ஜெபமாலை

12-ம் நூற்றாண்டில் “ நன்மைக்கொரு கடவுள், தீமைக்கொரு கடவுள் உண்டென்றும் சேசு வெறும் மனிதனென்றும் இன்னும் பல தவறுகளைக்கொண்ட ஆல்பிஜென்ஸியன் என்ற பதிதம் பரவிய காலம். மக்களுடைய பாவங்களே “ ஆல்பிஜென்ஸியன் “ என்ற பதிதர்கள் மனந்திரும்பாதத்தற்கு காரணம் என்பதை உண்ரந்த அர்ச்.சாமி நாதர், ஒரு காட்டுக்குள் சென்று மூன்று நாட்கள் இடைவிடாமல் ஜெபித்து தேவ கோபத்தை அமர்த்துவதற்கு கடினமான தவ முயற்சிகளை செய்து மன்றாடினார். அவர் எவ்வளவிற்கு தன்னையே அடித்துக்கொண்டாரானால் ( சாட்டையால்) அவருடைய உடல் புண்ணாகி இறுதியில் மயக்கமுற்றார்.

அப்போது தேவ அன்னை மூன்று சம்மனசுக்களுடன் அவருக்குத்தோன்றி , “ சாமி நாதா, எந்த ஆயுதத்தைக் கொண்டு உலகை சீர்திருத்த தமத்திருத்துவம் விரும்புகிறது என்பதை அறிவாயா? “ என்று கேட்டார்கள். அதற்கு அவர் , “ ஓ என் அன்னையே, என்னைவிட உங்களுகே அது நன்றாக தெறியும். ஏனென்றால், உம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவிற்குப் பின் எங்கள் இரட்சன்ய கருவியாய் நீங்களல்லவா இருக்கின்றீர்கள் “ என்றார். அதற்கு மாதா : “ இந்த வகையான போராட்டத்தில் கபரியேல் தூதன் கூறிய மங்கள வார்த்தைதான் வெற்றிதரும் கருவியாக உள்ளது. புதிய ஏற்பாட்டின் அடித்தளக்கல் அதுவே. எனவே கடினப்பட்ட ஆன்மாக்களை அனுகி அவர்களை கடவுள் பக்கம் திருப்ப வேண்டுமானால் என் ஜெபமாலையை பிரசங்கி “ என்று கூறினார்கள்.

அர்ச்.சாமி நாதர் எழுந்தார். ஆறுதல் பெற்றார். அந்த பிரதேசத்திலுள்ள மக்களை மனந்திருப்பும் ஆவலால் பற்றியெரிந்தவராய் நேரே பட்டணத்திலுள்ள மேற்றிராசன ஆலயத்திற்கு சென்றார். உடனே கண்காணா தேவதூதர்கள் மக்களைக் கூட்டுவதற்காக ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் திரண்டனர். ஆர்ச்.சாமி நாதர் பிரசிங்கிக்க ஆரம்பித்தார்.

அவர் பிரசங்கம் ஆரம்பித்ததும் ஒரு பயங்கர புயல் காற்று எழுப்பியது. பூமி குலுங்கியது.. கதிரவன் மங்கியது. பெரிய இடிமுழக்கமும் மின்னலும் கானப்பட்டன. எல்லோரும் மிகவும் அஞ்சினார்கள்.

அவ்வாலயத்தில் ஒரு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் பெரிய படத்தைப் பார்த்த அம்மக்கள் முன்னைவிட அதிகமாகப் பயந்தார்கள். மாதாவின் அந்தப்படம் தன் கரத்தை வான் நோக்கி மும்முறை உயர்த்தி, அவர்கள் மனந்திருந்தி தேவ அன்னையின் பாதுகாப்பைத் தேடாவிட்டால் அவர்களை தண்டிக்குமாறு தேவ நீதியைக் அழைத்தது. இயற்கைக்கு மேலான இந்நிகழ்ச்சியின் மூலமாய் ஜெபமாலை என்னும் புதிய பக்தி முயற்சியை பரப்பவும், அதைப் பரவலாக அறியச் செய்யவும் கடவுள் சித்தங்க்கொண்டார்.

அர்ச்.சாமி நாதர் ஜெபமாலைப் பக்தியை ஏற்படுத்தியதிலிருந்து 1450-ம் ஆண்டில் முத்.ஆலன் ரோச் அதைப்புதுப்பித்த நாள் வரையிலும், ஜெபமாலை சேசு மரியாயின் சங்கீத மாலை என்றே அழைக்கப்பட்டது. அதன் காரணம் தாவீது அரசனின் சங்கீதங்கள் 150 இருப்பது போல ஜெபமாலையிலும் 150 அருள் நிறை மந்திரங்கள் உள்ளன. எழுத்தறிவில்லா பாமர மக்கள் தாவீதின் சங்கீதங்களை சொல்ல முடியாததால் அவர்களுக்கு அதே பலன்களை தரக்கூடியது ஜெபமாலை என்று திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜெபமாலையானது நம் சத்துருக்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நமது பாவத்தை நீக்கி நம்மைத் துப்புரவுபடுத்துகிறது. நமது ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் மிகுந்த பாதுகாப்பளிகிறது. ஏனென்றால் அது நமதாண்டவரின் மனித அவதாரம், பாடுகள் மற்றும் உயிர்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளை வாழ்த்தி மகிமைப்படுத்துகிறது.

“சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தி “ யாக இருக்கிற நம் தேவமாதாவின் மிகச்சிறந்த பாதுகாப்பை நாம் பெறுகிறோம். துன்புறும் குழந்தையை ஆற்றித்தேற்றும் தாயைப்போல நம் தாயும் இவ்வுலகில் காட்சி கொடுத்தபோதெல்லாம் ஜெபமாலையைத் தினமும் சொல்லும்படி கேட்டார்கள். லூர்து நகரில் அர்ச். பெர்னதெத்திற்கு காட்சி கொடுத்த 18 முறையும் ஜெபமாலையை ஏந்தியபடி காட்சியளித்தார்கள். பாத்திமாவிலே நம் மாதா முதல் நாளிலேயே, “ ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லி வாருங்கள் “ என்று மூன்று சிறு குழந்தைகளிடம் கேட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் அதை மீண்டும் மீண்டும் கேட்டார்கள்.

ஜெபமாலையின் பலன்களையும், ஜெபமாலையின் மீது பக்தி உள்ளவர்களுக்கு அனுகூலமாக தேவமாதா அர்ச். சாமிநாதருக்கும், முத்.ஆலன் என்பவருக்கும் அளித்த 15 வாக்குறுதிகள் அடுத்துவரும் தொடர்களில் பார்ப்போம்.

எனவே ஒவ்வொரு நாளும் 53 மணியாவது ஜெபமாலை சொல்வோம். அந்த தெய்வீக ஜெபமாலையில் நம்மையும், பிறரையும் ஒப்புக்கொடுப்போம்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதாப்பட்டணம், தூத்துக்குடி

இயேசுவுக்கே புகழ் !! இயேசுவுக்கே நன்றி !! மரியே வாழ்க !!