லூர்து நகர் திருக்காட்சி

பெர்னதெத் சூபிரூஸ், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1844 ஜனவரி 7ந்தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே இயேசு கிறிஸ்துவின் மீதும், மாதாவின் மேலும் பக்தியுள்ள கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு ஆலையில் வேலை செய்து வந்தார். பெர்னதெத் தனது நேரத்தை பெற்றோருக்கு பயனுள்ள விதத்தில் செலவழித்தார்.

இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858 பிப்ரவரி 11ந்தேதி இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார். மாதா ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும் முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒருசெபமாலை வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.

பெர்னதெத் அன்னையின் முதல் காட்சியைக் கண்டபோது, மாதா அவரை மேலும் சில நாட்கள் அதே இடத்திற்கு வரச் சொன்னார். மாதாவின் வார்த்தைகளை ஏற்று, பெர்னதெத்தும் அங்கு சென்றார். பிப்ரவரி 18ந்தேதி, மாதாவைக் கண்டு பெர்னதெத் பரவச நிலையில் இருந்ததை அவரோடு சென்றவர்கள் கண்டனர். ஒரு காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெர்னதெத் அதை பங்கு குருவிடம் சொன்ன போது, அவர் அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கூறினார்.

பிப்ரவரி 25ந்தேதி காட்சியின்போது, மாதாவின் கட்டளையை ஏற்று பெர்னதெத் மண்ணைத் தோண்டியபோது, அந்த இடத்தில் நீரூற்று ஒன்று தோன்றியது. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது.

மார்ச் 25ந்தேதி மாதா பெர்னதெத்திடம், “நானே அமல உற்பவம்” ("que soy era immaculadaconcepciou") என்று தன்னைப் பற்றிக் கூறினார். இதற்கு பாவம் எதுவுமின்றி பிறந்தவர் என்பது அர்த்தம்.

மொத்தம் பதினெட்டு முறை பெர்னதெத்துக்கு காட்சி அளித்த தேவ மாதா, அவற்றில் 15 காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருட்களின் 15 மறையுண்மைகளையும் நாளுக்கு ஒன்று என்ற வகையில் பெர்னதெத்தை ஒவ்வொன்றாக தியானித்து செபிக்கச் செய்தார். பெர்னதெத்தின் பின்னே பக்தியுடன் ஒரு கூட்டமும், கிண்டல் செய்யும் நோக்கத்தில் மற்றொரு கூட்டமும் பின் தொடர்ந்தன.

ஏப்ரல் 7ந்தேதி பெர்னதெத் அன்னையின் 16வது காட்சியைக் கண்டபோது, மருத்துவ ஆய்வுக்காக 15 நிமிடங்கள் இவர் கையை சிலர் தீயினால் சுட்டனர். பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை.[6] ஜூலை 16ந்தேதி மாதாவின் கடைசி காட்சியைக் கண்ட பெர்னதெத், "இதற்கு முன்பாக நான் அவரை இத்தகைய பேரழகோடு கண்டதே இல்லை" என்று கூறினார்.

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே ! ஜெபிப்போம்...ஜெபிப்போம்...ஜெபமாலை

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !