“ பரலோகத்தின் மெய்யான அப்பத்தை வாங்கிப் புசியுங்கள் “
இவ்வளவு தயை இனிமை நேசம் நிறைந்த அவ்வாக்கியங்கள் என்னைத் தூண்டுகின்றன. ஆனால் என் பாவங்களை நினைத்து அச்சப்படுகிறேன். இவ்வளவு மகத்தான தேவ திரவிய அனுமானத்தை நான் பெறாதபடி என் அசுத்த மனசாட்சி என்னைத் தடுக்கின்றது. உமது வாக்கியங்களின் இன்பம் என்னை அழைக்கின்றது. ஆனால் என் பாவங்களின் திரள் அன்னை தடுத்து நிறுத்துகின்றது.
உம்முடன் நான் பங்கடைய வேண்டுமானால் நான் முழு நம்பிக்கையோடு உம்மை அண்டி வர வேண்டும் என்றும், நித்திய சீவியத்தையும் மகிமையையும் அடைய எனக்கு ஆசையுண்டானால் சாகாத வரத்தைப் பெற்றுத்தரும் போசனத்தை நான் உட்கொள்ள வேண்டுமென்றும் கற்பிக்கின்றீர்.
“ வருந்திச் சுமை சுமை சுமக்கிறவர்களே! நீங்கள் அனைவரும் நம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு இளைப்பாற்றியைக் கட்டளையிடுவோம்.“ என்கிறீர்.
“ ஓ ! பாவியின் காதுக்கு இனிமையும் நேசமும் உள்ள வாக்கியமே ! என் ஆண்டவராகிய சர்வேசுவரா! ஏழையும், தரித்திரனுமானவனை உமது மிகவும் பரிசுத்த சரீரத்தின் சற்பிரசாத விருந்துக்கு அழைக்கின்றீர். ஆனால் ஆண்டவரே ! உம்மிடம் வரத்துணிபவன் யார்?. இதோ, “ உந்நத வான் மண்டலங்களில் நீர் அடங்கினவரல்ல, “ ஆயினும் நம்மிடத்தில் வாருங்கள் என்றழைக்கின்றீர்.
இவ்வளவு இரக்கமுள்ள கிருபைக்கும், இம்மாத்திரம் நேசமுள்ள அழைப்பிற்கும் காரணமென்ன? நான் உம்மிடத்தில் வர எப்படித் துணிவேன். என்னைத் தைரியப்படுத்தக்கூடிய யாதொரு நன்மை என்னிடத்தில் இல்லையே. உமது மிகவும் தயை நிறைந்த சமூகத்தில் அடிக்கடி துரோகம் (பாவம்) கட்டிக்கொண்ட நான் உம்மை எவ்விதம் என் வீட்டில் வரவழைப்பேன். தூதரும், அதிதூதரும் உம்மை நடுநடுங்கி வணங்குகிறார்கள். அர்ச்சிஷ்ட்டவர்களும், நீதிமான்களும் உமக்கு அஞ்சுகிறார்கள்; நீரோ “ அனைவரும் என்னிடம் வாருங்கள் “ என்கிறீர். ஆண்டவரே ! நீரே அதைச் சொல்லாவிட்டால் அது மெய்யென்று எவன் நம்பக்கூடும். நீரே கட்டளையிடாவிட்டால் உமதருகில் வர எவன் துணிவான். ?
இதோ ! நீதிமானாகிய நோவே சொற்ப ஜனங்களுடன் மரணத்திற்கு தப்பித்துக்கொள்ளும்படியாப் பெட்டகம் செய்வதில் நூறு வருஷ காலம் உழைத்தார்; நானோ ஆண்டவரே ! உலகத்தை உண்டு பன்னினவரை தக்க வணக்கங்களோடு உட்கொள்ள ஒரு மணி நேரத்தில் என்னை எவ்விதம் ஆயத்தப்படுத்தக்கூடும்?
நன்றி : கிறிஸ்துநாதர் அநுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்
“ ஆண்டவரே ! பாவி அடியேனை விட்டு அகலும் “ – இது ஒவ்வொரு முறை திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கும் முன்னால் ஐந்து காய வரம் பெற்றவரும் மிகப்பெரிய புனிதருமான புனித அசிசியார் தாழ்ச்சியோடு உதிர்த்த வார்த்தைகள்..
ஆனால் நாம் எப்படி ஆண்டவரை வாங்குகிறோம்…? என்ன மன நிலையோடு வாங்குகிறோம்? எந்த அளவு நம்மை தயாரித்து வாங்குகிறோம்? எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை பாவசங்கீர்த்தனம் செய்கிறோம்?
“வரிசையில் செல்லும் போதே பராக்கு... ஆண்டவரை வாங்க செல்கிறோம் என்ற உணர்வில்லை.. நாம் பாவி என்ற தாழ்ச்சி இல்லை..பராக்கோடு சென்று வாங்கிவிட்டு சிலர் கைகளில், வேறு பலர் இடக்கைகளில் வாங்கி விட்டு அதே பராக்கோடு அல்லது கொஞ்சம் பக்தியோடு வந்து ஒரு சில நிமிடங்கள் கூட செலவழிக்காமல் அடுத்து அறிக்கைகள் அல்லது பேச்சு போன்ற பராக்குகளுக்கு செல்வோர் நம்மிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள் “இது குறை சொல்ல அல்ல நம் நிலையை கொஞ்சம் யோசித்துப்பார்க்கவே…
திவ்ய நற்கருணை ஆண்டவர் முன்னால் நம்மையே தாழ்த்துவோம்; அவர் மூவொரு ஆண்டவர். ஆனால் நாம் பாவிகள்…அவருடைய அளவில்லாத இரக்கத்தினாலும், நம்மேல் கொண்ட அன்பாலும் நம்மைத் தேடி நமக்கு உணவாக வருகிறார்.. ஆகையால்..தகுந்த தயாரிப்போடு தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு நம்மை படைத்தவரை பக்தியோடு முழங்காலில் நின்று நாவில் வாங்குவோம்.. ( இப்போது சென்னையில் முக்கியமான ஆலயங்களில் கூட 99 சதவீதம் ஆண்டவரை நாவில் வாங்குவதைப் பார்க்க முடிகிறது)
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !