உத்தரிக்கும் ஸ்தலம் 9 : புனித தந்தை பாத்ரே பியோவின் அனுபவங்கள்...

“தேவதூதர்கள் அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள் “

ஒரு நாள் ரோட்டோண்டோ மடத்தில் துறவிகள், கோவிலில் இருந்து இனிமையான இசையும் பலர் சேர்ந்து பாடும் மிக இனிய பாடல் ஒலிகளும் வருவதைக் கண்டார்கள். அந்நேரத்தில் கோவிலில் அவர்களுக்குத் தெறிந்த யாரும் பாடிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் பாத்ரே பியோவைக் காணச் சென்றார்கள். ஜெபத்தில் மூழ்கியிருந்த அவரிடம் அவர்கள் அது பற்றி கேட்டார்கள்.

“ ஏன் வியப்படைகிறீர்கள்? அவை தேவதூதர்களின் குரல்கள். அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஆன்மாக்களை மோட்சத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள் “ என்று பதிலளித்தார் பியோ.

“அவன் சபிக்கப்பட்டுவிட்டான் “

சமீபத்தில் விதவையான ஒரு பெண்ணொடு பாத்ரே பியோ பேசிக்கொண்டிருந்தார். அவள் கணவன் அவளையும், அவளது இரண்டு குழந்தைகளையும் கைவிட்டு விட்டு, மற்றொரு பெண்ணோடு மூன்று வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தான். திடீரென புற்று நோய் அவன் உயிரப்பறித்து விட்டது. மிகவும் வருத்தப்பட்ட பிறகு, தன் மரணத்திற்கு முன் இறுதி தேவதிரவிய அனுமானங்களைப் பெற அவன் சம்மதித்தான்.

“ தந்தாய், அவரது ஆன்மா இப்போது எங்கே இருக்கிறது? கவலையால் நான் உறங்கவேயில்லை” என்று கேட்டாள் அந்தப் பெண். பாத்ரே பியோ,

“ அவன் நித்தியத்திற்கும் தண்டனைத் தீர்ப்பிடப்பட்டுவிட்டான் “ என்று பதிலளித்தார். “ தீர்ப்பிடப்பட்டு விட்டாரா?” என்று கேட்க, “ஆம் “ என்று வருத்தத்தோடு தலையசைத்தார் பியோ “ இறுதி தேவதிரவிய அனுமாங்களைப் பெற்றபோது, அவன் பாவங்களை மறைத்தான். அவனிடம் மனஸ்தாபமில்லை. நல்ல பிரதிக்கினையும் இல்லை. மேலும் அவன் கடவுளுடைய இரக்கத்திற்கு எதிரான ஒரு பாவியாகவும் இருந்தான். ஏனெனில் உலகைச் சார்ந்த இன்பங்களை அனுபவிக்க அவன் எப்போதும் விரும்பியதோடு, கடைசியில் மனந்திரும்பிக்கொள்ளலாம் என்று அலட்சியமாகவும் இருந்தான் “ என்றார் பியோ.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ. கபரியேல் Ph: 9894398144

சிந்தனை :

1. நம் பாவங்களுக்காக நாம் மனஸ்தாபப்பட வேண்டியது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை மறக்கக்கூடாது.

2. நாம் பாவசங்கீர்த்தனம் செய்யும் போது எந்த பாவங்களையும் மறைக்கக் கூடாது. நியாபகம் வந்தும் சொல்லாமல் மறந்து போன பாவங்களில் ஒளித்துவிடலாம் என்று கடவுளை ஏமாற்றக்கூடாது.

3. கடைசியில் மனந்திரும்பிக்கொள்ளலாம் என்று அலட்சியமாக வாழக்கூடாது, மரணம் எந்த நேரத்திலும் வரலாம்.

4. பாவ நாட்டங்களை நாம் தவிர்த்து வாழ வேண்டும். நம்முடைய வாழ்க்கை எப்போதும் உலகம், சரீரம், பசாசு இவைகளுக்கு எதிரான போராட்டமாக இருக்க வேண்டும். நாம் செய்வது பாவம் என்று உணர்ந்து விட்டால் உடனே அவைகளை விட்டு நம்மை திருத்திக்கொண்டு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து மனம் மாற வேண்டும்.

5. “ நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கிளைகள் “ என்று சொல்லிய நம் ஆண்டவரின் வார்த்தைப்படி எப்போதும் ஆண்டவர் இயேசுவுடன் இனைந்திருக்க வேண்டும்.

6. அதிகமாக ஜெபிக்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது திவ்ய திருப்பலியில் தகுதியான உள்ளத்தோடு பங்கேற்று தினமும் ஒரு 53 ஜெபமாலையாவது ஜெபித்து கடவுளுடைய பாதுகாப்பிலும், தேவ மாதாவின் துணையிலும் ஒவ்வொரு நொடியும் வாழ வேண்டும்….

7. நமக்கு எல்லாமே இருக்கிறது ( கத்தோலிக்கத் திருச்சபையில்) ஆனால் அதை நான் பயன்படுத்த மாட்டேன் என்று இறுமாப்புடன் வாழக்கூடாது.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !