குறிப்பு : பள்ளிக்கூடத்தின் தலைவாயிலுக்கருகில் சிறிய மேசைமேல் வெள்ளைத் துணி விரித்து, பள்ளிச்சுவரில் மாட்ட வேண்டிய சிலுவையையும், அதன் இருமருங்கிலும் எரியும் இரு மெழுகுத் திரிகளையும், மற்றும் தீர்த்தச் செம்பையும் வைத்திருக்கலாம்.
(அனைவரும் கூடி நிற்கக் குரு திருவுடை அணிகிறார். அப்பொழுது பொருத்தமான பாடல் பாடப்படும். இது தூய ஆவியின் பேரில் இருப்பது சிறப்பு.)
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: அன்பான சகோதரர்களே சகோதரிகளே, இப்பள்ளிக்கூடத்தை மந்திரித்துத் திறந்துவைக்கும் சடங்கில் நாம் தகுந்த விதமாய்ப் பங்குபெற இறையருளை வேண்டுவோம்.
(சிறிது நேரம் மௌன செபம்.)
குரு: எங்கள் வானகத் தந்தையே, நலன்களை எல்லாம் தருபவர் நீரே; உம்மைக் கெஞ்சி மன்றாடும் எங்களுக்கு இரங்கி, உமது ஏவுதலினால் நாங்கள் சரியானவற்றைக் கண்டறிந்து அவற்றை உமது பராமரிப்பினால் நிறைவேற்றுவோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
அருள்வாக்கு 1யோவா.4:7-11
அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகளை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா. 98: 1, 2, 4, 5, 6, 9
பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.
1. அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
2. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். - பல்லவி
3. உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
4. யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். – பல்லவி
5. ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி
6. ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி
நற்செய்தி லூக். 2:38-40, 52.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தபின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது. இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
(குரு சிறிய மறையுரை ஆற்றலாம்.)
பொது மன்றாட்டு
குரு: சகோதரரே, சகோதரிகளே, எல்லாம் வல்ல இறைவன் இந்தப் பள்ளிக்கூடத்தையும், இதன் ஆசிரியர், மாணவர் மற்றும் பணியாளரையும் நம் அனைவரையும் ஆதரித்துக் காத்தருளுமாறு இப்பொழுது வேண்டுவோம்.
1. அனைத்தையும் அறிந்து ஆளும் ஆதியே, ஞானமே உருவாகி, அன்பின் வழியாகப் போதிக்கும் உத்தம ஆசிரியராக உம் திருமகனை உலகிற்கு அருளினீர்; அவரைப் பின்பற்றி இப்பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் தங்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாலும், போதகத் திறமையாலும். மாணவரின் நலனையே கருதும் அன்பார்வத்தாலும் என்றும் நல்லாசிரியர்களாகத் திகழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. வானகத் தந்தையே, உம் திருமகன் இவ்வுலகில் சிறுவனாக இருந்தபோது, ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்து, நற்பண்புகளுக்கெல்லாம் முன்மாதிரியாக விளங்கத் திருவுளமானீர்; இப்பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர் (மாணவியர்) அனைவரும் அவரைப் பின்பற்றி, உள்ளத்திலும் உடலிலும் முழு வளர்ச்சி அடைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பே உருவான இறைவா, நாங்கள் உம்மை அறியவும், உமது திருவுளப்படி வாழ்ந்து உம்மிடம் வந்து சேரவும் உம் திருமகனையே எங்களுக்கு ஒளியாகவும் வழியாகவும் அளித்தீர்; இப்பள்ளிக்கூடம் உலக அறிவை மட்டுமல்ல, மறைப் போதனையையும் நல்லொழுக்கத்தையும் கற்பிக்கும் சிறந்த நிறுவனமாக அமைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அண்டினோரை ஆதரிக்கும் அருளாளா, மக்கள் தனித் தனியாக அல்ல, சமூகமாக வாழ்ந்து மீட்படைய உம் திருமகன் வழியாகத் திருச்சபையை நிறுவி அன்புக் கட்டளையைக் கற்பித்தீர்; இப்பள்ளிக்கூடம் திருச்சபைத் தலைவரின் ஆதரவும், பெற்றோரின் ஒத்துழைப்பும், அனைத்து மக்களின் உறுதுணையும் பெற்று, உயர்ந்தோங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. கருணைக் கடலாகிய கடவுளே, இப்பள்ளிக்கூடம் ……………. என்னும் பெயர் பெறத் திருவுளமானீர்; பாதுகாவலரான (தூய) …………. இன் பரிந்துரையால், இடர்கள் அனைத்திலுமிருந்து விடுபட்டுச் சிறப்புடன் செயல்பட்டு நல்ல புகழுடன் விளங்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
குரு: இறைவா, "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று உம் திருமகன் வாயிலாக உறுதியளித்தீர்; தாழ்மையான எங்கள் வேண்டுதலுக்கு இரங்கி, எங்களுக்கும் இப்பள்ளிக் கூடத்திற்கும் தேவையானவற்றையெல்லாம் அளித்தருள எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(பின்னர் குரு திருச்சிலுவையை ஆசீர்வதிக்கிறார்:)
எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, எங்கள் வேண்டுதலைக் கேட்டு இச்சிலுவையை ✠ ஆசீர்வதித்தருளும். திருச்சிலுவையில் நம்பிக்கை கொள்ளும் அனைவரையும் உமது பாதுகாவலில் வைத்துக் காத்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(இப்பொழுது, 'ஈசோப் புல்லினால்" என்னும் பல்லவி பாடப்படும். குரு சிலுவையின் மீதும் கட்டடத்தின் உள்ளும் புறமும் தீர்த்தம் தெளிக்கிறார். தூபமும் பயன்படுத்தலாம்.)
(பின்னர், சிலுவை அதற்குரிய இடத்தில் வைக்கப்படும். அப்பொழுது குரு சொல்வது:)
ஆண்டவரே, இந்த நிறுவனத்தின்மீது உமது மீட்பின் அடையாளம் நிலைத்திருப்பதாக. இதனால் தீயோனின் தாக்குதலிலிருந்து இதனைக் காத்தருள எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(தூய பாதுகாவலரின் சுரூபம் அல்லது படத்தையும் முறைப்படி மந்திரித்து வைக்கலாம்.)
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவா, இப்பள்ளிக்கூடத்தை ஆசீர்வதித்தருளும். இங்கு உடல் நலமும் நல்லொழுக்கமும் பெருகுவதால் உமது மகிமை குடிகொள்ளச் செய்யும். இங்குள்ள ஆசிரியரும் மாணவரும் (மாணவியரும்) தாழ்ச்சி, பொறுமை, சகோதர அன்பு, தூய்மை, சுறுசுறுப்பு போன்ற புண்ணியங்களில் சிறந்து, உமக்கு என்றும் பணிவுள்ள மக்களாகத் தத்தம் கடமைகளை முகமலர்ச்சியுடன் ஆற்றுவார்களாக. பொறுப்புணர்வுள்ள குடிமக்களும் உத்தம கிறிஸ்தவரும் உருவாகி வளர்ந்து முதிரும் நல்ல விளை நிலமாக இது என்றும் திகழ்வதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன், ✠ தந்தை, மகன், தூய ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்.
(நன்றிப்பாடல் ஒன்றைப் பாடலாம்)