எங்களைக் காப்பாற்றி இரட்சிக்கவந்த ஆராதனைக்குரிய எங்கள் ஆண்டவரே! இதோ உம்மிடத்தில் சந்தோஷப்பட்டு, உம்மை ஸ்தோத்தரித்து, உமது சமூகத்தில் சங்கீதங்களைப் பாடி, உமது மகிமைப் பிரதாபத்தைக் கொண்டாடி வணங்கி நமஸ்கரிக்க, உமது சந்நிதியில் மகா பயபக்தியோடு வந்திருக்கிறோம். பரமண்டலங்கள் ஆச்சரியப்பட அவ்விடத்தின் தூதர்கள் வந்து உந்நத ஸ்துதிகளைப் பாட, இரட்சணியத்தின் பாக்கியத்தைப் பெறுகிற நாங்கள் எங்கள் இராசாவாகிய தேவரீரைக் கொண்டாடி, எங்கள் இருதய மகிழ்ச்சியோடு கரங்களைக் குவித்து வாய் நிறைய உமது புகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டு உம்மை ஆராதிக்கிறோம். பிதாவினிடத்தில் நித்தியத்திலிருந்து கால ஓட்டப்படி பரிசுத்தக்கன்னிகையிடமிருந்து பிறந்து எங்களை மீட்க வந்த அருமையான தேவனே, உம்மை ஆவலோடு வணங்கு கிறோம். எங்கள் தேவனால் படைக்கப்பட்ட வானமே, அணியணி யான நட்சத்திரங்களே, பூமியே, சமுத்திரங்களே, பிதாவினிடத்தில் நித்தியமாய் உதித்துக் கால ஓட்டப்படி ஒரு பரிசுத்தக் கன்னிகையிடமிருந்து எங்களை மீட்பதற்காகப் பிறந்த எங்கள் நாதரைப் புகழ எங்களுடன் வாருங்கள். சுபாவத்தின் ஆழத்தையும் விரிவையும் செய்து இருளில் இருந்து பிரகாசத்தை வரப்பண்ணும் தேவனே, உலகத்தை இரட்சிக்க வந்த மகேஸ்வரரே, வருஷத்தின் சக்கரம் சுற்றிவந்து மகிழ்ச்சிக்குரிய எங்கள் மீட்பின் நாளைக் கொண்டு வந்ததினால் இரவோடும், பகலோடும், அருபிகளோடும், உரூபிகளோடும் உலகத்தின் சகல படைப்புகளோடும் நாங்கள் உம்மை வணங்கி ஆராதிக்கிறோம். தாங்கப் படாத ஆசை பக்திகொண்டு கைகட்டி வாய் புதைத்துப் புத்தியின் பிரமிப்பை அடக்கிக் கொண்டு மனங்கொண்ட பூரிப்போடு தூதர்கள், அதிதூதர்கள் முதலிய சகல சம்மனசு களோடும், இடையர்கள், மூன்றரசர்கள் முதலியவர்ளோடும் உமது பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து உம்மை ஆயிரமாயிரம் முறை கும்பிடுகிறோம். மகா உந்நத சர்வேசுரா, மகத்துவம் பொருந்திய சமாதான இராசாவே, தூர இருக்கிற வஸ்துக்களை நெருக்கிக் காட்டுங் கண்ணாடியொப்ப வானலோக காரியங்களைக் கீழே இழுத்துக் காட்டவந்த மதுரம் பொருந்திய மீட்பரே, பிதாவின் பிரகாசத்தைக்காட்டும் நீதியாதித்தனே, எங்கள் மன்றாட்டுக்குச் செவிகொடுத்து நாங்கள் கேட்கிறதைத் தந்தருளும். சூரியனானது ஒரு எல்லையிலிருந்து புறப்பட்டு மறு எல்லைமட்டும் மகா கம்பீரமாய் எழுந்தருளிப் போவதுபோல, தேவரீர் சோதிப் பிரகாச வடிவாய்த் தாழ்ச்சியை அணிந்துகொண்டு, கர்வத்தால் கெட்ட மானிடக் குலத்தைச் சீர்ப்படுத்த வந்தமையால் புதுப் பாட்டு களையும் கீர்த்தனைகளையும், சங்கீதங்களையும் பாடி உம்மை ஸ்துதிக்கிறோம். கிறீஸ்துநாதரே, எங்களுக்காகவே பிறந்திருக்கிறீர். ஆ தேவ குமாரரே! நித்திய மகிமை அளிப்பவரே உண்மையும் வழியும் சீவனுமாய் இருப்பவரே, நீதிப்பிரகாரம் பிரஜைகளுக்குத் தீர்வையிட்டு எளியவர்களை ஆதரியும் ஓ மகா தீர்க்கதரிசியே! அபிஷேகம் செய்யப்பட்ட இராசாவே, சீவியத்தின் அப்பமே, உமது நாமம் எங்களில் அக்களிப்போடு வாழ்த்தப்படுவதாக. பூமியிலிருந்து உண்மை புறப்பட்டது, வானத்திலிருந்து நீதி வந்ததென்கிற வாக்கியம் நிறைவேறட்டும். உலக முழுவதிலும் உம்மால் சந்தோஷ முண்டாயிற்று. நீர் பரலோகத்திலிருந்து இறங்கினமையால் வானமும் பூமியும் கடலும் உம்மை வாழ்த்தக்கடவன. அல்பா ஓமேகா எனப்படும் ஆதியந்தமில்லாத மகா ஈஸ்வரரே, எங்கள் சங்கீதங்களுக்குச் செவிகொடும். இனி மனிதன் நாவு மவுனமாய் இருக்க இடமில்லை. வானத்திலிருந்து இறங்கிய விருந்தாடியே, வானத்தைத் தவத்தால் நிரப்ப வந்த சுந்தர இராயரே, உலகத்திற்கு நியாயம் கேட்கிறவரே, எங்கள் துன்பத்தை நீக்கி உச்சித வரங்களைத் தந்து உயர்ந்த மோட்ச பதவி அடையச்செய்தருளும். முதல் ஆதாமின் அகந்தை, இரண்டாம் ஆதாமின் தாழ்ச்சியால் அடிபட்டது. சர்வலோகத்தையும் கையிலேந்தி ஆட்டிவைக்கும் கடவுளே, அணைகடந்த எங்கள் தின்மைகளுக்கு உபசாந்தியே, என் வேண்டுதல்களைக் கேட்டருளும். நாங்கள் உமது இரகசிய வழியில் வந்து அமைய வேண்டிய வரங்களைத் தாரும். ஆ பெத்தலேமே! நீ எம்மாத்திரம் உயர்ந்திருக்கிறாய்! சீயோன் குமாரத்திகளே, உங்களுக்கு எம்மாத்திரம் ஆறுதல். ஆ எம்மானுவேலே! எங்களில் இருக்க வந்த நாதனே, மெசியா எனப்படும் இரட்சகரே, அருட்சுனையே, அறிவின் கடலே, நாங்கள் பாசங்களிலிருந்து நீங்கினவர்களாகி சுத்தப் பிரகாசத்தைக் கொள்ளச் செய்யும். ஆ எங்கள் அதிபதியே! இந்தக் காலத்தில் நாங்கள் மணிகளை அடித்துப் பூக்களைப் புனைந்து பீடங்களைச் சிங்காரித்து எங்கள் குறைகளைச் சொல்லிக்கொண்டு உமது காலில் விழுந்து கும்பிடுகிறோம். உமது திருக்கையால் எங்களை ஆசீர்வதித்து நாங்கள் உடல், புவி, பேயை வென்று புண்ணியங் களில் கதித்து உமது இராச்சியத்தில் வந்து சேரச் செய்தருளும். ஆமென்.