தேவமாதா யார்? பகுதி-12 : திருவெளிப்படு 12

கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் இன்னும் எல்லா காலமும் இருக்கும் ஒரே அதிகாரம் திருவெளிப்பாடு 12.. மிக முக்கியமான அதிகாரமும் கூட.

திருவெளிப்பாடு 12-ன் ஆரம்பம் திருவெளிப்பாடு 11-ன்றின் கடைசி வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறது.. 

கி.பி. 1200 வரை பைபிளில் அதிகாரங்கள் பிரிக்கப்படவில்லை.  அதன் பின்னரே பிரிக்கப்பட்டது அதனால் 12- அதிகாரத்திற்கு சொந்தமான ஒரு வசனம் 11- அதிகாரத்திற்கு சென்றுவிட்டது..

(நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)..

இப்போது இரண்டையும் நாம் இணைத்து விடுவோம்..

“பின்பு விண்ணகத்தில் கடவுளின் ஆலயம் திறக்கப் பட்டது. உடன்படிக்கையின் பேழை அவரது ஆலயத்தினுள் காணப்பட்டது. மின்னல்களும் பேரிரைச்சலும் இடிமுழுக்கமும் நில நடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின” 

“விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.”

திருவெளிப்பாடு 11: 19, 12 : 1

மாதா கடவுளின் ஆலயமா? ஆமாம்..

மாதாதான் புதிய  உடன்படிக்கையின் பேழையா ? ஆமாம்..

மாதாவுக்கு எத்தகைய வல்லமை உள்ளது ? நிலவின் மீது நின்று கொண்டு சூரியனை ஆடையாக உடுத்திக்கொண்டு தலையில் நட்சத்திரங்களை பறித்து முடியாக சூடிக்கொள்ளும் அளவிற்கு வல்லமை..

அந்த வல்லமை எப்போது மாதாவுக்கு கிடைத்தது..?

ஆண்டவர் பிறந்த பின்பா? பிறக்கும் முன்பா?

ஆண்டவர் பிறக்கும் முன்பே என்று சொல்லுகிறது இறைவார்த்தை..

மேலே சொன்னது எதுவும் நாங்கள் சொல்லவில்லை பைபிள் சொல்லுகிறது..

மாதாவுக்கு இத்தகைய வல்லமையைக் கொடுத்து அழகுபார்ப்பது யார்?

பிதாவாகிய சர்வேசுவரன்..

ஆக ஆண்டவர் இயேசு சுவாமி பிறக்கும் முன்பே இத்தகைய வல்லமையைக் கொடுத்தபிதா ஆண்டவர் பிறந்தபின் எடுத்துவிடுவாரா? இன்னும் அதிகமாக கொடுப்பாரா?

ஆண்டவரை வளர்த்து உணவூட்டி.. ஆளாக்கி, நற்செய்திபணி ஆற்றவும் துணை நின்று, யார் ஆண்டவரை விட்டு ஓடிப்போனாலும் மீட்புத்திட்டத்தின் கடைசிவரை துணை நின்று அவர் பாடுகளில் பங்கெடுத்து இணை மீட்பராக அத்தனை பணிகளையும் செய்த மாதாவுக்கு… பிறக்கும் முன்பு கொடுத்ததை விட ( வல்லமை X 10) power 10 -தானே கொடுத்து அழகு பார்ப்பார் நம் நேசப்பிதா..

நாம் இப்போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கிறோம்.. அதற்கும் முந்தைய காலத்திற்கும் போவோம்..

ஆனால் அதற்கு முன்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், கத்தோலிக்கர்கள் அல்லாத  கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்..

கத்தோலிக்கர் அல்லாதவர்கள் பைபிள்ல இருந்தாதான் எதையுமே நம்புவார்கள்.. இல்லாவிட்டால் நம்பமாட்டார்கள்.. ஏன்னா அவங்களுக்கு ரெக்கார்டு வேனும்… ரெக்கார்டு ரொம்ப முக்கியம்.. ஆனா அதே ரிக்கார்டை.. அந்த ஆதாரத்தை.. அவங்க அம்மாகிட்ட கேட்க மாட்டாங்க. அப்பாகிட்ட கேட்க மாட்டாங்க.. சொந்தபந்தங்ககிட்ட… தாத்தா பாட்டி.. பூட்டன் பூட்டி இல்ல அதுக்கு மேலே யாருகிட்டயும் கேட்க மாட்டாங்க.. ஆனா கடவுள் கிட்ட மட்டும் கேட்பாங்க “ எங்கெய்யா ஆதாரம் “ என்று, அப்புறம்  கடவுளின் அம்மாகிட்டயும் கேட்பாங்க..

ஆனா இந்த கத்தோலிக்கர்கள் இருங்காங்களே .. அவங்களுக்கு பைபிள் தெரியாது (அப்படித்தான் அவங்க சொல்றாங்க. அதில் பாதி உண்மையும் இருக்கிறது).. பெரிய விவிலிய ஞானம் இல்லை.. பெரிய ஆன்மீக அறிவு இல்லை.. புரியாத விசயங்களை நோண்ட மாட்டார்கள்.. ஆனால் விசுவசிப்பார்கள்.

திருச்சபை என்ன சொல்லுதோ அதை அப்படியே நம்புவாங்க.. என்ன செய்ய சொல்லுதோ அதை அப்படியே செய்வாங்க.. ஆதாரம் இருக்கான்னு

எதிர்கேள்வி கேட்க மாட்டாங்க.. உடனே பைபிளை புரட்ட மாட்டாங்க.. ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.. இதுதான் கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கும் உள்ள வித்தியாசம்..

ஆனால் கத்தோலிகர்கள் செய்ய வேண்டியதை திருச்சபை செய்துவிடும்..

எல்லாவற்றையும் ஆய்ந்து ஆராய்ந்து அலசி ஆதாரங்களை கண்டு.. கண்டுபிடித்துதான்.. அதை அமல்படுத்தும்.. விசுவாச பிரகடனமாக அறிவிக்கும்.. அது திருச்சபையின் வேலை.. கத்தோலிக்கர்களாகிய எங்கள் வேலை இல்லை..

திருச்சபை அறிவிப்பதை நம்புவதும், விசுவாசமாக ஏற்பதும், அவர்கள் சொல்வதைச் செய்வதுமே எங்கள் வேலை..

எங்களுக்கு பைபிள் தெரியாதுதான்.. ஆனால் நாங்கள் 2000 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கும் மாதாவின் பிராத்தணையில் பைபிள் வரிகள் இருக்கிறதே.. அதுதான் கத்தோலிக்கத்தின் சிறப்பு..

“ சொர்ணமயமாயிருக்கிற ஆலயமே “ – மாதா கடவுளின் ஆலயம்…

“ வாக்குதத்தின் பெட்டியே “ – மாதா உடன்படிக்கையின் பேழை..

மேலே குறிப்பிட்டது யாரையும் புண்படுத்த அல்ல.. அவர்களும் மாதாவை நேசித்தால்.. அவர்களும் தாயுள்ள பிள்ளைகளாகிவிடுவார்கள் அதற்குத்தான்.

குறிப்பு : திருவெளிப்பாடு 11: 19 -ம் புனித அந்தோணியாருக்கு தேவமாதா கொடுத்தவிளக்கமே..

“ ஆதி அந்தமும் அவள்தான் நம்மை ஆளும் நீதியும் அவள்தான்…

அகந்தையை அழிப்பாள்.. ஆற்றலைக் கொடுப்பாள்..

அவள்தான் அன்னை மகாசக்தி..

அந்த தாயில்லாமல் நானில்லை.. ( நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)

ஆண்டவருக்கு சித்தமானால் தொடர்வோம்..

நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !