கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 04

திருவருகைக்காலமும் ஒரு மினி தவக்காலமே. நம்முடைய பாரம்பரிய சபைகள் இக்காலத்தை தவக்காலமாகவே அனுசரிக்கின்றன. ஏனென்றால் திருவருகைக்காலமும் ஒரு தயாரிப்புக்காலமே. இயேசுபாலனை வரவேற்க நாம் நம்மையே தயாரிக்க வேண்டும். இந்த தயாரிப்பு ஒரு உள்ளார்ந்த ஆன்மீக தயாரிப்பாக இருக்க வேண்டும். இந்த தயாரிப்பு ஜெபம்;தவம்; பரிகாரம் கலந்ததாக இருக்க வேண்டும். இது வெறும் மட்டும் புறத்தயாரிப்பாக இருக்கவே கூடாது.

நம் இயேசு மீட்பர் நம் உள்ளத்தில் வந்து பிறக்க நம்மிடத்தில் எது தடையாக இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய ஆன்மா யாரை அன்பு செய்கிறது? எதை அன்பு செய்கிறது ? நம் நாட்டமெல்லாம் எதன்மீது இருக்கிறது என்று சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். ஒரு வேளை அது இயேசுவைவிட்டு வெகு தூரத்தில் இருக்கலாம். இயேசுவுக்கு பிடிக்காதவைகளை நம் ஆன்மாக்கள் சுமக்கலாம். அவர் மிகவும் விரும்புவது நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். 

ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் அவர் விரும்புவது தூய்மை; வெறுப்பது பாவம். நாம் பாவத்தை வெறுக்க வேண்டும்; வேரருக்க வேண்டும். பாவ காரியங்களில் நம் சிந்தனைகளை, செயல்களை செலுத்தக்கூடாது. முதலில் பாவத்தை விட்டுவிட தீர்மானம் செய்ய வேண்டும். நம்மை பாவத்திலிருந்து விலக்கி கொண்டுவரத்தான் ஜெப தவ ஒறுத்தல் முயற்சிகள் தேவைப்படுகிறது.

ஒரு வருடத்தில் நாம் அதிகம் பாவம் செய்யாத காலம் தவக்காலம். ஏன் அப்போதுதான் நாம் நிறைய தவமும், ஒறுத்தல் முயற்சியும் செய்வோம். இயேசுவுக்காக ஒருசந்தி, சுத்தபோசனம் இருக்கும்போது நம் ஆன்மா பாவத்தை எதிர்க்க சக்தி பெற்றிருக்கிறது. நாம் எப்போது ஜெபத்தில் ஒன்றிக்க முடியும் தவம் செய்யும்போதும் ஒறுத்தல்கள் செய்யும்போதுதான்.

இப்படி எதுவுமே செய்யாமல் நன்றாக உண்டு விரும்புபவைகளையெல்லாம் சாப்பிட்டு சவுகரீகமாக அமர்ந்து இறைவனோடு ஒன்றித்து ஜெபிக்கப் போகிறேன் என்றால் அதற்கு சாத்தியம் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட நிலையில் ஜெபிக்கப்படும் ஜெபங்கள் எத்தனை பலன் தந்துள்ளன என்பது அப்படி ஜெபித்தவர்களுக்கே வெளிச்சம்.

எப்போது நாம் ஆன்ம ஒடுக்கத்தோடு ஜெபிக்கிறோமோ அந்த ஜெபத்திற்கு பலன் அதிகம். அதுபோல நாம் நம்முடைய சிலுவைகளை சுமக்காமல் மற்றவர்களுக்கு போதித்தால் அது இருவருக்குமே பலன் தராது. இயேசுவின் அத்தனை போதனைகளும் போதிப்பது அதுதான்.

எளிமை, அன்பு, தாழ்ச்சி, பகைவரையும் நேசித்தல், சிலுவை சுமத்தல் (இதில் நாம் எத்தனைகளில் பாஸ் மார்க் வாங்குகிறோம்)

இயேசு அவர் சொல்லிய அத்தனை போதனையையும், ஒரு வரி விடாமல் வாழ்ந்து காட்டினார். “நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்”. அவர்தான் தேவன்; அவர் மட்டும்தான் தேவன். இயேசுவும் தவமிருந்தார்; ஜெபித்தார்; இடைவிடாமல் ஜெபித்தார். தன் அன்றாட கடமைகளை செய்தார். வேலை செய்தார். தன் வளர்ப்புத் தந்தை இருக்கும்போது அவருக்கு உதவியாகவும், மரித்த பின் அவர் செய்த பணிகளை தான் செய்து தன் தாயாரைக் காப்பாற்றினார். அவர் அன்றாடக் கடமைகளிலும், ஆன்மீகப்பபணிகளிலும் மிகச்சரியாக இருந்தார்.

இயேசுவே நமக்கு ஒரு போதனைதான். முப்பத்து மூன்று ஆண்டுகளாக ஜெபத்திலும், தவத்திலும், பரிகார வாழ்விலும், தன் அன்றாட கடமைகளிலும் ஒப்புக்கொடுத்து சரியாக வாழ்ந்ததால்தான் கடைசி கல்வாரிப்பலியிலும் அவரால் வெற்றி பெற முடிந்தது.

ஆகவே, திருவருகைக் காலத்தை தவக்காலமாக மாற்றுவோம். உயிர்த்த இயேசுவை நாம் வரவேற்பதுபோல் திவ்ய பாலனையும் வரவேற்போம். அதற்காக நம்மையே நாம் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவருக்கு உகந்தவனாக; உகந்தவளாக மிகச்சிறந்த பலிப்பொருளாக நம்மையே நாம் தயாரிப்போம். ஆண்டவர் இயேசுவுக்கு அடுத்த மிகச்சிறந்த பரிகாரப்பலி மகா பரிசுத்த தேவமாதா. அடுத்து பிதாப்பிதாவாகிய சூசையப்பர். அடுத்து புனிதர்கள்.. நமக்கு எவ்வளவோ ரோல்மாடல்கள்...அவர்களின் துணையில் புனிதர்கள் ஆகவும் நமக்கு வாய்ப்பு உண்டு.. ஆனால் அதற்கு முன் ஒரு நல்ல கத்தொலிக்க கிறிஸ்தவராக வாழ பாலன் இயேசுவிடம் மன்றாடுவோம்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.    லூக்காஸ் 9:23

“தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது”     லூக்காஸ் 14 : 27

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !