பாத்திமா காட்சிகள் பகுதி- 27

ஆகஸ்ட் 13 மாதாவின் நான்காம் காட்சி நடைபெறவில்லை..ஏன்?

இதுவரை மூன்று காட்சிகள் நடைபெற்றுள்ளன. மக்கள் கருத்துக்கள் எத்தனையோ வகையில் உருவாகின. போர்த்துக்கள் முழுவதும் இச்செய்தி பரவியது. கத்தோலிக்க பத்திரிக்கைகள் பாத்திமா காட்சிகள் பற்றி சிறு சிறு கட்டுரைகள் வெளியிட்டன. ஆனால் காட்சி உண்மையா அல்லது ஏமாற்றமா என்ற கேள்வியும் எழுப்பின. திருச்சபையின் அதிகாரிகள் பாத்திமாவில் எதுவும் நடந்ததாக தங்களுக்குத் தெறியும் என்பதைக் கூட காட்டிக்கொள்ளவில்லை. லிஸ்பன் நகர்கர்தினால் கோ தா ஈரியாவுக்கு யாரும் போகக்கூடாது என்று தமக்கடியிலுள்ள குருக்கள் எல்லாருக்கும் தடை உத்தரவு பிறப்பித்தார். முதல் காரணம், பசாசு ஒளியின் தூதனைப்போல் வேடம் ஏற்றுக்கொண்டு விசுவாசிகளை ஏய்க்கக்கூடும் என்பது. இரண்டாம் காரணம் வேத விரோதியான ஆட்சி பீடம் பாத்திமாவில் கூடும் கூட்டத்தைச் சாக்காகக வைத்துக்கொண்டு மத சம்பந்தமான வெளியரங்க பக்தி முயற்சிகளை தடை செய்துவிடக்கூடும் என்ற பயம்.

அந்நாட்களில் போர்த்துக்கல் அரசு வேத விரோதிகள் கையில் இருந்தது. (பாருங்கள் மாதா அந்த சூழ்நிலையிலும் கத்தோலிக்க விசுவாசத்தைக் காப்பாற்ற காட்சி கொடுத்துள்ளார்கள்) அவர்கள் பத்திரிக்கைகள் எல்லாம் இக்காட்சிகளைப்பற்றி கேலி செய்து எழுதின. லிஸ்பன் நகரிலிருந்து வெளிவந்த “ ஓ சேக்குவா” என்ற  நாளிதழ் மோட்சத்திலிருந்து செய்தி...வியாபார நோக்கம் என்று எழுதின.

இது இப்படியென்றால் மக்கள் குழந்தைகளைக் கண்டு இல்லாத கேள்விகளையெல்லாம் கேட்டார்கள். தங்கள் மன்றாட்டுக்காக வேண்டும்படி விண்ணப்பித்தார்கள். “ மாதா சிறுமியாய் இருந்தபோது ஆடு மேய்த்தார்களோ?”  “ மாதா உருளைக்கிழங்கு சாப்பிட்டார்களோ?” என்பன போன்ற அநாவசிய அர்த்தமற்ற கேள்விகள் கேட்டு, அச்சிறுவர்களை புண்படுத்தினார்கள். அவர்கள் இதுபோன்ற தங்களைத் தேடிவரும் மக்களைப்பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

மரிய ரோஸாவுக்கு (கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியானவள்) இக்கூட்டங்களை பிடிக்கவில்லை. தன் மகளில் பொய்ப்பேச்சால் அல்லவா இந்த உபத்திரம் ஏற்பட்டது என்று நினைத்தால். அவளின் சகோதரியும் அவளைக் கேலி செய்தாள்.

ஜூலைமாதம் முடிந்து ஆகஸ்ட்மாதம் வந்துவிட்டது. வேத எதிர்ப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பிரச்சாரத்தை தீவிரமாகச்செய்து வந்தனர்.ஆகஸ்ட் 13- நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.அன்று காட்சி நடைபெறுமா? என்ன நடக்கும் என்பது பற்றி ஒரே பேச்சாக இருந்தது. அவர்கள் வாழ்ந்த நகர அதிகாரம் இவ்விஷயத்தை கடுமையாக எதிர்த்து நின்றது. லூசியாவின் தந்தை அந்தோணி சாந்தோஸுக்கும், பிரான்சிஸ், ஜஸிந்தாவின் தந்தை மார்ட்டோவுக்கும் ஆகஸ்ட் 11-ம் நாளன்று நகர ஆட்சி மன்றத்தில் காட்சி கண்ட குழந்தைகளுடன் ஆஜராகுமாறு உத்தரவுகள் வந்தன.

லூசியாவின் தந்தையும், பிரான்சிஸின் தந்தையும்(லூசியாவின் மாமா) லூசியாவை மட்டும்தான் அழைத்து வந்திருந்தார்கள். நகராட்சி மன்றத்தலைவர் ஆர்ட்டுரோ ஒலிவேய்ரா என்பவரின் முன் நிறுத்தப்பட்டார்கள்.

ஆர்ட்டுரோ ஒரு ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர். ஆனால் இளமையிலேயே உலக ஆதாயக்கொள்கையையும், பகுத்தறிவுவாதமும் அவை சிந்திக்கவிடாமல் பற்றிக்கொண்டன. 1910-ல் நடந்த புரட்சி இவரை ஒரு சமைய எதிர்ப்பாளராக மாற்றி விட்டது.

தன் முன் நிறுத்தப்பட்டிருந்த மூன்று நபர்களையும் ஒரு பார்வையால் அளந்துவிட்டு, தன் கையாட்களான நிர்வாக உதவியாளர் நடுவில் சிங்கம் போல் நிமிர்ந்து கடுமையான குரலில்,

‘அந்த பையனை எங்கே?’ என்று கேட்டார். தன் மகன் பிரான்சிஸைத்தான் கேட்கிறார் என்று அறிந்த மார்ட்டோ பதில் கூறினார்:

“ஐயா, இங்கிருந்து (நகராட்சி மன்றம் இருந்த ஊர் அவ்ரம்) எங்கள் ஊர் 9 மைல் தூரம் உள்ளது. அக்குழந்தைகள் இவ்வளவு தூரம் நடக்கமுடியாது. குதிரையிலோ அல்லது பர்ரோ முதுகிலோ சவாரி செய்து பழக்கமில்லாததால் அது பாதுகாப்பாக இல்லை. (பர்ரோ என்பது குட்டையான பொதி மிருகம். அதன் மேல்தான் லூசியா அமர்ந்து வந்தாள்)

மார்ட்டோவையும், அந்தோணி சாந்தோஸையும் கண்டித்து பேசியபின் லூசியாவைப்பார்த்தார். லூசியா நேரே பார்த்த பார்வையுடன் நின்றாள்.

“ நீ கோவா தா ஈரியாவில் ஒரு பெண்ணைப்ப் பார்த்தாயோ? அவள் யார் என்று நினைக்கிறாய்? அப்பெண் ஒரு இரகசியம் சொன்னாளாமே, உண்மைதானா? அந்த இரகசியம் என்ன? நீ இனிமேல் அங்கு போகக்கூடாது தெறிகிறதா?” என்று பல கேள்விகளை ஆர்ட்டுரோ அடுக்கினார். லூசியா பேசாமல் நின்றாள்.

“ அந்த இரகசியத்தை என்னிடம் கூறு” என்று மீண்டும் கேட்டார் தலைவர்.

“ கூற மாட்டேன் “ என்றாள் லூசியா.

ஆர்ட்டுரோவின் ஆத்திரம் மீண்டும் பொங்கியது.

“இங்கே பாருமய்யா..நீர்தான்! பாத்திமாவில் மக்கள் இதை நம்புகிறார்களா?” என்று லூசியாவின் தந்தையிடம் எரிச்சலுடன் கேட்டார் அதிகாரி.

“ இல்லை ஐயா! ஒருவரும் நம்பவில்லை.இதெல்லாம் பெண்களின் கதை அவ்வளவுதான்” என்றார்.

“ நீர் என்ன சொல்கிறீர்?“ என்று மார்ட்டோவிடம் திரும்பினார் ஆர்ட்டுரோ.

“ உங்கள் உத்தரவுப்படி இங்கே நிற்கிறேன். என் பிள்ளைகளும் நான் கூறுவது போலவே சொல்கிறார்கள்.” 

“ அதாவது, இதெல்லாம் உண்மையென்றுதான் நீர் நினைக்கிறீரா?”

“ ஆம். அவர்கள் சொல்வதையெல்லாம் நான் நம்புகிறேன்.”

மார்ட்டோ இப்படிச் சொன்னவுடன் அங்கிருந்த எல்லோரும் கேலியாகச் சிரித்தனர். மார்ட்டோ அதைப்பொருட்படுத்தாமல் நேராக நின்றார்.

ஆர்ட்டுரோவுக்கு, இந்தப் பிரச்சனை வேறு முறையில் அணுகப்பட வேண்டும் என்று தோன்றியது. இவர்களை இங்கு நிறுத்தி இப்படி கேள்வி கேட்டு எதுவும் நடவாது. எனவே மூவரையும் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார். அவர்கள் வெளியே செல்கையில் அவர் எழுந்து கதவு எழுந்து கதவு வரையிலும் சென்று லூசியாவைப் பார்த்து, “ நீ அந்த இரகசியத்தைக் கூறாவிட்டால் உன் உயிரை இழக்க நேரிடும்” என்று கடுமையாக கூறி எச்சரித்தார். லூசியா திடுக்கிட்டுப்போனாள்.

தொடரும்...

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9894398144

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !