நன்மைக் கடலுமாய் நம்பினவருக்கு ஆதாரமுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, சிருஷ்டிக்கப்பட்ட சர்வ பொருட்களுக்கும் மேலான சகல சுகிர்தங்களினாலே நீர் நிறைந்தலங்கரிக்கப் பட்டவளாகையால் பரலோகத்திற்கு எழுந்தருளியவுடனே சகல அர்ச்சியசிஷ்டவர்களையும் விட அதிகமான மோட்ச சம்பாவனைப் பெற்று, அர்ச். தமதிரித்துவத்தினால் வானோர்களுக்கெல்லாம் இராக்கினியாகக் கிரீடம் தரிக்கப்பட்டு, சம்மனசுக்கள் மோட்ச வாசிகள் எல்லோருக்கும் மேலாக உயர்த்தி ஸ்தாபிக்கப்பட்டு, நித்திய பேரின்ப வாழ்வு நிறைந்த மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்து நீர் அனுபவிக்கிற மோட்சானந்த பாக்கியத்தில் ஓர் அற்ப பங்கு பாவிகளாயிருக்கிற அடியோர்களும் பெறத்தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும். - பத்து அருள். ஒரு திரி.
அப்போஸ்தலராயிருக்கிற அர்ச். அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிராத்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.