உண்மையான சிலை வழிபாடு என்றால் என்ன? இதில் பல வகைகள் உண்டு.. ஒவ்வொன்றாக பார்ப்போம்..
முதலில் கடவுளுக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் அனைத்துமே சிலை வழிபாடுதான்..
" உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை."
ஏனென்றால் பாவம் செய்யும் ஒருவன்… தான் பாவம் செய்யத் துவங்கும் முன் அவனுக்குள் ஒரு குரலோலி கேட்கும்..
“ இது தப்பு.. அது பாவம்… அதைச் செய்யாதே” – இது கடவுளின் குரல்.
“ அதெல்லாம் யாருக்கும் தெரியாது.. யாரும் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டா இருக்காங்க.. அதை அப்படியே மறைச்சிடலாம். சும்மா செய்.. அதுதான் உனக்கு இப்போ சந்தோசத்தைக் கொடுக்கும்” – இது பிசாசின் குரல்.
நாம் யார் குரலுக்கு கீழ்ப்படிகிறோம்.. பிசாசின் சொல்லுக்கு.. அப்போது யாரை நாம் வழிபடுகிறோம்.. பிசாசை. அதுவும் கடவுளை விலக்கி விட்டு, அவரைப் புறம் தள்ளிவிட்டு பிசாசுக்கு கீழ்ப்படிந்து பாவம் செய்கிறோம்..
இதுதான் முதல் மற்றும் தலையான சிலை வழிபாடு..
அந்த பாவத்தை செய்து முடித்தவுடன்.. உடனே மனதுக்குள் ஒரு வருத்தம்.. நிம்மதியின்மை, ஒரு குற்ற உணர்ச்சி வருகிறது.
“ ஐயையோ தெரியாமல் செய்துவிட்டோமே !.. கடவுளுக்கு எதிராக பாவம் செய்துவிட்டோமே.. நான் செய்தது தப்பு, இது செய்திருக்கக் கூடாது.. ஆண்டவரே தயவு செய்து என்னை மன்னித்துவிடும்..”
இது மட்டுமல்ல இன்னும் பல சிந்தனைகள் வரும்..
அந்த நேரத்தில் பசாசு நம் அருகில் நிற்காது ஓடிவிடும்.. ஏனென்றால் அது வந்த வேலை முடிந்துவிட்டதல்லவா?
அல்லது அருகில் இருந்து அந்த பாவத்தைக் குறித்து நமக்குள் ஒரு மிகப்பெரிய பயத்தை உண்டாக்கும்..
“ இந்த பாவத்திற்கு உனக்கு மன்னிப்பே கிடையாது.. கண்டிப்பா உனக்கு நரகம்தான்” என்று சொல்லி நம்மை நிம்மதியில்லாமல் அலைய வைக்கும்..
முதலில் பாவத்தை செய்யத் தூண்டியதும் அதுதான்.. இப்போது அந்த பாவத்தைக்குறித்து பெரிய பயத்தை உண்டாக்குவதும் அதுதான்..
பிசாசின் வேலையால் அன்று யூதாஸ் மரித்தது முதல் எத்தனையோ பேர் இன்று மிகப்பெரிய பாவத்திற்காக தற்கொலை முடிவைத் தேடுவதும் அதனால்தான்..
பிசாசு ஆசைகாட்டி நம்மை பாவம் செய்ய வைத்து அதையே பயமாக மாற்றி நரகத்திற்கு இழுத்துச் செல்வான்..
அவன் வேலை அதுதானே..
அதனால் ஆண்டவர் இயேசு சுவாமி அவன் யார் என்று சொல்வார்..
“ ஆதிமுதல் அவன் ஒரு கொலைகாரன்: அவனிடம் உண்மையில்லாததால் அவன் உண்மையின்பால் நிலைத்து நிற்கவில்லை.
அவன் பொய் சொல்லும்பொது தன்னுள் இருப்பதையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன்.. பொய்க்குத் தந்தை“
அருளப்பர் (யோவான்) 8 : 44
அன்று ஏவாள் முதல் இன்று நாம் வரை அவன் ஆசை வார்த்தைக்கு பலியாகி, வீழ்ந்து பாவம் செய்வது, ஆண்டவரை மறுதலிப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம்..
பாவம் செய்யும்போது நாம் இருவருக்கு எதிராக பாவம் செய்கிறோம்..
“ அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் பாவம் குற்றம் செய்தேன் “
லூக்காஸ் 15 : 18
இது அன்று உதாரியின் மைந்தன் சொல்லியது..
செய்யப்படும் ஒவ்வொரு பாவமும் முதலில் அது கடவுளை பாதிக்கிறது.. ஆகையினால் அது முதலில் கடவுளுக்கு எதிராக செய்யப்படுகிறது..
அதன்பின் சம்பந்தப்பட்டவர், நாம் யாரை ஏமாற்றுகிறோம், யாருக்கு துரோகம் செய்கிறோம், அல்லது யாரை பாவத்தில் சேர்த்துக்கொள்கிறோமோ அவர்களையும் அது பாதிக்கிறது..
ஆக பாவம்தான் முதல் தலையாய சிலை வழிபாடு..
“ களியாட்டம், குடிவெறி, காமம், ஒழுக்கக் கேடு, சண்டை, பொறாமை இவற்றையெல்லாம் தவிர்த்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள. வலுவற்ற உங்கள் இயல்பை பேணுபவர்களாய் தீய இச்சைக்கு இடங்கொடாதீர்கள் “
உரோமையர் 14 : 13-14
ஆக இந்த தீய இச்சைகள் என்னும் சிலை வழிபாடுகளை முதலில் நாம் நிறுத்த வேண்டும்.. இந்த சிலைவழிபாடு.. எல்லாருக்கும் பொதுவானது..
மேலே ஒரு விசயத்தைப் பார்த்தோம் பிசாசு “ ஆசை, சுகம் “ என்ற சாக்லேட்டுகளைக் காட்டி நம்மை பாவம் செய்ய வைத்துவிட்டு அதையே பெரிய பூதாகரமாக்கி பயத்தைக் உண்டாக்கி அது நம்மை நரகத்திற்கு இழுக்கும் என்று பார்த்தோம்..
இப்படி ஒரு பெரிய அல்லது சாவான பாவத்தை கட்டிக்கொண்ட ஒரு கத்தோலிக்க சகோதரனோ, சகோதரியோ உடனே என்ன செய்வார்கள் என்றால் “உடனே நான் இப்போது பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்” என்று மனதிற்குள் உணர்ந்து.. குருவானவரைத் தேடி ஓடுவார்கள்..
அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்து முடித்ததும் மனதுக்குள் பரிசுத்த ஆவியானவர் மீண்டும் வந்ததும் ஒரு நிம்மதி பெரு மூச்சு விடுவார்கள்..
“ நல்ல வேளை தப்பித்துவிட்டேன். ஆண்டவர் என்னை மன்னித்துவிட்டார். இனிமேல் இது போன்ற பாவங்களை ஒருபோதும் செய்யக் கூடாது “ என்று..
இதுதான் கத்தோலிக்க திருச்சபையின் மகிமை..
அங்கு அதற்கு வாய்ப்பில்லை.. அப்படியே நேரடிபாவசங்கீர்த்தனம் செய்தாலும் அது செல்லாது..
அன்று யூதாஸை விட பெரிய பாவம் செய்த இராயப்பர் மனம் திருந்தி, வருந்தி அழுது மன்னிப்பு கேட்டு ஒரு மிகப்பெரிய புனிதராக, திருச்சபையின் தலைவராக, ஆண்டவருக்காக தலை கீழாக சிலுவையில் அறையப்பட தன்னை கையளிக்கும் அளவு மனவுறுதியும், வீர வைராக்கியமும் பெற்றார்..
அதுதான் மன்னிப்பின் மகிமை..
ஆக சிலை வழிபாட்டுக்கான உண்மையான விளக்கங்களை விட்டுவிட்டு..
ஏன் இவர்கள் எல்லாவற்றையும் திரித்துக்கூறுகிறார்கள்..?
அது இன்றா நடக்கிறது..?
அது ஆண்டவரின் காலத்திலிருந்தே நடந்துகொண்டுதான் இருக்கிறது..
“ கடவுளின் சொல்லை விலைகூறி திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள் கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்” 2 கொரி 2 : 17
“ கடவுளின் வார்த்தையை நாங்கள் திரித்துக்கூறுவதில்லை; உண்மையை வெளிப்படுத்துவதுதான் எங்களைப்பற்றி நாங்கள் தரும் நற்சான்று. இதுவே கடவுள் முன்னிலையில் நல்ல மனசாட்சியுள்ள மனிதர் அனைவருக்கும் நாங்கள் தரும் சான்று “ 2 கொரி 4 : 2
அதே போல் இப்போது நடந்துகொண்டிருப்பதும் பல இடங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது..
ஆவியானவர் தெளிவாய்க் கூறுகிறபடி, “ இறுதிக்காலத்தில் சிலர் தீய ஆவிகளின் வஞ்சனைகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவிமடுத்து விசுவாசத்தை மறுத்து விடுவர் “ 1 திமோ 4 : 1
( இதில் இப்போது நாமும் யோசிக்க வேண்டும்)
நமக்கு நம் திருச்சபையும், அதன் போதனையும் போதும்..
விளக்கம் இன்னும் இருக்கிறது..
நன்றி : வேதாகம மேற்கோள்கள், வாழும் ஜெபமாலை இயக்கம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !