நீதியுடைத்தான சர்வேசுரா! தேவரீருடைய மட்டற்ற நீதியைக் கண்டு புண்ணியவான்கள் முதலாய்ப் பயந்து நடுநடுங்கு கிறார்கள். எண்ணிக்கையில்லாத பாவங்களையும் தோஷ துரோகங் களையும் கட்டிக் கொண்ட பாவியாகிய நான் என்ன சொல்லப் போகிறேன்? இவ்வளவான கடன்களைச் செலுத்த என்ன செய்வேன்! சாகப் போகிறவன் என்னத் தவம் செய்வான்? ஐயையோ! உம்முடைய நீதியுள்ள தீர்வைக்கு எப்படித் தப்புவேன்? நீங்கள் மற்றவர்களைப் பொறுப்பீர்களேயாகில், நாமும் உங்களைப் பொறுத்துக் கொள்ளுவோமென்று வார்த்தைப்பாடு கொடுத்தீரே. இதோ அடியேனுக்கு யாராவது பொல்லாப்புச் செய்திருந்தால், அதை முழு மனதோடு பொறுத்துக் கொள்ளுகிறேன். அடியேனுக்குப் பொல்லாப்புச் செய்தவர்களைத் தேவரீரும் பொறுத்து ஆசீர்வதித்து வேண்டிய நன்மைகளை அளித்துத் தேவரீரிடத்தில் சேர்த்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். தயாளமுள்ள கர்த்தாவே, என் பாவங்களைப் பொறுத்தருளும். அடியேனை உமது திருச் சந்நிதியிலிருந்து அகற்றாதேயும். என்னை மோட்ச இராச்சியத்துக்கு வர வழைத்தருளும்.