஆறுதலும் அளிப்பதை வழக்கமாகவோ சட்டமாகவோ கொண்டிருக்கும் தனியார் அல்லது குழுவினர் போன்றோரையும் இத்தகைய பணிபுரியும் மற்றவரையும் குறிப்பதாகும்.

செபம்

எங்கள் ஆண்டவரும் சகோதரருமாகிய இயேசுவே, நோயுற்றோர் மீது நீர் மிகுந்த அக்கறைகொண்டு அளவில்லாத உமது அன்பைக் காட்டினீர்: நோயாளிகளுக்கு உதவியும் உடல் நலமும் அளிக்கும் பணிக்குத் தங்களை அர்ப்பணம் செய்திருக்கும் இவர்களை ஆசீர்வதித்தருள உம்மை வேண்டுகிறோம். இப்பணியில் நீரே இவர்களை வழிநடத்தி, உமது அன்பில் மேன்மேலும் பங்குபெற இவர்களுக்கு அருள்வீராக. இவ்வுலகில் உமது தூய ஆவியின் அமைதியையும் மகிழ்ச்சியையும் விண்ணுலகில் முடிவில்லாப் பேரின்பத்தையும் உமது பரிசாக இவர்களுக்குத் தருவீராக. ஆண்டவராகிய இயேசுவே, உம்மை வாழ்த்துகிறோம். என்றென்றும் எங்கள் ஆண்டவர் நீரே.

எல்: ஆமென்.

(பின்னர் இ.ப.மு. பணியாளர் ஒவ்வொருவருக்கும் அவரவர் பணியைக் குறிக்கும் அடையாளம் ஒன்றை அளிப்பார். எ.கா. மருத்துவப் பணியாளருக்கு மருத்துவக் கருவி அல்லது நூல்; நோயாளிகளைச் சந்திப்போருக்குப் புதிய ஏற்பாடு அல்லது செபப்புத்தகம் - இதுபோன்று.)