புனிதர் பங்க்ராஸ், "சின்னாடா" (Synnada) எனும் நகரின் அருகே ரோம பிரஜைகளான பெற்றோருக்கு பிறந்தவர் ஆவார். இவரது தாயார் "சிரியாடா" (Cyriada) இவர் பிறந்தபோதே மரித்துப் போனார். இவரது தந்தை "க்ளயோனியஸ்" (Cleonius) இவருக்கு எட்டு வயதாகையில் மரித்தார். பங்க்ராஸின் மாமா "டயோனிசியஸ்" (Dionysius) இவரை வளர்த்தார்.
இருவரும் ரோமிலுள்ள "செலியியன்" (Caelian Hill) மலையில் வசிப்பதற்காக புலம்பெயர்ந்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறிய இருவரும் விசுவாசம் மிக்கவர்களாக வாழ்ந்தனர். பங்க்ராஸ் தமது விசுவாசத்தில் தீவிர வைராக்கியம் கொண்டிருந்தார்.
ரோமப் பேரரசன் "டயக்ளீசியன்" (Emperor Diocletian) காலத்தில் சுமார் கி.பி. 303ம் வருடம் கிறிஸ்தவர்களை துன்புறுத்த தொடங்கினர். பங்க்ராஸும் அவரது மாமனும் கிறிஸ்தவ விசுவாசிகள் என்பதை அறிந்த அதிகாரிகள், இருவரையும் கொண்டுவந்து, ரோமானிய கடவுளர்களுக்கு தியாகம் ஒப்புவிக்க வற்புறுத்தினர். அவர்களின் விசுவாசம் கண்ட பேரரசன் "டயக்ளீசியன்", அவர்களுக்கு தேவையான செல்வமும், வசதிகளும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தான். ஆனால், தமது விசுவாசத்தில் உறுதியாய் இருந்த அவர்களிருவரும் தீர்க்கமாக மறுத்துவிடவே, ஆத்திரமுற்ற பேரரசன், அவர்களிருவரையும் தலையை வெட்டி கொலை செய்ய உத்தரவிட்டான்.
கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்க்ராஸ், தனது 14ம் வயதிலேயே கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார்.
ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே பங்க்ராசின் பக்தி இருந்து வருகின்றது. இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட பேராலயம் (Basilica of Saint Pancras), திருத்தந்தை சைமச்சஸ் (Pope Symmachus) அவர்களால், (கி.பி. 498-514) பங்க்ராஸ் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டது. இளைஞர் பங்க்ராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப் பெற்றவரெனில், லண்டனில் புனித பங்க்ராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனிதர் பெரிய கிரகோரி (Pope Gregory the Great) மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்றபோது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் (Augustine) பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனிதர் பங்க்ராஸ் பெயரை சூட்டினார்.
கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழுதிய பங்க்ராஸின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதினார். பங்க்ராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே. ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி, அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
பி.கு. : நம் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் "இன்றைய புனிதரை" தமிழில் மொழி பெயர்த்து தொகுத்து வழங்கிய மறைந்த திரு.புஷ்பராஜா அவர்களின் ஆன்மா இளைப்பாற்றிக்காக வேண்டுவோம்.