மணவறையை மந்திரித்தல்

குரு: இவ்வீட்டிற்கும் வீட்டாருக்கும் அமைதி உண்டாவதாக. 

எல்: உமக்கும் அமைதி உண்டாவதாக.

குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு தோபி. 8:1, 4-8

தோபி, சாரா திருமணத்தில் உண்டு பருகி முடித்தபின் சாராவின் பெற்றோர் உறங்க விரும்பினர்; எனவே மணமகனைப் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றனர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், "அன்பே, எழுந்திரு, நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்" என்றார். சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாட்டைத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார் :

"எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி! உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. 'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்' என்று உரைத்தீர். இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக் கொள்வது இச்சையின் பொருட்டன்று. நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணை பிரியாது வாழச் செய்யும்" என்று வேண்டிக்கொண்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

(அருள்வாக்கு விளக்கம் தரலாம்.)

(சிறிது நேரம் மௌனம்)

குரு: மன்றாடுவோமாக: (இரு கரங்களை அல்லது வலக் கரத்தை நீட்டி) இறைவா, திருமண அருள்சாதனத்தைப் பெற்று இல்லற வாழ்வைத் தொடங்கும் இப்புதுத் தம்பதியரையும் இவர்களுக்காக ஏற்பாடாகியுள்ள இந்த மணவறையையும் ஆசீர்வதித்தருளும். இவர்கள் அன்பில் நிலைத்து நின்று, உமது திருவுளத்திற்கேற்ப அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உடல் நலம், உறவினரின் ஆதரவு, பொருள் வளம், மகப்பேறு போன்ற எல்லா நலன்களை பெறுவார்களாக. மேலும் விண்ணக மகிமைக்குத் தகுதி பெறுமாறு திருமறை மக்களாய் நீடு வாழ்வார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு தம்பதியர் மேலும் மணவறையிலும் தீர்த்தம் தெளிக்கிறார்.)