மாமரியின் உதவி குறித்தும் ஜெபமாலை குறித்தும் தந்தை பியோவின் சான்றுகள்

தாம் பாவசங்கீர்த்தனம் கேட்கும் போது, திவ்விய கன்னிகை தமக்கு அருகிலேயே இருப்பார்கள் என்று தந்தை பியோ சில தடவைகள் சொல்லியிருக்கிறார்

மேலும் அவர் பூசையைத் தொடங்கும் முன்பிருந்து மாமரி சேசுவோடும், அர்ச். பிரான்சிஸோடும் பீடத்தின் அருகிலேயே இருப்பதாகவும் கூறினார்.

1929, மாதாவின் விண்ணேற்பு திருநாளன்று (ஆகஸ்ட் 15) பாத்ரே பியோ இப்படி எழுதினார்;

“இன்று காலையில் நான் உடல் வலிகளோடும், மன வேதனைகளோடும் பீடத்தை நெருங்கினேன். சாகப்போவது போல நான் உணர்ந்தேன்…. திவ்ய அப்பத்தை உட்கொள்ளும் நேரத்தில், நான் நம் பரலோக அன்னையைத் தெளிவாகக் கண்டேன், அவர்களுடைய திருக்கரங்களில் சேசு பாலன் வீற்றிருந்தார்.. அவர்கள் இருவரும் என்னிடம் :

“அமைதியாக இரு. உனக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். நீ எங்களுக்குச் சொந்தமானவன், நாங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள்” என்று சொன்னதைக் கேட்டேன். அந்தக் கணம் முதல் இனிமை மற்றும் அன்பின் விவரிக்க முடியாத கடலில் நான் மூழ்கடிக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன்,”

மாதாவின் அனுபவத்தை ஒரு தந்தையிடம் இப்படிப்பகிறார் தந்தை பியோ...

“எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் தேவமாதா என்னைத் தேடி வருகிறார்கள்“ என்று பியோ பதிலளித்தார். பாத்ரே பியோ தமக்கு வரும் பிரச்சனைகளையெல்லாம் நம் அன்னையின் உதவி கொண்டு தீர்க்கிறார். அல்லது அவர்களே அவற்றைத் தீர்க்குமாறு விட்டுவிடுகிறார்” என்று சொன்னார் அந்த தந்தை மார்செல்லினோ.

தாம் சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பாத்ரே பியோ:

“நான் இரண்டு தாய்மாரையும் காண்கிறேன்“ என்றார். திவ்விய கன்னிகை அவரை இவ்வுலகில் பெற்றெடுத்த தாயுடன் சேர்ந்து அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள்.

“மரியாயே! “ என்பதுதான் பாத்ரே பியோ தம் வாழ்வில் உச்சரித்த கடைசி வார்த்தையாக இருந்தது.

பாத்ரே பியோ சொல்லுவார் :

“பரிசுத்த கன்னிகை கடவுளைச் சென்றடையும் குறுக்கு வழியாக இருக்கிறார்கள் “

“மரியாயின் கரங்களில் உங்ககளை அர்ப்பணித்து விட்டு கவலைப் படாமல் இருங்கள். அவர்கள் உங்களைக் கவனித்துக் கொள்வார்கள்“

ஜெபமாலை குறித்து தந்தை பியோ :

“ ஜெபமாலை தற்காப்பு மற்றும் மீட்பின் ஆயுதம் “

“நரக எதிரியின் தந்திரங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக மாமரியால் நமக்குத் தரப்பட்ட ஆயுதமே ஜெபமாலை. சாத்தான் ஜெபமாலையை அழித்துவிட எப்போதும் முயல்கிறான். ஆனால் அவன் அதில் வெற்றி பெறவே மாட்டான். ஜெபமாலையை சரியாகப் பயன்படுத்துபவன் பெரும் போர்களிலும் கூட வெற்றி பெறுவான்.”

“ அடிக்கடி ஜெபமாலை ஜெபியுங்கள். அதற்கு நீங்கள் செலவளிக்கும் நேரம் கொஞ்சம்தான். ஆனால் மிக ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்!.. ஜெபமாலை இல்லாமல் நாம் வாழ முடியாது! நம் காலங்களில் ஜெபமாலை அசாதரனமான மதிப்பு உள்ளது என்பதால் லூர்திலும், பாத்திமாவிலும் மாமரி ஜெபமாலை ஜெபிக்கும்படி நம்மிடம் வலியுறுத்தியுள்ளார்கள். மாமரி ஜெபமாலையில் ஒவ்வொரு தேவ இரகசியத்திலும் பிரசன்னமாயிருக்கிறார்கள். சேசு நாதர் நமக்கு பரலோக மந்திரத்தைக் கற்றுத்தந்தது போலவே மாமரி நமக்கு ஜெபமாலையைக் கற்று தந்திருக்கிறார்கள்.

“ எல்லா வரப்பிரசாதங்களும் ( அருள்களும் ) மாமரியின் கரங்கள் வழியாகவே நமக்கு வருகின்றன “ என்று பாத்ரே பியோ கூறினார்.

தம் ஞான மகள்களுக்கும், மகன்களுக்கும் அவர் கூறியது :

“ உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரம் முழுவதிலும், உங்கள் வாழ்வின் கடமைகளை முடித்த பிறகு, நீங்கள் முழந்தாழிட்டு ஜெபமாலை ஜெபிக்க வேண்டும். திவ்ய நற்கருணைக்கு முன் அல்லது ஒரு பாடுபட்ட சுரூபத்திற்கு முன் இருந்து ஜெபமாலை சொல்லுங்கள்.”

நம் பரிசுத்த அன்னையே ஒரு முறை பாத்ரே பியோவிடம் ஜெபமாலையைக் காட்டி, “ இந்த ஆயுதத்தைக் கொண்டு நீ வெற்றி பெறுவாய் “ என்றார்கள்:

ஜெபமாலையின் வல்லமையை நன்கு உணர்ந்தவராக, பாத்ரே பியோ எப்போதும் தம் கரங்களில் அதை வைத்திருந்தார். அவரது மரணம் நெருங்கிய போது, தம் ஞானக் குழந்தைகளுக்கு :

“ நம் அன்னைக்கு அன்பு செலுத்துங்கள். மற்றவர்களும் அவர்களுக்கு அன்பு செலுத்த தூண்டுங்கள், எப்போதும் ஜெபமாலை ஜெபியுங்கள் “ என்று அறிவுரை கூறினார்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதாப்பட்டணம், தூத்துக்குடி. போன் : 9487609983, 0461-2361989,

சிந்தனை : ஒரு நாளைக்கு ஒரு ஐம்பத்து மூன்று மணிகள் ஜெபமாலையாவது குடும்பத்தோடு அமர்ந்து ஜெபிப்போம்.. தனியே வசிப்பவர்கள் 53 மணிகள் முதல் 153 மணிகள் வரை ஜெபிக்கலாம். அட்லீஸ்ட் 53 மணிகளாவது ஜெபியுங்கள்…

“ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 36 ஜெபமாலைகளாவது ஜெபித்த ஆண்டவரின் ஐந்து காய வரம் பெற்றிருந்த தந்தை பியோவே… நாங்கள் ஒரு நாளைக்கு ஐம்பத்து மூன்று மணிகள் ஜெபமாலையாவது பக்தியோடு ஜெபிக்க வரம் தாரும்...