85. (44) அர்ச். இராயப்பருக்குப் பதிலாகத் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறவர் யார்?
அர்ச். பாப்பானவர்.
1. பாப்பு என்கிறதற்கு அர்த்தமென்ன?
பாப்பு என்ற பதத்துக்கு இலத்தீன் பாஷையில் தகப்பன் என்று அர்த்தம்.
2. தகப்பன் என்கிற பெயர் பாப்பானவருக்குப் பொருந்துமா?
பாப்பானவர் சகல விசுவாசிகளின் மேய்ப்பரும் தகப்பனுமாயிருப்பதால், அவருக்கு இப்பெயர் மிகவும் பொருத்தமானது.
3. அவரை அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் என்று சொல்வது ஏன்?
பாப்பானவர் சேசுநாதருக்குப் பதிலாளியாகத் திருச்சபையை நடத்தி வருவதால் அவரை அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் என்று அழைக்கிறோம்.
4. பாப்பானவர் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாரா?
அவரை, “பரிசுத்த பிதா” அல்லது “விசுவாசிகளின் தந்தை” அல்லது “சர்வ போதகர்” அல்லது “சேசுகிறீஸ்துநாதருக்குப் பதிலாளி” என்னும் பல நாமங்களால் அழைப்பதுண்டு. ஆனால் அவர் தன்னைத்தானே “தேவ ஊழியர்களின் ஊழியன்” என்று அழைத்துக் கொள்கிறார்.
5. அர்ச். இராயப்பர் கொண்டிருந்த வரங்களை அர்ச். பாப்பானவரும் அடைந்து கொண்டிருக்கிறாரா?
திருச்சபை உலக முடிவு வரைக்கும் நீடித்திருக்கும்படி வழுவாமையும், சிரேஷ்ட முதன்மையும் முழுதும் அவசியமா யிருக்கிறபடியால், அர்ச். இராயப்பரின் அதிகாரமும், தவறாவரமும் அவருடைய ஸ்தானத்தை வகிக்கும் அர்ச். பாப்பானவருக்கும் எப்போதும் வந்து கொண்டிருக்கும் என்பது சத்தியமாமே.
6. அப்படியானால் அர்ச். பாப்பானவருக்கு இருக்கும் விசேஷ வரங்கள் எவை?
1-வது. தவறா வரம்.
2-வது. திருச்சபையை ஆண்டு நடப்பிக்கும்படி மேலான சிரேஷ்ட பட்டம்.
7. தவறாத வரத்தால் அர்ச். பாப்பானவர் யாதொரு பாவத்தையும் கட்டிக் கொள்ள மாட்டாரென்று அர்த்தமோ?
இதனால் அர்ச். பாப்பானவர் யாதொரு பாவத்தையும் தவறுதலையும் செய்யமாட்டாரென்று எண்ணத் தகாது. அவர் மற்ற மனிதர்களைப் போல் தப்பிதங்களையும், பாவங்களையும் கட்டிக் கொள்ளக் கூடியவராயிருக்கிறார்.
8. வழுவாமை என்றால் தேவ வெளிப்படுத்துதல் அல்லது தேவ ஏவுதலா?
இல்லை, அது தேவ ஒத்தாசையல்லாமல் தேவ வெளிப்படுத்துதலும் அல்ல, தேவ ஏவுதலும் அல்ல. அர்ச். பாப்பானவர் தீர்க்கதரிசிகளையும், வேதப் புஸ்தகங்களை எழுதின வர்களையும்போல், தேவ வெளிப்படுத்துதலினால் அறியாததை அறிந்து, அதை எவ்விதமாகச் சொல்ல வேண்டுமென்றும், எழுத வேண்டுமென்றும் இஸ்பிரீத்துசாந்துவினால் படிப்பிக்கப்படுகிற தில்லை. இதுவரையிலும் வெளிப்படுத்தியிராத புது சத்தியங் களை சர்வேசுரன் அவருக்கு அறிவிப்பதில்லை. அர்ச். பாப்பானவர் சேசுநாதரும், அப்போஸ்தலர்களும் அறிவித்திருக்கும் சத்தியங் களையே வெளிப்படுத்தி விவரிக்கிறாரேயன்றி, வேறொன்றையும் புதிதாய்ப் போதிப்பதுமில்லை, போதிக்க அவருக்கு அதிகாரமுமில்லை. ஆகையால் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட ஒரு சத்தியம் அல்லது நல்லொழுக்கத்துக்கடுத்த யாதொரு விஷயம் வேதாகமத்தில் அல்லது பாரம்பரியத்தில் அடங்கியிருக்கிறது என்று தீர்மானிக்கும் போது, அவர் தப்பிப் போகாதபடி இஸ்பிரீத்துசாந்து அவருக்குத் தந்தருளும் ஓர் விசேஷ உதவியே வழுவாமை (தவறாவரம்) எனப்படும்.
9. அப்படியானால் அர்ச். பாப்பானவர் எதில் தவறாத வரம் பெற்றிருக்கிறார்?
முன்னதாகவே சேசுநாதரும், அப்போஸ்தலர்களும் அறிவித்திருக்கும் யாதொரு வேதசத்தியத்தை அல்லது நல்ல ஒழுக்கத்துக்கடுத்த யாதொரு விஷயத்தை அப்போஸ்தலிக்க ஸ்தானத்துக்குரிய மேலான அதிகாரத்தோடு சேசுநாதருடைய பிரதிநிதியாக உலகத்திலுள்ள சகல கிறீஸ்துவர்களுக்கும் விளக்கிக் காட்டுவதில் அர்ச். பாப்பானவர் தவற முடியாது.
10. அர்ச். பாப்பானவர் இந்த வழுவா வரத்தை எப்போது உபயோகப்படுத்துகிறார்?
(1) அர்ச். பாப்பானவர் அப்போஸ்தலிக்க ஸ்தானத்திற்குரிய மேலான அதிகாரத்தோடு சகல கிறீஸ்தவர்களுடைய ஞான மேய்ப்பரும் போதகருமான முறையில் ஓர் விஷயத்தைப் படிப்பிக்கும்போதும்,
(2) விசுவாசத்தையாவது அல்லது நன்னெறியை யாவது சேர்ந்த ஒரு சத்தியத்தைப் போதிக்கும்போதும்,
(3) அவர் போதிப்பதைத் திருச்சபை முழுவதும் கைக் கொள்ளும்படி கட்டளையிடும்போதும், தமக்குரிய தவறாவரத்தை உபயோகிக்கிறார்.
11. அர்ச்.பாப்பானவரின் வழுவாவரத்தை எண்பிக்க நம்மால் கூடுமா?
கூடும். (1) வேதாகமத்திலிருந்தும், (2) பாரம்பரியத் திலிருந்தும், (3) திருச்சபை போதகத்திலிருந்தும் எண்பிக்கலாம்.
12. வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்ன?
(1) பழைய ஏற்பாட்டில், பெரிய குரு உண்மை யென்று ஓர் வேத சத்தியத்தைப் போதிக்கும்போது, கடவுளின் விசேஷ உதவி அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது (உபா. 17:8-13). பழைய ஏற்பாட்டிலுள்ள பெரிய குரு, புதிய ஏற்பாட்டின் பிரதான குருவுக்கு ஒரு உருவகமும், அடையாளமுமாக இருந்தார். இதனால் தான் புதிய ஏற்பாட்டின் பெரிய குருவுக்கும் அதே விசேஷித்த வரம் இருக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் உண்மையானது அதன் அடையாளத்திற்குக் கீழ்ப்பட்டதாயிருக்கும்.
(2) அர்ச். இராயப்பர் மற்ற அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்படி தாம் வேண்டிக் கொண்டதாக சேசுநாதர் திருவுளம்பற்றினபோது, அவருக்கு மாத்திரமல்ல, அவருடைய ஸ்தானத்தில் வரும் சகல பாப்பானவர்களுக்கும் அந்த வரத்தைக் கொடுத்தாரென்று நன்றாய்த் துலங்குகிறது.
13. பாரம்பரியத்தின் போதகமென்ன?
ஆதித் துவக்கத்திலிருந்தே திருச்சபையிலுள்ள மற்ற அதிகாரிகள் அர்ச். பாப்பானவரிடம் இந்த வரம் இருந்ததென்று தங்கள் உறுதிமொழிகளாலும், செய்கையினாலும் காட்டியிருக் கிறார்கள். இது விஷயத்தில் அர்ச். அகுஸ்தீன் சொன்னதாவது: ரோமாபுரி (அதாவது, பாப்பானவர்) பேசிவிட்டது, சகல வழக்கும் முடிவு பெற்றது.
14. திருச்சபையின் தீர்மானமென்ன?
“முதல் வத்திக்கான்” என்னும் பொதுச் சங்கம் அர்ச். பாப்பானவர் தவறா வரமுள்ளவரென்பது விசுவாச சத்தியமாகத் தீர்மானித்திருக்கிறது.
15. அர்ச். பாப்பானவருக்கு இருக்கும் அதிகாரம் வெறும் மகிமையில் அடங்கியிருக்கிறதா?
அவர் அதிகாரம் வெறும் கெளரவ முதன்மை ஸ்தானம் மாத்திரமல்ல, திருச்சபையை ஆண்டு நடப்பிக்கும்படி அதிசிரேஷ்ட அதிகார முதன்மை ஸ்தானமாம்.
16. திருச்சபையை ஆண்டு நடப்பிக்கும்படி அர்ச். பாப்பானவர் மெய்யான முதன்மை அதிகாரம் பெற்றிருக்கிறாரென்று எப்படி நாம் எண்பிக்கலாம்?
(1) பாப்பானவர் அர்ச். இராயப்பரின் பதிலாளியா யிருக்கிறபடியால், திருச்சபையை ஆண்டு நடப்பிக்கும்படி அர்ச். இராயப்பரின் வழியாக அவர் மேலான முதன்மை அதிகாரம் பெற்றிருக்கிறாரென்று தீர்மானிக்க வேண்டும்.
(2) சேசுநாதர் அர்ச். இராயப்பருக்குக் கொடுத்த சிரேஷ்ட அதிகாரம் அவருடைய ஸ்தானத்தில் வருபவர்களுக்கு உரியதென்று ஆதித் துவக்கத்திலிருந்து திருச்சபை அங்கீகரித்து வந்திருக்கிறது.
(3) இதைப் பற்றி முதல் வத்திக்கான் பொதுச்சங்கம் உரைப்பதாவது: “உலக முழுதும், விசுவாசத்துக்கும் நல்லொழுக் கத்துக்கும் அடுத்தவைகளில் மாத்திரமல்ல, இன்னும் திருச்சபையின் ஆளுகைக்கும், ஒழுங்கு சட்ட திட்டங்களுக்கும் அடுத்த சகல விஷயங்களிலும் முதலாய் மேய்ப்பர்களும், விசுவாசிகளும், அர்ச். பாப்பாண்டவருக்குக் கீழ்ப்படிய வேண்டியது.”
17. அர்ச். பாப்பானவருக்கு எவ்விதமான அதிகாரமுண்டு?
திருச்சபை முழுவதிலும், ஒவ்வொரு மேற்றிராசனத்திலும், ஒவ்வொரு ஞான அதிகாரி மீதும், விசுவாசிகளின் பேரிலும் நேரே பூரண அதிகாரம் செலுத்தும் உரிமை அர்ச். பாப்பாண்டவருக்கு உண்டு. இவ்வதிகாரம் அவருடைய உத்தியோகத்தைச் சார்ந்த அதி உன்னத அதிகாரம்.
18. திருச்சபையை நடத்துவதில் அர்ச். பாப்பாண்டவருக்குள்ள உரிமைகள் எவை?
(1) திருச்சபையை ஆண்டு கண்காணித்து வரவும்,
(2) தப்பிதம் செய்கிறவர்களுக்குப் புத்தி சொல்லவும், கட்டளையிடவும், கண்டிக்கவும்,
(3) திருச்சபைக்கடுத்த காரியங்களினிமித்தம் பொதுச் சங்கங்களைக் கூட்டவும், அவைகளை முடிக்கவும்,
(4) திருச்சபைக்கடுத்த விவாதங்களை விசாரித்து, தீர்ப்புச் சொல்லவும்,
(5) மேற்றிராணிமார் செய்த தீர்ப்புகளை மாற்றவும்,
(6) மேற்றிராணிமார்களை நியமிக்கவும், புது மேற்றிராணிமார்களை உண்டுபண்ணவும்,
(7) திருச்சபையின் நன்மைக்கு அவசியமாயிருந்தால் மேற்றிராணிமார்களை முதலாய் விசாரணை செய்து தண்டிக்கவும், நீக்க வைக்கவும், அவர்கள் ஞான அதிகாரத்தை முழுதும் எடுத்துப் போடவும்,
(8) திருச்சபைக்கு அவசியமான புது சட்டங்களை உண்டு பண்ணவும், அல்லது உண்டுபண்ணப்பட்டவைகளை இரத்து செய்யவும்,
(9) ஞானப் பலன்களை அளிக்கவும்,
(10) கலியாண விக்கினங்களுக்கு உத்தரவு கொடுக்கவும்,
(11) புண்ணியவாளருக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுக்கவும் பாப்பாண்டவருக்கு உரிமை உண்டு.
86. அர்ச். பாப்பானவர் யார்?
அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற ரோமாபுரி மேற்றிராணியாரே அர்ச். பாப்பானவர்.
1. ஏன் ரோமாபுரி மேற்றிராணியார் திருச்சபைக்குத் தலைவரா யிருக்கிறார்?
(1) அர்ச். பாப்பானவர் அர்ச். இராயப்பரைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாய் அதிசிரேஷ்ட அதிகார முதன்மையில் அவருடைய ஸ்தானத்திலிருக்கிறார். அர்ச். இராயப்பர் ரோமாபுரி மேற்றிராணியாராயிருந்து, அங்கே தமது ஸ்தானத்தை ஏற்படுத்தி, அவ்விடத்திலேயே வேதசாட்சியாய் மரித்தபடியால் ஒழுங்கு முறைப்படி ரோமாபுரி மேற்றிராணியார்தான் அவருடைய பதிலாளியாயிருக்க வேண்டும்.
(2) அர்ச். இராயப்பர் இறந்த பிறகு அர்ச். அருளப்பர் முப்பது வருஷங்களுக்கு மேலே ஜீவித்தார். அவர் சேசுநாதர் சுவாமி விசேஷமாய் சிநேகித்தருளிய அப்போஸ்தலரானாலும், இராயப் பருக்குப் பின் திருச்சபையை ஆண்டு வந்ததில்லை. ஆனால் அப்போஸ்தலரல்லாத அர்ச். லீனப்பர், அனக்கிலெத்துஸ், சாந்தப்பர் முதலியவர்களும் ரோமாபுரி மேற்றிராணியாராகத் தெரிந்து கொள்ளப்பட்டு திருச்சபைக்குத் தலைவராயிருந்தார்கள்.
(3) இன்னும் ரோமாபுரியில் அர்ச். இராயப்பருடைய ஸ்தானமே சகல ஸ்தானங்களுக்கும் மேலானது என்றும், ரோமா புரியில் இருக்கும் திருச்சபையே தாய்த் திருச்சபையென்றும் வேத சாஸ்திரிகளும், மேற்றிராணிமார்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் எப்போதும் அங்கீகரித்து வந்தார்கள்.
(4) மேலும் திருச்சபை ஆதிகால முதற்கொண்டு இந்த நாள் வரையில் எந்த மேற்றிராணியாரும் அந்த மேலான தன்மை தன் மேற்றிராசனத்தின் உரிமையென்று ஒருக்காலும் சாதிக்கவில்லை.
2. அர்ச். பாப்பானவரை தேர்ந்தெடுக்கிறவர்கள் யார்?
கர்தினால்மார்கள்.
3. அர்ச். பாப்பானவர் கர்தினால்மார்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால், அவர் அவர்களிடமிருந்து தமது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறாரா?
இல்லை. அவர் தமது அதிகாரத்தை சேசுநாதரிடத் தினின்று நேராய்ப் பெற்றுக் கொள்ளுகிறார். இந்த அதிகாரம் அவருடைய மேற்றிராசனத்தைச் சேர்ந்தது, அதற்கு உரியதானது, இது அவருடைய உத்தியோகத்தின் தன்மைக்கு முழுதும் சொந்தமா யிருக்கிறது.
4. பாப்பானவர் அந்தப் பட்டத்துக்கு வரும்போது தமது பெயரை ஏன் மாற்றிக்கொள்ளுகிறார்?
நமதாண்டவர் இராயப்பரைத் திருச்சபைக்குத் தலைவராக நியமித்தபோது, அவருக்கு இருந்த சீமோன் என்னும் பெயரை மாற்றி இராயப்பர் என்னும் பெயரைக் கொடுத்ததுபோல் (அரு. 1:42) பாப்பானவரும் அந்த உன்னத பட்டத்துக்கு வரும்போது, தம்முடைய பழைய பெயரை மாற்றி வேறு பெயரை வைத்துக் கொள்கிறார்.
5. இதுவரையில் எத்தனை பாப்பானவர்கள் ஆண்டு வந்திருக் கின்றனர்?
முதல் பாப்பானவரான அர்ச். இராயப்பர் முதல் இது வரை 267 பாப்பானவர்கள் திருச்சபையை ஆண்டு வந்திருக்கிறார்கள். இப்போது திருச்சபையை ஆண்டு வரும் பாப்பானவரின் பெயர், முதலாம் பிரான்சிஸ். இவர்களுள் 82 பேர் அர்ச்சியசிஷ்ட பட்டம் பெற்றவர்கள், 33 பேர் வேதசாட்சி முடி பெற்றவர்கள்.
6. பாப்பானவர் மட்டில் கிறீஸ்துவர்களுடைய கடமைகள் எவை?
(1) பாப்பானவரை மரியாதையாக எண்ணி, நேசித்து, நம்பி, அவருக்காக வேண்டிக்கொள்ள வேண்டும்;
(2) எல்லாக் காரியத்திலும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்;
(3) அவருக்கு நேரிடும் அவசியங்களில் அவருக்குக் கூடிய உதவி செய்யத் தயாராயிருக்க வேண்டும்.