பாத்திமா காட்சிகள் பகுதி- 18

மாதாவின் முதல் காட்சிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள்... தொடர்ச்சி.. – சிறுவர்களின் பரித்தியாகங்கள்...

பாவிகள் மனந்திரும்பும்மாறு கடின தவம் செய்ய வேண்டும் என்ற ஆவல் மூன்று குழந்தைகளையும் கௌவிக் கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும். அவ்வருடம் கோடைக் காலத்தில் ஒருநாள் லூசியாவின் பெற்றோர் குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு வயலை நோக்கி மூவரும் சென்றார்கள். வழியில் தங்கள் மதிய உணவுப் பொட்டலங்களை வழக்கம்போல் ஏழைச் சிறுவர்களுக்குக் கொடுத்துவிட்டு நடந்தார்கள். வயலை அடைந்தபோது, வெயிலாலும், நடையாலும் மிகவும் களைத்துவிட்டார்கள். கடும்பசி ஒரு பக்கம், குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கூட அகப்படவில்லை. தண்ணீர் இல்லாவிட்டால் பரவாயில்லை. நல்லதுதான். நம் தாகத்தை பாவிகளுக்காக ஒப்புக்கொடுப்போம் என்று மூவரும் பேசிக்கொண்டனர். 

ஆனால் நடுப்பகல் தாண்டவும், வெப்பம் தாங்க முடியாமலும், தாகம் சகிக்க முடியாமலும் இருந்தது. கொஞ்சம் தொலைவில் தெறிந்த ஒரு வீட்டுக்கு சென்று தாகத்தை தணிக்கலாம் என்று லூசியா ஆலோசனை கூற மூவரும் புறப்பட்டார்கள். அந்த வீட்டுப்பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்கள். அவள் இரக்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், கொஞ்சம் ரொட்டியும் கொடுத்தாள். ரொட்டியை ஆளுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு தண்ணீரை அந்த வயலுக்குக் கொண்டு வந்தார்கள். இவ்வளவு தாகமாயிருந்தாலும் யாரும் தண்ணீரை இன்னும் குடிக்க வில்லை.

வயலுக்கு வந்து சேர்ந்ததும் லூசியா தண்ணீரை பிரான்சிஸிடம் கொடுத்து, “குடி” என்றாள்.

“ எனக்கு வேண்டாம்” என்றான் பிரான்சிஸ்.

“ ஏன்? “

“ பாவிகள் மனந்திரும்வுவதற்காக கஷ்ட்டப்பட விரும்புகிறேன் “

“ நீ குடி ஜஸிந்தா “

“ நானும் பாவிகளுக்காக பரித்தியாகம் செய்ய விரும்புகிறேன்”

இதன் பின் நடந்ததை லூசியா கூறுகிறபடி கேட்போம்.

“ நான் அந்த தண்ணீரை ஆடுகளுக்காக ஒரு பாறைக் குழியில் ஊற்றினேன். பின்னர் பாத்திரத்தை அந்தப் பெண்ணிடம் திரும்பிக் கொடுக்கச் சென்றோம். ஒவ்வொரு நொடியும் உஷ்ணம் ஏறிக்கொண்டேயிருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு குட்டையிலுள்ள தவளைகளும், துள்ளுத் தட்டாண்களும், வெட்டுக் கிளிகளும் மிகச் சத்தமாக சகிக்க முடியாதபடி இரைச்சலிட்டுக் கத்திக் கொண்டிருந்தன. பசியாலும், தாகத்தாலும் வாடிச் சோர்ந்திருந்த ஜஸிந்தா தன் இயல்பான குணத்துடன்,

“ இந்த வெட்டுக்கிளிகளையும், தவளைகளையும், பேசாமலிருக்கச் சொல்லுங்கள். எனக்குப் பெரிய தலை வேதனையாக இருக்கிறது “ என்றாள்

உடனே பிரான்சிஸ், “ நீ இதைப் பாவிகளுக்காக சகித்துக் கொள்ள விரும்பவில்லையா?” என்றான்.

ஜஸிந்தா தன் தலையைத் தன் இரு கரங்களாலும் அமுக்கிப் பிடித்தபடி, 

“ விரும்புகிறேன். அவைகள் பாடட்டும் “ என்றாள்.

நம் அன்னையின் முதல் விண்ணப்பத்தை இக்குழந்தைகள் எவ்வளவு தூரம் ஏற்றுக் கடைப்பிடித்தார்கள் என்று இதிலிருந்து நாம் உணர முடியும். பாவிகள் மனந்திரும்பும்படி பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்பதை அம்முதற்காட்சியே இவ்வளவு ஆழமாக அவர்களுக்கு உணர்த்தியிருந்தது.

ஒருநாள் வெளியிலிருந்து வந்த இரண்டு குருக்கள் லூசியாவுடன் அன்பாகப் பேசினார்கள்.

நன்றி : பாத்திமா காட்சிகள், மாதா அப்போஸ்தலர்கள் சபை. பாத்திமா காட்சிகள் நூல் மற்றும் சிறந்த கத்தோலிக்க நூல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள  Ph. 0461-2361989, 9487609983, 9487257479

சிந்தனை : எவ்வளவு சின்ன சிறுவர்கள் தங்கள் பரித்தியாகத்தினாலும் ஆன்மாக்கள் மேல் கொண்ட தாகத்தினாலும் ஆண்டவரின் கல்வாரிப் பாடுகளுக்கு சென்று திரும்பியிருக்கிறார்கள் பாருங்கள். அன்று நம் ஆண்டவர் எத்தனைக் கொடிய தாகத்தை அனுபவித்திருப்பார். வியாழன் இரவிலிருந்து, வெள்ளி  நன்பகல் வரை ஒரு சொட்டு நீர் கூட பருக வில்லை. சிலுவையில் அறையப்பட்ட பின்பு அதுவும் சில மணி நேரங்கள் கழித்த பின்புதான்,

“ தாகமாயிருக்கிறது “ என்றார்.. அதுவும் தண்ணீர் கேட்டாரா? அல்லது அதுவும் அவர் ஆன்மாக்கள் மேல் வைத்திருந்த தாகமா? தெறியாது..

நாமும் கூட இந்த சிறுவர்கள் செய்வது போல தாகம் எடுக்கும் போது ஒரு பத்து நிமிடங்கள் கழித்தாவது தண்ணீர் பருகலாம்.. அந்த பத்து நிமிட ஒறுத்தல் முயற்சி ஒரு ஆன்மாவைக் காப்பாற்றும்… அதே போல் நம் குழந்தை இயேசுவின் தெரசாள் போல் சிறு சிறு ஒறுத்தல் முயற்சிகள், நாம் சந்திக்கும் அசவுகரீங்கள், கஷ்ட்டங்கள், வலிகள் இப்படி சின்ன சின்ன சிலுவைகளை பாவிகள் மனந்திரும்ப ஒப்புக்கொடுக்கலாம்.. முதலில் நம் பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்…

இதுதான் மாதா கேட்ட.. கேட்கும்.. விஷயங்கள்.. ஜெப தவ பரித்தியாகங்கள்.. 

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !