நரகம் என்ற சொல்லை சிலர் பயன்படுத்த தயங்குவதேன்?

கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச சத்தியங்கள் மோட்சம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம்.. அதில் என்ன குழப்பம்..

சமீப காலமாக நிறைய பேர் தங்கள் மறையுரைகளில் நரகத்தைப் பற்றி பேசுவதை தவிர்த்து வருவது ஏன் என்று புரியவில்லை..   நரகத்தை யாராலும் மூடி மறைக்க முடியாது.. அதைப்பற்றி மக்களுக்கு சொன்னால் மக்கள் பயப்படுவார்கள் என்றால் அதைச் சொல்லாமல் விட்டு அவர்கள் நரகம் செல்ல அவர்கள் காரணமாக இருந்தால் அந்த விணை யாரைச் சேரும்..?

நெருப்பு என்றால் நெருப்புதான்.. கந்தகம் என்றால் கந்தகம்தான்.. அதை மூடி மறைச்சு  “ எறும்பு கடிச்ச் மாதிரி “ சுடும்னு சொல்ல முடியுமா?

நரகம் என்றால் நரகம்தான்… அது முடிவில்லா நெருப்பு… அவியா நெருப்பு என்று ஆண்டவரே சொன்ன பின்பு அதில் என்ன மழுப்பல்… விவிலிய ஆதாரங்கள் எவ்வளவோ இருக்கும்போது.. அதைப்பற்றி வெளிப்படையாக பேச என்ன தயக்கம்.. ? அதுவும் பாவம் மலிந்து.. உலகம் ஏற்கனவே நரகத்தில் குதித்துவிட்டது போல இருக்கும்போது.. ஏன் அதைப்பற்றி பேச தயக்கம்..?

கடவுள் சார்பு போய் மக்கள் சார்பு வந்ததால்தான் இந்த நிலமை.. 

நரகம் ஒரு பயங்கரமான இடம் என்று சொன்னால்தானே மக்களுக்கு அச்சம் வரும். நாம் அங்கு ஒருக்காலும் செல்லவே கூடாது.. என்ற எண்ணத் தோன்றும். நாம் அங்கு செல்லாமல் இருக்கனும் என்றால் பாவம் செய்யக்கூடாது என்ற மன நிலை வரும்.. அதை மூடி மூடி ஏன் மறைக்க வேண்டும்..?

இயேசு சுவாமி ஏன் மனிதனாக பிறந்தார்?.. ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? யாரை மீட்க ? எதிலிருந்து மீட்க ? என்ற கேள்வி முடியும் இடம் நரகம்..

நரகத்தைப் பற்றி மக்களிடம் பேசி விழிப்புணர்வு கொடுத்து அவர்களை அதிலிருந்து காப்பாற்ற அவர்களுக்கு அலாரம் கொடுப்பது நம் கடமை அல்லவா? அதை பூசி பூசி மெழுகி சொல்லுவதால் என்ன பயன்..?

நரகத்தைப் பற்றி பேசினால்தான் மக்கள் பாவசங்கீர்த்தனம் செய்வது அதிகமாகும்.. மனமாற்றம் வரும்..

நாம் எல்லாரும் இங்கு சொகுசாக வாழவா பிறந்தோம்..

“மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்… விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள் “ ( மத்தேயு 6 : 19-21) என்று நம் ஆண்டவர் சொன்னாரே ஏன் சொன்னார் ?

“ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்? “ மத்தேயு 16 : 26

இதைப்புடிச்சுக்கிட்டா தப்பிச்சுக்குவாங்க..

மேலே உள்ள இந்த ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைதான்.. உலகத்தில் பெயரும், புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்த சவேரியாரை மனம் மாற்றியது.. நமக்கு புனித சவேரியாரைக் கொடுத்தது..அவரால் நாம் கிறிஸ்தவர்கள் ஆனோம்…

கீலே உள்ள திருவிவிலிய வசனத்தை வாசித்தால் இனி யாரும் சவேரியார் ஆகனும்னு யோசிக்க கூட முடியாதே..

அதே போல் அதை வாசிக்கிறவங்க எப்படி தப்பிக்க முடியும்?

“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? “

வாழ்வு என்றால் இந்த உலக வாழ்வுதானே? பின்னே ‘ நிலை வாழ்வு’ ன்னா போட்டிருக்கு. இந்த உலகில் நன்றாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் நேராக மோட்சம் போய்விடலாம்.. அப்படித்தானே? அதற்கு எதற்கு சந்தோசமா அப்பாக் கூட இருந்த ஆண்டவர் இயேசு மனுசரா பொறக்கனும்? சிலுவையில் அறையப்படனும்?

பணக்காரன் இவ்வுலகில் சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்தான்.. அவன் எங்கு சென்றான்.. தரித்திர வாழ்க்கை வாழ்ந்த லாசர் எங்கு சென்றான்..?

ஆண்டவர் நரகத்தைப் பற்றி பேச அஞ்சினாரா? மக்களுக்கு வலிக்குமேனு யோசித்தாரா? அவரு வந்ததே அதிலிருந்து நம்மை மீட்கத்தானே?

"ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள். உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். மத்தேயு 10 : 28

திருமண உடையனியாத.. அதாவது பரிசுத்தம் இல்லாமல் மோட்சத்திற்குள் நுழைய வந்தவனை நோக்கி,

பின்னர் அரசன் பணியாளரை நோக்கி, ' கையும் காலும் கட்டி இவனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் ' என்று சொன்னான். மத்தேயு 22 : 13

நம் ஆண்டவர் தெள்ளந்தெளிவாக நரகத்தைப் பற்றி பேசும் உயிருள்ள இறைவார்த்தை ( பல இடங்களில் பேசியிருக்கிறார்)

இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள். மத்தேயு 25 : 41

நரகத்தில் என்ன இருக்கும்? அங்கே யார் யார் இருப்பார்கள்? என்று  நம் ஆண்டவர் இயேசு சுவாமி சொல்லிய பின்பு அதைப் பற்றி வெளிப்படையாக பேச சிலருக்கோ, பலருக்கோ என்ன தயக்கம்..?

ஆண்டவர் ஒருபோதும் முகத்தாட்சண்யம் பார்த்ததில்லை.. ஏன் உங்களுக்கு முகத்தாட்சண்யம்..?

இன்னொரு முக்கியமான விசயம்.. திருச்சபையின் விசுவாச சத்தியங்களை யார் மறுதலிக்கிறார்களோ.. அல்லது சொல்ல தயங்குகிறார்களோ அவர்கள் திருச்சபையை விட்டு எப்போதோ வெளியே சென்றுவிட்டார்கள்..  அதற்கு மக்கள் செவி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..

நிறைய பேர் கத்தோலிக்க விசுவாச சத்தியங்கள் குறித்து தங்கள் சொந்தக் கருத்துக்களை சொல்லுகிறார்கள்.. நரகம் , மோட்சம் , உத்தரிக்கும் ஸ்தலம் அது ஒரு நிலை…  இது ஒரு நிலை.. அது அப்படி இருக்கும்… இது இப்படி இருக்கும் என்று..

எந்த விசுவாச சத்தியங்கள் குறித்து போதித்தாலும் அது கத்தோலிக்க திருச்சபையின் போதனையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர.. சொந்தக் கருத்துக்கள் கூடாது.. நீங்க என்ன வேனும்னாலும் சொந்தக் கருத்துக்கள் வைத்துக் கொள்ளுங்கள்.. அதை திருச்சபையின் போதனைக்கு எதிராக போதித்தால் அவர்களும் திருச்சபையை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று அர்த்தம்.. இதற்கும் யாரும் காது கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..

தங்கள் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும்… மக்களை ஈர்க்க வேண்டும் என்று என்னவெல்லாமோ பல வழிமுறைகளை பலர் கையாளுகிறார்கள்.. நீங்கள் எந்த வழிமுறையை கையாண்டாலும் தப்பித்தவறி கூட உங்கள் வாயிலிருந்து ஒரு தப்பரைக் கூட வரக்கூடாது… வந்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்டு மக்களுக்கு அதை சரியாகச் சொல்லவேண்டும்..

சில இடங்களில்.. சிலரிடம்… நிலமை சரியில்லை..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !