குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
நற்செய்தி லூக். 4:16-22
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது :
'ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."
பின்னர் ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக் கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள் மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?”எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
குரு: மன்றாடுவோமாக:
ஞானத்தின் ஊற்றாகிய இறைவா, இந்த நூலகத்தின் (படிப்பகத்தின்) மீது உமது ஆவியைப் பொழிந்தருளும். இவ்வாறு உமது பாதுகாவலால் எவ்வித இடர்களுமின்றி இது நாளுக்கு நாள் வளர்ந்து நற்பயன் அளிப்பதாக. இதனைப் பயன்படுத்துவோர் அனைவரும் ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்து, உமது அன்பிலும் முதிர்ச்சி பெறுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)