தேவமாதா யார்? பகுதி-24 : மாதாவுக்கு மனித அறிவைப்பயன்படுத்த அடுத்து வந்த சோதனை என்ன?

“அது தனித்து நிற்பினும், அனைத்தையும் செய்ய வல்லது; தான் மாறாமல் நிலைத்திருந்து, அனைத்தையும் புதுப்பிக்கிறது; ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்த ஆன்மாக்களில் நுழைந்து, அவர்களைக் கடவுளின் நண்பர்களாகவும் இறைவாக்கினர்களாகவும் ஆக்குகிறது.

ஞான ஆகமம் 7 : 27

மாதாவுக்கு மனித அறிவைப்பயன்படுத்த அடுத்து வந்த சோதனை என்ன ?

இதோ! ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, "எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.

மத்தேயு  2 : 13

மேலே இறை வார்த்தையை நன்றாக தியானித்துப்பாருங்கள்..

அன்று காலையிலதான் மூன்று ராஜாக்கள் எங்கேயோ இருந்து வந்து பாலன் இயேசுவை சந்தித்து, வணங்கி, ஆராதித்து, பரிசுப்பொருட்களைக் கொடுத்து, அவரைப் வாயாரப் புகழ்ந்து சென்றிருக்கிறார்கள்.. அவர்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்.. வழியில் தங்கள் விண்மீன் அனுபவத்தைப் பற்றி பேசியிருப்பார்கள்.. “ உங்கள் குழந்தை சாதாரண குழந்தை அல்ல.. மீட்பர்.. மெசியா.. அவரைப் பற்றி என்னவெல்லாம், எங்கேயெல்லாம் எழுதியிருக்கிறது என்று சொல்லியிருப்பார்கள்..

மாதா அன்று இரவு பாலன் இயேசுவைப் பற்றி ஞானிகள் சொல்லியதைப்பற்றியும், அவர்கள் வருகையையும், நடந்தையையும் சிந்தித்துக் கொண்டே பாலன் இயேசுவின் அருகில் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள்..

அதே போல் புனித சூசையப்பர், “ உலக மீட்பர்.. மூவுல அரசர், கடவுளுக்கே வளர்ப்புத் தந்தையாகும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது.. கடவுளே என் அருகில் இருக்கிறார்.. எனக்கு என்ன கவலை என்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்திருப்பார்..

நடு சாமத்துல அவரை வானதூதர் எழுப்பி பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போக சொல்கிறார்.. நடந்து கூட போகக்கூடாது ஓடிப்போகனுமாம்.. அவ்வளவு அவசரமான எச்சரிக்கை மற்றும் உத்தரவு.. 

எப்படிப்பட்ட சூழ்நிலை புனித சூசையப்பருக்கு.. ராத்திரி எந்திரிச்சு, மாதாவை எழுப்பி, வானதூதர் சொல்லியதை சொல்லி உடனே புறப்பட வைத்து, குழந்தையை தூக்க சொல்லி, ராத்திரியில போயி ஒரு கோவேரு கழுதையை பிடிச்சுட்டு வந்து, அதில மாதாவையும், சேசுவையும் ஏற்றி உடனே புறப்பட்டார் கண் காணாத எகிப்து தேசத்திற்கு.. நாடுவிட்டு நாடு தெரியாத இடத்திற்கு புறப்பட்டு போகிறார்..

நிறைய பேருக்கு புனித சூசையப்பரைப் பற்றி ரொம்பவே இளக்காரம்.. அவரு அவங்களுக்கு.. ஒரு சாதாரன சின்ன ஆள்.. அவரு என்ன பெரிசா செஞ்சிட்டார்னு நினைப்பு... மாதாவுக்கு அடுத்தபடியாக மோட்சத்தில் அத்தனை மகிமைக்கும் சொந்தக்காரர் அவர்தான்.. மிகப்பெரிய வல்லமையுள்ளவர்..

ஆண்டவருக்காக அவர் பட்ட கஷ்ட்டங்கள் எத்தனை.. எத்தனை.. அதில் ஒன்றுதான் எகிப்திற்கு அகதியாக சென்றது..

கிட்டதட்ட 696 கி.மீ. மாதாவையும், இயேசுவையும் கூட்டிகொண்டு சென்றார்..

புனித சூசையப்பரும் மனித அறிவைப் பயன்படுத்தவில்லை.. பயன்படுத்தியிருந்தால் என்ன நினைத்திருப்பார்..

“ என்னய்யா இது கடவுளை நான் காப்பத்தனுமா? அவருதானே என்னைக் காப்பாத்தனும் -னு “ நினைச்சிருப்பார்..

அவரை மிகச்சாதாரனமாக நினைக்கும் மற்றவர்கள் அவர் இடத்தில் இருந்தால் என்ன நினைத்திருப்பார்கள்..

“முதல்லேயே நான் பாட்டுக்கு அவளை மறைவாய் விலக்கிவிடலாம்னு இருந்தேன்.. அப்போ ஒரு தூதர் வந்தார் “ அவர் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான்னு சொன்னார்.. சரி  நாம கடவுளுக்கே வளர்ப்பு அப்பாவாகலாம்.. அவரு கூடவே இருக்கலாம்.. அவரு நமக்கு நிறைய செய்வார்.. தொழில் நல்லா நடக்கும்ணு  பார்த்தால் இங்கே வேற எதுவோ நடக்குதே.. கடவுள நான் காப்பாத்தனுமா? அப்போ அவரு கடவுளு இல்லையா? என்னய்யா நடக்குது இங்கே ?” என்று இன்னும் என்னவெல்லாமோ நினைத்திருப்பார்கள்..

ஆனால் சூசையப்பர் எதுவும் நினைக்கவில்லை.. தன்னுடைய மனித அறிவைப் பயன்படுத்தவில்லை.. கீழ்ப்படிந்தார்.. கடவுளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார்.. மாதாவை ஏற்றுக்கொள்ள தயங்கியபோதும் கடவுளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார்.. இப்போது “நீதான் குழந்தையை காப்பாத்தனும்.. அதாவது கடவுளைக் காப்பாத்தனும்’ சொல்லும்போதும் அப்படியே கீழ்ப்படிந்தார்.. அதுதான் புனித சூசையப்பர்.. ஆனால் மிகப் பெரிரிரிரிய்ய்ய்ய சூசையப்பர்..

இப்போது மாதாவுக்கு வருவோம்..

சூசையப்பரை விட மாதாவுக்குத்தான் கடவுளுடைய வெளிப்பாடுகள் அதிகம்… ஆனால் நம் தேவ தாயார் எந்த கேள்வியும் கேட்கவில்லை.. உடனே கீழ்ப்படிந்தார்.. ஞானம் நிறை கன்னிகை.. தேவ ஞானத்தோடு தேவ சித்தத்திற்கு அப்படியே பணிந்தார்.. மனித அறிவை அப்போதும் பயன்படுத்தவில்லை..

அந்த நடு இரவு குளிரையும் பொருட்படுத்தாமல், கலக்கத்தோடும், அச்சத்தோடும் பாலன் இயேசுவை வாரி அணைத்துக்கொண்டு பிள்ளையைக் காப்பாற்ற.. அதாவது.. கடவுளைக் காப்பாற்ற கண்காணா தேசமான எகிப்திற்கு புனித சூசையப்பரோடு பயணமாக தயாரானார்கள்..

கடவுளுக்கு சித்தமானால் எகிப்திற்கு பயணம் தொடரும்.. மாதாவோடு..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம்.. ஜெபிப்போம் ஜெபமாலை..”

பரிசுத்த ஆவியானார் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !

மரியாயே வாழ்க !