அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு -3

1942-43-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பஞ்சம் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கையில் வேலையின்றி, பணமின்றி மக்கள் திண்டாடினார்கள். பசிக்கொடுமை தாங்காமல் பலமுதியவர்கள் மயக்கத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒரு புறம் போர், இன்னொரு புறம் பஞ்சம், இன்னொரு புறம் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. இந்த சமயத்தில் முஸ்லிம் லீக் என்கிற கட்சி இயக்கம் உருவானது. இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோஷம் வலுத்தது. பஞ்சத்தின் பிடியில் இருந்த அவர்களை விடுவிக்க வேண்டும்.

அவர்களுடைய சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். சிந்திக்க ஆரம்பித்தார்!!! ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அந்த சிக்கலான விதிமுறைகள் தெரசாவின் சேவையை முழு நேரமாகவோ அல்லது அதிக நேரம் செலவழிக்கவோ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக லொரேட்டாவில் இருந்த விலகுவதாக முடிவு செய்த தெரசா தனது ராஜினாமா கடிதத்தை பேராயர் மூலமாக ரோமுக்கு அனுப்பினார். நாள்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. இறுதியாக ஏப்ரல் 12, 1948 அன்று உத்தரவாதக் கடிதம் வந்துவிட்டது. “இனிமேல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் எந்தத் தடையும் இல்லை” – உற்சாகம் பொங்க கூறிக்கொண்டார் தெரசா.

‘ஐந்து ரூபாய் பணம். நீல நிறத்தில் மூன்று சேலைகள்’. இதுவே தெரசாவின் சொத்து லொரேட்டாவில் இருந்து வெளியேறிய போது. வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார்.

தன்னை “செவிலியர்” பணியில் மேம்படுத்திக் கொள்ள விரும்பிய தெரசா அதற்காக பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அங்கு அவர் பலவிதமான நோய்கள் பற்றியும், அவற்றுக்குச் சகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் முறையாக கற்றுக் கொண்டார். தனது பயிற்சி காலங்களில் மருத்துவர்கள் தெரசாவைப்பற்றி கூறியது – மருத்துவப் பயிற்சிக்குத் தேவையான மூன்று குணங்களான மிகுந்த உற்சாகம், ஆர்வம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கே பெற்றுள்ளார் தெரசா.

தெரசாவின் சிஷ்யைகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. அவர்கள் அனைவருமே லொரேட்டாவில் முன்னாள் மாணவிகள். சமூக சேவைகளுக்கான ஆரம்பம் பள்ளிக்கூடம் கட்டுவதுதான் தனது முதல் நோக்கமாகக் கொண்டு, முதலில் குடிசை வாழ் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவோம் என்று நினைத்தனர். 1949-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அது பல பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், ஏழைகளும் ஒன்றாக வசித்த பகுதி. முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார். “விரைவில் இந்த பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்க இருக்கிறேன். அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது.

நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்த பெண் இறக்க நேரிட்டாள். இந்த ‘கோர சம்பவத்தை’ அனுபவித்த அன்னை தெரசா “சிறய அளவில் மருத்துவமனை” ஆரம்பிப்பது என முடிவு செய்தார். அரசாங்கமே முடியாமல் விட்டு வைத்துள்ள சூழ்நிலையில் “கடுமையாக முயற்சி செய்தால்” சாத்தியமாகி விடும் என்று தனக்குத்தானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று “உபரி மருந்துகளை கொடுத்து உதவுங்கள். எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்” என்று உதவிக் கேட்டார்.

அக்டோபர் 7, 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார். கவனிப்பார் இல்லாமல், வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார் அன்னை தெரசா. அரசாங்க உதவியுடன் ‘காளிகட்’ என்னுமிடத்தில் ஹீக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற “நிர்மல் ஹ்ருதய்” என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன் பெயர்தான் பின்னாளில் “காளிகட் இல்லம்”.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !