குழியில் வைக்குமுன் செபம்

சுவாமீ! தேவரீர் நரக வாதனையிலேயும் சகல உபத்திரவங்களிலேயுமிருந்து, உம்முடைய அடியானாகிய இவர் ஆத்துமத்தை இரட்சித்தருளும் சுவாமீ. 

சுவாமீ! தேவரீர் ஏனோக் எலியாஸ் என்பவர்களைச் சாதாரணமான உலக சாவிலிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! நோயனைச் சலப்பிரளயத்திலிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! தேவரீர் அபிரகாமென்பவரை ஊரென்கிற பட்டணத்தின் அக்கியானத்திலிருந்து இரட்சித்தது போல இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! ஈசாக்கென்பவரை தன் தகப்பன் கையால் பலியாகிறதிலிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! தேவரீர் ஜோபென்பவரைத் தரித்திரத்திலும் துன்பத்திலுமிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி. 

சுவாமீ! தேவரீர் சோதோமென்கிற பட்டணத்திலும் அந்தப் பட்டணத்தைச் சுட்டெரித்த அக்கினியிலுமிருந்து லோத் என்பவரை இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! தேவரீர் எஜிப்து என்கிற தேசத்தின் இராசனான பாரவோனிடத்திலிருந்து மோயீசனை இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! தேவரீர் தாவீதென்கிறவரைக் கோலியாத்தென்கிற இராட்சதன் கையிலும், சவுல் என்கிற இராசன் கையிலுமிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! தேவரீர் தானியேல் என்பவரைச் சிங்கங்களின் கெபியிலிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! தேவரீர் இரக்கமற்ற நபூக்கன் கையிலும் அவன் சூளைத் தீயிலுமிருந்து மூன்று வாலரை இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் சுசானாள் என்கிற புண்ணியவதியை அவதூறிலிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி. 

சுவாமீ! தேவரீர் அர்ச். இராயப்பரையும், சின்னப்பரையும் சிறைக்கூடத்திலும், விலங்கிலுமிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமீ! கன்னியாஸ்திரியும் வேதசாட்சியுமாகிய தேக்கிலாள் என்பவளை மகா நிஷ்டூர ஆக்கினைகளிலிருந்து இரட்சித்தது போல, இவர் ஆத்துமத்தையும் இரட்சித்தருளும் சுவாமி.

தேவரீருடைய அடியானாகிய இவர் ஆத்துமத்தையும் இரட்சித்து உமது மோட்ச இராச்சியத்தின் செல்வ பாக்கியங் களுக்கும், நித்தியானந்த சந்தோஷத்துக்கும் பங்காளியாயிருக்கக் கிருபை செய்தருளும், ஆமென்.

சுவாமீ கிருபையாயிரும் - மற்றதும் - ஒரு பர 

சுவாமீ, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

சுவாமீ எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமீ! இரக்கம் புரிகிறதும், பொறுத்தல் அளிக்கிறதும் எப்பொழுதும் உமது திருவுளத்தியல்பாமே. ஆதலால், இன்று இவ்வுலகத்தினின்று அழைக்கத் தேவரீர் திருவுளமான இந்த அடியானுடைய ஆத்துமத்தைச் சத்துருக்களின் வசம் அளிக்காமலும், கடைசி பரியந்தம் அதைக்கைவிடாமலும் இருக்க உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவரீரை அத்தியந்த விசுவாசத்தோடு நம்பியிருக்கிறபடியால் இந்த ஆத்துமம் பாதாள வாதனை அனுபவியாமல் நித்திய ஆனந்தத்தை அடையும்படி பரிசுத்த தூதர் அதைக் கைப்பற்றிக்கொண்டுபோய் பரகதியாகிய நித்திய பேரின்ப நாட்டில் சேர்த்தருளக் கட்டளையிட்டருளும் சுவாமீ. இந்த மன்றாட்டுகளை எல்லாம் சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும். ஆமென்.