✠ புனிதர் பாஸ்ச்சால் பேலோன்

புனிதர் பாஸ்ச்சால் பேலோன், ஒரு ஸ்பேனிஷ் கத்தோலிக்க பொதுநிலை துறவியும் (Spanish Roman Catholic Lay Brother), புனிதருமாவார். இவர் நற்கருணை மகாசபைகள் (Eucharistic Congress) மற்றும் நற்கருணைச் சங்கங்கள் (Eucharistic Associations) ஆகியவற்றின் பாதுகாவலரும் ஆவார்.

ஒரு ஏழை விவசாயியான "மார்ட்டின் பேலோன்" (Martin Baylon) இவரது தந்தை ஆவார். "எலிசபெத் ஜூபேரா" (Elizabeth Jubera) இவரது தாயார் ஆவார். தமது இளமைக் காலத்தில் ஆடுகளை மேய்க்கும் பணியில் இருந்த பாஸ்ச்சால் பேலோன், ஆன்மீக வாழ்க்கையில் நுழைய அதிக விருப்பம் கொண்டிருந்தார். ஆடுகளை பராமரிக்கும் ஆயனாக கூலி வேலைக்கு சேர்ந்த இவர் ஒருபோதும் பள்ளிக்கூடம் போனதேயில்லை. ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு போகும்போதெல்லாம் தம்முடன் ஒரு புத்தகத்தையும் கொண்டு செல்வார். வழிப்போக்கர்களிடமெல்லாம் தமக்கு எழுதப்படிக்க கற்றுத் தரும்படி கெஞ்சுவார். அப்படியே இவர் தானாகவே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டார். ஆடு, மாடுகளை வயலில் மேய்க்கும்போது கடவுளின் படைப்பை கண்டு ரசித்த இவர் ஆன்மீக புத்தகங்களை படிக்க கற்றுக்கொண்டார்.

கி.பி. சுமார் 1564ம் ஆண்டு, சீரமைக்கப்பட்ட ஃபிரான்சிஸ்கன் சபையில் (Reformed Franciscan Order) பொதுநிலை சகோதரராக (Lay Brother) இணைந்தார். அப்போதுதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள்விப்பட்டு, அவர்களைப்பற்றி அறிந்துகொண்டார்.

அங்கு அவர் எளிமை மற்றும் தாழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். திவ்விய நற்கருணை பீடத்தின் முன் மணிக்கணக்காக - பல நாட்களில் முழு இரவு அமர்ந்து செபிப்பார். அதிலிருந்து தாம் அளவற்ற மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ்வில்லத்திலிருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொடர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலடங்கா அற்புதங்கள் இன்று வரை நடந்து வருகின்றது.