பாத்திமா காட்சிகள் பகுதி- 2

புனித சிறுமி லூசியா : லூசியா 1907-ம் ஆண்டு மார்ச் 22- நாள் அந்தோனி சாந்தோஸ்க்கும் மரிய ரோசாவுக்கும் மகளாகப் பிறந்தாள். அவர் தந்தை விவசாயி, கடவுள் பற்றுள்ளவர். அவர் தாய் உறுதியான விசுவாசமுள்ளவள்.

லூசியா தன் குழந்தைப்பருவத்தை நினைக்கையில், முதன்முதலில் அவளுக்கு நினைவு வருவது தன் தாய் அவளுக்கு அருள் நிறை மந்திரத்தை கற்றுக்கொடுத்த நிகழ்ச்சிதான். “ அருள் நிறைந்த மரியாயே வாழ்க..“ என்று எந்த மொழியில் கூறினாலும் அதில் ஒரு தெய்வீக இனினை உண்டு. போர்த்துக்கீசிய மொழியில் அது இன்னும் இனிமையுடன் ஒலிப்பதாக கூறப்படுகிறது.

முதல் பாடமாக லூசியா தன் தாயிடம் தேவ அன்னையை வாழ்த்தக் கற்றுக்கொண்டாள். எல்லாக் குழந்தைக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது அரிது. மரிய ரோசா அன்பும், கண்டிப்பும் உள்ள தாயாக இருந்தாள் என்பது லூசியாவின் கருத்து.

லூசியாவுக்கு ஆறு வயது. சிறுவர்களுக்கும் நற்கருணை வழங்கலாம் என்று அர்ச்.பத்தாம் பத்திநாதர் பாப்பரசர் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் உத்தரவு அளித்திருந்தார். மரிய ரோசா இந்த உத்தரவுப்படி தன் இளைய மகள் லூசியாவுக்கு ஆறுவயதிலேயே புது நன்மை கொடுக்க தீர்மானித்து அதற்கு அவளை ஆயத்தபடுத்தி வந்தாள். ஒரு குறிப்பிட்ட நாளில் தாயும் மகளுமாய் பாத்திமா பங்குக்குருவை பார்க்க சென்றார்கள்.

பங்குக்குரு லூசியாவிடம் வேத சத்தியங்களைப்பற்றி கேட்டார். திருப்தியாகப் பதிலளித்தாள் லூசியா. ஆயினும் குரு சற்று நேரம் சிந்தித்த பின் அவள் மிகவும் சிறு வயதாயிருப்பதால் ஒரு வருடம் பிந்தி நற்கருணை கொடுக்கலாம் என்று கூறிவிட்டார். இந்த ஏமாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கோவிலில் போய் யோசனையில் ஈடுபட்டாள் மரிய ரோசா. லூசியாவோ ஒரே அழுகை!.

அந்த நேரத்தில் புது நன்மை ஆயத்தப்பிரசங்கம் செய்ய வந்திருந்த சங்.குரூஸ் சுவாமி அங்கு வர நேர்ந்தது. தாயும், மகளும் இருந்த நிலையைப்பார்த்து காரணம் என்ன என்று கேட்டார். லூசியாவிடம் சில ஞானக்கேள்விகளை கேட்டார். பின் அவளைக் கூட்டிக்கொண்டு பங்குக்குருவிடம் சென்று, “ புதுநன்மை வாங்கச் செல்லும் மற்ற அநேக பிள்ளைகளை விட அதிக நன்றாய் இப்பிள்ளைக்கு வேதசத்தியம் தெறியும். ஆதலால் புதுநன்மைக்கு இவளை சேர்த்துக்கொள்ளலாம்” என்றார்.

அவளுக்கு ஆறு வயதுதானே ஆகிறது என்று பங்குக்குரு கூறினாலும் குரூஸ் சுவாமிகளின் வற்புறுத்தலில் மேல் லூசியாவை சேசு வாங்க அனுமதித்தார். லூசியா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். உடனே முதல் பாவசங்கீர்த்தனம் செய்ய ஆயத்தமானாள்.

சங். குரூஸ் சுவாமிகளிடமே லூசியா பாவசங்கீர்த்தனம் செய்தாள். கபடமே அறியாத குழந்தை, கோவிலில் இருந்தவர்களுக்கெல்லாம் கேட்குமளவு சத்தமாக பாவங்களைச் சொன்னாள். அது அவளுக்கே தெறியாது. அவளுக்குப் பாவப்பொருத்தல் அளிக்கும் அக்குரு, “ மகளே உன் ஆன்மா பரிசுத்த ஆவியின் இல்லமாயிருக்கிறது. அதில் அவர் செயல்புரியுமாறு எப்போதும் அதை தூய்மையாய் வைத்திரு “ என்றார்.

அப்படியே செய்வதாகக் கூறிவிட்டு லூசியா எழுந்து தேவதாயின் பீடத்தடியில் சென்று முழங்காலிட்டு மாதா சுரூபத்தை உற்றுப்பார்த்து; “ அம்மா, என் எளிய இருதயத்தை கடவுளுக்காகவே காப்பாற்றி வையுங்கள் “ என்று மன்றாடினாள். இப்படி அவள் கேட்டபோது, “ அந்த சுரூபம் புன்னகைத்து அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டது போலிருந்தது “ என்று லூசியா பின்னாளில் கூறினாள்.

தொடரும்..

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், புனித சூசை அச்சகம், ரோசா மிஸ்திக்கா, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983 ( விரும்புவர்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கப்படும் தொடர்புக்கு ஜேசுராஜ்- 9894398144)

சிந்தனை : இப்போதுள்ள பெற்றோர்கள் மரிய ரோசாவைப்போல அருள் நிறை, பரலோக மந்திரங்களை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்களா? அவர் பல பைபிள் ஞானக்கதைகளை தன் பிள்ளைகளுக்கு போதித்ததுபோல போதிக்கிறோமா? புது நன்மை எடுக்க மரிய ரோசா தயாரித்தது போல் நம் குழந்தைகளை நாம் தயாரிக்கிறோமா? அல்லது எப்படி கிராண்டா நடத்தாலாம்? சாப்பாட்டுக்கு யாரை அழைக்கலாம்? எங்கு மண்டபம் பார்க்கலாம்?, யார் யாரை அழைக்கலாம், பேனர், வீடியோ இது போன்ற உலகக் காரியங்களை மட்டும் கவனிக்கிறோமா? 

(இது தேவையில்லை என்று கூறவில்லை.. ஆனால் இதிலே முழ்கிவிட்டு நம் குழந்தைகளுக்கு கிடைக்க இருக்கும் ஆன்மீக பொக்கிஷம் குறித்து அலட்டிக்கொள்ளாமல் உலகக்காரியங்களை மட்டும் பார்த்தால் அத்திருவருட்சாதனத்தால் நம் குழந்தைகளுக்கு என்ன பயன்?

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !