எல்லாக் காரியங்களையும் சகல வியாபகராயிருந்து நடத்துகிற சர்வேசுரா! நீர் நான் விதவையாயிருக்கச் சித்தமானீரே! நான் எல்லாத் துன்பங்களையும் பொறுமையோடு அனுபவிக்கவும், அவைகளின் பலனையும், பிரயோசனத்தையும் கிறீஸ்துநாதர் மறைக்குத் தக்கவாறு யூகித்து பயன்படுத்தவும் எனக்கு அருள்புரியும். மெய்யான விதவையாயிருந்து உலகத்தை வெறுத்துத் தள்ளி, உம்மிடத்தில் என் நம்பிக்கையெல்லாம் வைக்கவும், பாக்கியமுள்ள சீவியத்துக்கு உதவுகிற நற்காலத்தை விருத்தி செய்யவும் எனக்குக் கிருபைபுரியும். அன்றியும், நீர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தை நான் நன்றாய்ப் பிரயோகிக்கவும், நான் இந்தப் பரதேசத்தில் வசிக்கும்போதே உமது இரக்கத்தைத் தேடிக்கொள்ளவும், நான் ஆவலோடு தேடித்திரிகிற நித்திய மோட்ச ஆனந்த பாக்கியத்துக்கு என்னைப் பங்காளி ஆக்கிக்கொள்ளவும், என் காலத்தைப் பக்தியிலும், சிநேகத்திலும், தேவ ஊழியத்திலும் செலவழிக்கவும் எனக்கு வரமளித்தருளும். பூலோக விழலான காரியங்களை வெறுத்துத் தள்ளி, நான் முன் செய்த பாவங்களையும், மூடத்தனத்தையும், ஊதாரிச் செலவையும் பரிகாரம் செய்து, இதுவரைக்கும் பூலோக காரியத்திலும், சோம்பேறித்தனத்திலும், கேடான முயற்சியிலும் நாள் கழித்ததற்குப் பதிலாக, இனிமேல் ஒழிவான நேரத்தை செபத்திலும், நற்கிருத்தியங்களிலும் செலவழிப்பேன். என் பாவத்தால் காயப்பட்டதற்குப் பிராயச்சித்தமாக என்னை நானே தண்டித்துக் கொண்டு, என்னுடைய முயற்சிகளை யெல்லாம் நித்திய சீவியத்துக்கு வழிப்படுத்த நான் கற்றுக்கொள்வேன். நான் என் காலத்தை வீணில் செலவழித்ததினால் அடைந்த நஷ்டத்தை நிவர்த்தி செய்யவும், உலக ஆறுதலைவிட நான் உம்மிடத்தில் அதிக ஆறுதலடையவும், உம்முடைய வரப்பிரசாதத்தால் என்னுடைய பலவீனங்களை எல்லாம் போக்கிக்கொள்ளவும் எனக்கு அநுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.