கிறீஸ்துவனானவன் அதிகாலமே எழுந்திருந்தவுடனே மிகுந்த பக்தியோடேயும் வணக்கத்தோடேயும் கைகுவித்து, முழங்காலிலே இருந்து ஏசு சர்வேசுரனைப் பார்த்துச் சொல்லத்தக்கதாவது:
தானாய், அநாதியுமாய், சரீரமில்லாதவருமாய், அளவில்லாத சகல நன்மைச் சுரூபியுமாய், ஞானத்தினாலேயும் பலத்தினாலேயும் காரணத்தினாலேயும் எங்கும் வியாபித்திருக்கிறவருமாய், எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமுமாய், யாவருக்கும் கதியுமாய், பொல்லாதவர்களை நரகத்திலே தள்ளி நல்லவர்களுக்கு மோட்சம் கொடுக்கிறவருமாகிய பிதாச் சுதன் இஸ்பிரீத்துசாந்து என்னும் மூன்றாட்களாயிருந்தாலும் ஒரே சர்வேசுரனாயிருக்கிற என் ஆண்டவரே, தேவரீர் மாத்திரம் மெய்யான தேவனாயிருக்கிறபடி யினாலே உமக்கு மாத்திரம் செய்யத்தக்க தேவாராதனை செய்கிறேன்.
இந்த வார்த்தைகளைச் சொல்லும்பொழுது மிகுந்த தாழ்ச்சியோடே சாஷ்டாங்கமாக விழுந்து முழுமனதோடே சர்வேசுரனை வணங்குகிறது.
அதின் பிறகு எழுந்திருந்து பரிசுத்த தேவமாதாவைப் பார்த்துச் சொல்லதக்கதாவது:
சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்ட புத்தி உடைத்தான வஸ்துக்களுக்குள்ளே மேலானவளாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயே, நீர் மோட்சவாசிகள் எனப்பட்ட யாவரையும் விட எண்ணப்படாத நன்மைகளினாலே அதிசயித்துச் சர்வலோகத் திற்கும் இராக்கினியாய் இருக்கிறதினாலேயும் எப்பொழுதும் பரிசுத்த கன்னியாயிருந்து மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனும் ஒன்றான சேசுநாதருக்குத் திவ்விய மாதா வாயிருக்கிறதினாலேயும் சகலமான அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் செய்யத்தக்க சாதாரண வணக்கத்தை விட உமக்கு மாத்திரமே விசேஷ வணக்கம் செய்கிறேன்.
இந்த வார்த்தைகளைச் சொல்லும்பொழுது மிகுந்த தாழ்ச்சியோடே முழந்தாளிட்டு நெற்றித் தரையில் பட நமஸ்காரம் செய்கிறது.
அதன்பின்பு எழுந்திருந்து காவலாயிருக்கிற சம்மனசான வரையும், பரம தூதர்களையும், சகலமான அர்ச்சியசிஷ்டவர்களையும் குறித்துச் சொல்லத் தக்கதாவது:
சகல மோட்சவாசிகளே, சர்வேசுரனைப் நேர்முகத்தரி சனமாய்த் தரிசித்துக்கொண்டு ஆண்டவருக்கு உகந்தவர்களாய் இருக்கிறபடியினாலேயும், நன்மையிலே நிலைகொண்டவர்களாய் இருக்கிறபடியினாலேயும் உங்களுடைய வேண்டுதல் மன்றாட்டு களினாலே சர்வேசுரன் உங்களைக்கொண்டு எங்களுக்கு அநேக சகாய உபகாரங்களைச் செய்துகொண்டு வருகிறதினாலேயும் திருச் சபை கட்டளையிட்டபடி உங்களுக்கு வணக்கம் செய்கிறேன்.
இந்த வார்த்தைகளைச் சொல்லும்பொழுது மிகுந்த தாழ்ச்சியோடே தலைகுனிந்து முழந்தாளிட வேண்டியது.
இப்படிப்பட்ட ஆராதனைகள் எல்லாம் முடிந்தபிற்பாடு சுவாமியைப் பார்த்துச் சொல்லத்தக்கதாவது:
சர்வேசுரா சுவாமீ, தேவரீர் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் ஒன்றுமில்லாதிருக்கையிலே உண்டாக்கி இந்த ஆத்துமமும் சரீரமும் பிழைக்கிறதற்கு எண்ணப்படாத நன்மை களைத் தந்தருளினதினாலே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவது.
மேலும் தேவரீர் இந்தப் பூலோகத்திலே எனக்காக வந்து மனுஷாவதாரம் செய்து பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்ததினாலே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாககக்கடவது.
மேலும் உம்முடைய திரு மரணத்தினாலே வந்த அள வில்லாத பலனை ஞானஸ்நானத்தின் வழியாகக் கொடுத் தருளினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு நான் அநேக முறை பாவங் களைச் செய்திருக்க அந்தப் பாவங்களை எல்லாம் பாவசங்கீர்த்தன முகாந்தரமாகப் பொறுத்துத் தெய்வீக போசனமாகிய நற்கருணையும் கொடுத்து, காவலாயிருக்கிற சம்மனசானவரையும் கட்டளையிட்டு இவை முதலான எண்ணிக்கைக்குள் அடங்காத சகாய உபகாரங்களைச் செய்துகொண்டு வருகிறதினாலேயும், விசேஷமாய் இந்த இராத்திரி காலத்திலே என் ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் யாதொரு பொல்லாப்பில்லாமல் காத்து இரட்சித் ததினாலேயும் என்னால் கூடிய மட்டும் நன்றியறிந்த மனதோடே தேவரீரை வணங்கித் தோத்திரம் செய்கிறேன். சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
அதற்குப்பின் தன்னை முழுதுஞ் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கிற வகையாவது:
சர்வலோகத்திற்கும் ஆண்டவரே, தேவரீர் என் சரீரத்தையும், ஐம்புலன்களையும், அவைகளிலே உண்டான தத்துவங்களையும், என் ஆத்துமத்தையும், அதிலுள்ள புத்தி நினைவு மனதென்கிற மூன்று புலன்களாகிய உள்ளிந் திரியங்களையும் எனக்குக் கொடுத் தருளினீரே; இவையெல்லாம் தேவரீருக்குப் பிரியமாயிருக்கிறதற்குச் சேசுநாதர் செய்த புண்ணியங்களோடேயும், சகல அர்ச்சியசிஷ்ட வர்களுடைய தேவ வசீகரமென்னும் காணிக்கைகளோடேயும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறேன். ஆனபடியினாலே இப்போது துவக்கி மரணம் வரைக்கும் நான் செய்யும் தரும காரியங்கள் எல்லாவற்றையும் தேவரீருக்குத், தோத்திரமாக ஒப்புக் கொடுக்கிறேன்.
அதற்குமேல் சர்வேசுரனுடைய அநுக்கிரகத்தைக் கேட்கிற வகையாவது;
சர்வேசுரா சுவாமீ, தேவரீருக்கு அளவில்லாத பலமும், மட்டில்லாத ஞானமும், அளவறுக்கப்படாத கிருபாகடாக்ஷமும் உண்டாயிருக்கிறபடியினாலே சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து அடியேனுக்கும் திருச்சபைக்கும் சகலமான சனங்களுக்கும் வேண்டிய சகாயங்களைச் செய்கிறதுமல்லாமல் விசேஷமாய் நான் இன்று பாவங்களைச் செய்யாமல் புண்ணிய வழியிலே சுமுத்திரையாய் நடக்கத்தக்கதாகவும் எனக்கு அநுக்கிரகம் பண்ணியருளுஞ் சுவாமீ.
இந்தச் செபம் முடிந்தவுடனே பத்தியோடே கர்த்தர் கற்பித்த செபமும், மங்கள வார்த்தை செபமும், விசுவாச மந்திரமும் சொல்லுகிறது.