961 புனித அந்தோனியார் திருத்தலம், கல்லிடைக்குறிச்சி

          


புனித அந்தோனியார் திருத்தலம்

இடம்: கல்லிடைக்குறிச்சி, அம்பை தாலுகா, 627416

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: அம்பாசமுத்திரம்

நிலை: திருத்தலம் (பங்குத்தளம்)

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், மாஞ்சோலை

2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஊத்து

3. கிறிஸ்து அரசர் ஆலயம், நாலுமுக்கு

4. தூய நல்லாசோனை மாதா ஆலயம், செங்குளம்

5. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், பொட்டல்

6. குழந்தை இயேசு ஆலயம், மணிமுத்தாறு

7. புனித பாத்திமா அன்னை ஆலயம், காக்காச்சி

பங்குத்தந்தை அருட்பணி. சூ. அருள் அந்தோணி

Mobile number: +91 76390 53376

குடும்பங்கள்: 105

அன்பியங்கள்: 5

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 09:00 மணி

திங்கள், புதன், வியாழன், சனி திருப்பலி காலை 05:30 மணி

வெள்ளி திருப்பலி மாலை 06:30 மணி 

செவ்வாய் காலை 11:00 மணி செபமாலை, 11:30 மணி நற்கருணை வழிபாடு, நண்பகல் 12:00 மணி திருப்பலி, மதியம் 01:30 மணி அளவில் அசன விருந்து. மாலை 06:30 மணி செபமாலை நற்கருணை வழிபாடு, மாலை 07:00 மணி திருப்பலி

தமிழ் மாத கடைசி செவ்வாய் திருப்பலி மற்றும் குணமளிக்கும் எண்ணெய் பூசுதல். ஆங்கில மாத முதல் செவ்வாய் ஆசீர்வாத ரோஜா மலர் வழங்குதல்

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றம். செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி திருவிழா

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. D. பவுல் ராஜ், USA

2. திருத்தொண்டர். ஜோசப் ஆன்ட்ரூ, JDH

3. அருட்சகோதரி. A. அற்புத லில்லி, JMJ 

வழித்தடம்: திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் வழி கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்.

Location map: St. Antony's Shrine

https://maps.app.goo.gl/ZUeMaEff3icyVyuN6

வரலாறு:

நெல்லை மாவட்டம் புளியம்பட்டி மற்றும் உவரி திருத்தலங்களுக்குப் பிறகு மக்கள் விரும்பிச் செல்லும் புனித தலங்களுள் கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்துக்கு வருவோர் கேட்டவரம் தரும் கோடி அற்புதரிடம் கோரிக்கையை வைத்து வீட்டு நிம்மதியாக இல்லம் திரும்பலாம். அதனால்தான் ஆலய முகப்பில் 'நம்புங்கள் செபியுங்கள் நல்லதே நடக்கும்' என்ற வாசகம் எழுதப் பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் மிக முக்கிய கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்று, கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருந்தலம். இந்த ஆலயத்தின் சிறப்பே அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வதுதான். எனவேதான் பாளை மறைமாவட்டத்தின் மிக முக்கிய 8 திருத்தலங்களில் இந்த திருத்தலமும் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. பரணி பாயும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள அழகிய நகரமான கல்லிடைக்குறிச்சியில் உள்ள மிகவும் பழைமைவாய்ந்த இந்த திருத்தலம், 1938ம் ஆண்டு வரை ஓட்டு அறையில் செயல்பட்டு வந்தது. இக்காலக்கட்டத்தில் தான் ஆலயத்திற்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் பங்குத்தந்தையாக அருட்பணி. அமல்ராஜ் அடிகளார் பணிபுரிந்தார். அவருக்கு உதவியாக சூசையாப்பிள்ளை என்பவர் பணியாற்றினார். கடந்த 1938 முதல் 1947 வரை வீரவநல்லூர் பங்குத்தந்தையாக ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த அருட்பணி. யுவன்னத் அடிகளார் பணிபுரிந்தார். அக்கால கட்டத்தில் கிளை பங்காக கல்லிடைக்குறிச்சி திருத்தலம் செயல்பட்டு வந்தது. 

சிறிய கிளைப்பங்காக இருந்தாலும், இந்த ஆலயத்தில் அதிகளவில் நோயாளிகள் வந்து 13 நாட்கள் தங்கியிருந்து, ஆலயத்தின் எதிர்புறம் உள்ள புனித கிணற்றில் குளித்து, நம்பிக்கையுடன் வேண்டி தங்கள் நோய் குணமாகி இல்லம் திரும்பியுள்ளனர். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இந்த ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய நிர்வாகம் கல்லிடைக்குறிச்சி திரு. சந்தானம் அவர்களால் நிர்வகிக்கப்பட்டது. இவர் நிர்வாகஸ்தராக இருந்த சமயத்தில்தான் ஆலயத்தில் திவ்விய நற்கருணை ஸ்தாபிக்கப்பட்டது. பிச்சையா பிள்ளை என்பவர் இரவு செபத்தை நாள்தோறும் செய்து வந்தார். இக்காலக்கட்டத்தில் திரு. சந்தானம் அவர்களின் முயற்சியால் ஆலய திருவிழாவும் நடத்தப்பட்டது. 

அருட்பணியாளர்கள் ஜோசப் பர்னாந்து அடிகளார், ஸ்டீபன் அடிகளார், தொடர்ந்து மைக்கேல் அடிகளார் என வீரவநல்லூர் பங்குதந்தையர்கள் அவரவர் சுய முயற்சியால் ஆலய விரிவாக்கத்திலும், வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டினார்கள். அருட்பணி. டி. ஏ. மைக்கேல் அடிகளாரின் (1958-1969) காலக்கட்டத்தில் தான் திருத்தல தலைவாசல் பெரிதாக்கப்பட்டு, திருயாத்திரை வருகிறவர்கள் தங்கிட வசதியாக, அறைகள் உருவாக்கப்பட்டன. இடைப்பட்ட காலக்கட்டத்தில் சந்தானம் பிள்ளை மறைந்து நிர்வாகம் அவரது மகன் ஜோதி மரியசூசை நிர்வாக பொறுப்பேற்றார். இவரது நிர்வாகத்தில் ஆண்டுதோறும் ஆலய திருவிழா 13 நாட்கள் 1964 முதல் 1980 வரை கொண்டாடப்பட்டது. அத்திருவிழா நிகழ்வுகள் இன்று வரை தொடர்கிறது.

இத்திருத்தலத்தில் அருட்பணி. தம்புராஜ் அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றியபோது, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நோயாளிகளுக்காக செபம் செய்யப்பட்டது. இவரது பணிக்காலத்தில் தான் ஆலயம் சிறப்பாக பேசப்பட்டது. திருத்தல பெருமைகளை வெளி உலகிற்கு கொண்டு சென்றவர் தம்புராஜ் அடிகளார் தான் என்றால் அது மிகையாகாது. இவரது பணிக்காலத்தில் தற்போதைய காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு, இவருக்கு பின் வந்த அருட்பணி. பாஸ்கர் டி. சில்வா என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இவருக்குப்பின் வந்த அருட்பணி. வாலண்டியன் அடிகளார் காலத்தில் ஒவ்வொரு புதன்கிழமையிலும் காலை திருப்பலி நடத்தப்பட்டது.

1973 பாளை மறைமாவட்டம் தொடங்கப்பட்டு, அதன் முதல் ஆயராக இருதயராஜ் ஆண்டகை பணிப்பொறுப்பேற்றார். அதன் நினைவாக இந்த ஆலயத்தில் புனித அந்தோனியாரின் கெபி அமைக்கப்பட்டது. 1983ல் புனித ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டு, அதனை இருதயராஜ் ஆண்டகை அர்ச்சித்து திறந்து வைத்தார். 1986 முதல் 1991 வரை பணிபுரிந்த அருட்பணி. ஏரோணிமுஸ் அடிகளார் காலத்தில், பழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு, தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணி. அருள்ராஜ் அடிகளார் காலத்தில், புதிய ஆலயம் அர்ச்சிப்பு மேதகு ஆயர் இருதயராஜ் ஆண்டகையால் 03.09.1991 அன்று நடைபெற்றது.

இத்திருத்தலத்தில் உள்ள மணிக்கூண்டு மற்றும் திருயாத்திரைகாரர்கள் சமையல் செய்ய சமையலறை, புனிதரின் புனித எண்ணெய் மற்றும் மெழுகுவர்த்திகள் வாங்க டிப்போ ஆகியவை அருட்பணி. அமிர்தராச சுந்தர் அடிகளாரால் (1995-1999) கட்டப்பட்டன. மணிக்கூண்டில் அமலோற்பவ மாதா சொரூபமும், புனித மிக்கேல் அதிதூதர் சொரூபமும், அந்தோணிசாமி அடிகளரால் கட்டப்பட்டு, மேதகு ஜூடு பால்ராஜ் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. திருத்தலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக கத்தோலிக்க சேவா சங்கம் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

பிற்காலத்தில் அருள்ராஜ் E அடிகளார், ஜெர்ரி அடிகளார், அமிர்தராச சுந்தர் அடிகளார், அந்தோனிசாமி அடிகளார். லூர்துராஜ் அடிகளார், பாக்கியச்செல்வன் அடிகளார் என வீரவநல்லூர் பங்குதந்தையர்கள் அனைவருமே இத்திருத்தல வளர்ச்சியில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள். 2004ல் பாக்கியச்செல்வன் அடிகளார்

வீரவநல்லூர் பங்குத்தந்தையாக இருந்த காலக்கட்டத்தில் இத்திருத்தலத்தில் அன்பியங்கள் தொடங்கப்பட்டு, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பிரதிமாதம் ஒருமுறை தியானம் நடைபெறுகிறது.

2001 ஆம் ஆண்டு மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களால் கல்லிடைக்குறிச்சி திருத்தலமாக உயர்த்தப்பட்டது.

வீரவநல்லுார் பங்கில் இருந்து பிரிந்து 29.05.2007 அன்று கல்லிடைக்குறிச்சி புதிய பங்காக அறிவிக்கப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. I. லூர்து ராஜ் அடிகளார் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலக்கட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் குணமளிக்கும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக கடைசி செவ்வாய்க்கிழமைகளில்

பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இரண்டாவது பங்குத்தந்தையாக ரெக்ஸ் அடிகளார் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். 3வது பங்குதந்தையாக பாக்கியச்செல்வன் அடிகளார் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது பங்கின் 4வது பங்குத்தந்தையாக அருட்பணி. அருள் அந்தோனி பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். அருட்பணி. பாக்கியச்செல்வன் அடிகளார் பணிக்காலத்தின் இறுதியில் ஆலய முகப்பில் பிரமாண்டமான கெபி உருவாக்கப்பட்டு, மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் ஆலயம் அருகில் லூர்து அன்னைக்கு கெபி உருவாக்கப்பட்டு, பிரதி மாதம் முதல் சனி திருப்பலி நடைபெறுகிறது.

கேட்பவர்களுக்கு வரங்களை அள்ளித்தரும் கோடி அற்புதரைக் காண பிரதி செவ்வாய்தோறும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணியில் புனிதரின் திருவிழா சிறப்பாக 13 நாட்கள் கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற உவரி மற்றும் புளியம்பட்டி புனித அந்தோனியாரின் திருத்தல வரிசையில், கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியாரின் திருத்தலமும் புகழ் பெற்று விளங்குகிறது. கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தரும் கோடி அற்புதர் புனித அந்தோனியார், காணாமல் போன பொருட்களை மீட்டுத் தருபவர். திருக்குழந்தை இயேசுவை கைகளில் ஏந்த வரம் பெற்றவர். நன்னாக்கு அழியாத அற்புதர். இத்தகைய வல்லமை நிரம்பிய புனிதரின் திருத்தலம் வந்து, ஏராளமான இறைமக்கள் ஆராதனை செய்து, வழிபட்டு வருகின்றனர்.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள்:

திருவழிபாட்டுக் குழு

கத்தோலிக்க சேவா சங்கம்

புனித வின்சென்ட் தே பவுல் சபை

மரியாயின் சேனை

செசிலி பாடகர் குழு

பீடச்சிறார்

துறவறம் இல்லம்:

திருக்குடும்ப அவை அருட்சகோதரிகள்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. I. லூர்து ராஜ்

2. அருட்பணி. ரெக்ஸ் ஜஸ்டின்

3. அருட்பணி. பாக்கியச்செல்வன் 

4. அருட்பணி. அருள் அந்தோணி (தற்போது...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. அருள் அந்தோணி அவர்களின் வழிகாட்டலில், அருட்சகோதரர் ஆனந்த் அவர்கள்.