கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 14

“நம் பகைவனின் கையினின்று விடுதலை பெற்று, அச்சமின்றி நம் வாழ்நாளெல்லாம் அவர் முன்னிலையில் புனிதத்தோடும் நீதியோடும் அவருக்குப் பணி புரிய தாம் வழிவகுப்பதாக அவர் நம் தந்தையாம் ஆபிரகாமுக்கு அளித்த உறுதி மொழியையும், தமது பரிசுத்த உடன்படிக்கையையும் நினைவு கூர்ந்தருளினார்” லூக்காஸ் 1: 72-75

மேற்கண்ட சக்கரியாசின் பாடலிருந்து நாம் என்ன செய்யவேண்டும் ? எப்படி வாழ வேண்டும் ? என்று புலனாகிறது. 

நம் பகைவனின் கையினின்று விடுதலை பெறும் முன் நம் பகைவன் யார் என்பதை அடையாளம் காண வேண்டும்.

சிரிய பகைவனிலிருந்து பெரிய பகைவனுக்கு செல்வோம். பொறாமை, வெறுப்பு, அடுத்தவர்கள் துன்பப்பட்டால் மகிழ்ச்சி, பெருமை பேசுதல் அதாவது தற்புகழ்ச்சி, உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தும் செய்யாமை, கர்வம், ஈகோ, விட்டுக்கொடுக்காமை, பகை, மன்னியாமை இன்னும் பல..

பெரிய பகைவனுக்கு வருவோம், புகைப் பழக்கம், போதைப்பழக்கம் இன்னும் உள்ளத்திற்குள் இருக்கும் பெரிய பெரிய சாத்தான்கள் அது என்ன என்பது அவர்களுக்குத்தான் தெரியும். வெளியில் நல்லவர்கள் போல் காட்சி தருவார்கள் ஆனால் உள்ளத்திற்குள் அருவருப்பாக காட்சி தருவார்கள்..

உள்ளத்தில் இருப்பதை அடுத்தவர்களிடம் மறைக்கலாம். ஆண்டவரிடம் மறைக்கமுடியாது. உள்ளத்தில் இருப்பதை கண்ணாடியில் காண்பதைப்போல் காண்பவர் கடவுள். அடுத்தவர்களுக்கு நல்லவர்களாக இருப்பதா ? ஆண்டவருக்கு நல்லவர்களாக இருப்பதா?

ஆண்டவர் இயேசுவின் கீழ்கண்ட வார்த்தை 100/100 உண்மை..

“ வெளிப்படாமல் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகமலும் மறைந்திருப்பது ஒன்றுமில்லை “ லூக்காஸ் 8 :17

ஆகவே உள்ளத்தில் இருக்கும் மறைந்திருக்கும் பாவங்களை உண்மை இறைவனிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பு பெற்று மீண்டும் அது போன்ற பாவத்திற்கு உட்படாமல் நம் ஆன்மாவை காப்போம்.

திருவருகைக் காலமும் தவக்காலம் போன்றதுதான். தவக்காலத்தில் எப்படி நம்மை தயாரிக்கிறோமோ அதைப்போல திருவருகைக்காலத்திலும் நம்மை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் இயேசு பிறப்பு விழா உண்மை உள்ளதாக இருக்கும்.

ஜெபம் : எல்லாம் அறிந்த இறைவா ! உள்ளத்தில் இருப்பதை “ உள்ளங்கை நெல்லிக்கனியாக அறியும் உம்மிடம் நான் எதை மறைப்பது ? எதையும் என்னால் மறைக்க முடியாது. என் உள்ளத்தில் இருக்கும் உமக்கு பிடிக்காத, உமக்கு வேண்டாத ஆசைகளுக்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். இன்றே இப்பொழுதே அவைகளை தூக்கி எறிந்து விட்டு உம்மிடம் ஓடி வருகிறேன். எனக்கு அடைக்கலம் கொடுப்பீரா ? தேற்றுவீரா ? என்னை தாங்குவீரா ? இறைவா !

என் மகனே ! என் மகளே உனக்காகத்தானே நான் காத்துக்கொண்டிருக்கிறேன். காணாமல் போன ஆட்டுக்குட்டியான உனக்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததும் மற்ற 99 ஆட்டுக்குட்டிகளை விட உன்னில் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏன் ?

நீ காணமல் போயிருந்தாய்..இப்போது கிடைத்துவிட்டாய்..

தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு தயாரிப்போம் – ஆமென்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !