கடவுளின் அரசையும், அவருக்கு ஏற்புடையதையும் முதலில் தேடுவோம்

மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 19 : 

மீண்டும் மாதாப் புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் :

அவர் தன் தங்கைக்கு (அருட்சகோதரி) எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி,

என் அன்புத் தங்கையே வரப்போகிற காலத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்ற கவலைக்கு இடம் கொடுக்காமல், நாளையைப் பற்றி நினைக்காமல் ஒவ்வொரு நாளும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டுமென்பது இறைவனின் திருவுளம் !.  இறைவனுக்கு அன்பு செலுத்துவது, அவருக்கு பிரியப்பட வாழ்வது ஒன்றே முக்கியம் என நினைத்து, இறைவனின் பராமரிப்பு என்னும் அரவணைப்பிலும், புனித கன்னி மரியாயின் தாய்க்குரிய மடியிலும் தலை வைத்து அமைதியாக துயில் கொள். இதுவே நம் வாழ்வின் தவறாத சத்தியம். நித்தியமானதும், தெய்வீகமுமான கோட்பாடு; கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு இப்போது நான் உனக்கு கூறும் அறிவுரை. அழிக்கமுடியாத எழுத்துக்களால் இதையெல்லாம் உன் மனத்திலும், இதயத்திலும், ஆழமாகப் பதிக்க இறைவன் அருள் புரிவீராக.

“ கடவுளின் அரசையும், அவருக்கு ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள், அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் “. என்ற அருள்வாக்குக்கு ஏற்ப நட. இவ்வாக்கின் முதற்பகுதியை நிறைவேற்றினால், வாக்கு ஒரு சிறிதும் தவறமுடியாத இறைவன் இரண்டாம் பகுதியை நிறைவேற்றுவார் !.

அதாவது இறைவனையும், அவரது புனித அன்னையையும் எந்நேரமும் நாடிய வண்ணமாக வாழ்வாயாகில், இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி ஒரு குறைவுமின்றி இருப்பாய். குருவாய் உள்ள உன் அண்ணணின் உதவும் கூட உனக்கு தேவைப்படாது. அவர் நாள்தோறும் நிறைவேற்றும் திருப்பலியில் உனக்கு முழுவதும் சொந்தமாய் இதுவரையில் இருந்தது போல இனியும் எப்போதும் இருப்பார்.

இங்கனம் நீயே செலுத்தும் பலியில் (செய்யும் தியாக முயற்சிகளில்) இயேசு கிறீஸ்துவுக்கு முழுவதும் சொந்தமாவாய். 

உன் காவல் தூதருக்கு என் வணக்கம் !

குருமட வாழ்வின்போதே இந்த அரிய பழக்கத்தை பிடித்துக்கொண்டது மேலே குறிப்பிடப்பட்டது காண்க ( காவல் தூதருக்கு வணக்கம் )

தன் ஆன்மீக குருவிற்கு அவர் எழுதிய கடித்தத்தில், 

“ என் போன்ற பாவிகள் பலரோடும், ஆன்மீகத்தில் உயர்நிலை எய்திய சிலரோடும் அருள் தொடர்பு கொள்ளுமாறு இறைவனின் பராமரிப்பு திட்டப்படி எனக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது “. என்று குறிப்பிடுகிறார். ஆன்மீகத்தில் மிக வளர்ச்சியுற்றிருந்தவர் எனப்பலராலும் கருதப்பட்டிருந்தபோதிலும், தன்னைப் பாவிகளுள் ஒருவர் எனக்குறிப்பிடுவது புனிதரின் ஆழ்ந்த தாழ்ச்சியால் என்பது தெளிவு.

புனிதரின் புதுமை : ஒரு நாள் பூசை முடிந்த பின் வெளியே வரும்போது குருடன் ஒருவன் பிச்சைகேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார் லூயி. “ பார்வை பெற உனக்கு விருப்பமா? என்று அவனைக் கேட்டார். வேறென்ன சொல்வான் அவன், “ ஆம்…ஆம்…” என்பது தவிர. புனிதர் தன் விரலில் சிறிது எச்சில் உமிழ்ந்து, குருடனின் கண்களைத் தடவினார். நம் ஆண்டவர் அக்காலத்தில் செய்தது போலவே! உடனே பார்வை பெற்றான் அவன். இது பற்றிக் கேள்வியுற்ற எல்லோரிடமும் புனிதரின் பெயர் மேலும் பெருமை பெற்றது.

புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் பற்றி அவர் நண்பர் எழுதிய கடிதம்,

“ லூயிஸை விட ஒறுத்தல் வாழ்வு நடத்துபவர் இருக்கின்றார் என்று நான் நினைக்கவில்லை. இறைவன் மகிமை பெறவும், ஆன்மாக்கள் மீட்படையவும் வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கிருப்பதைவிட மேலாகக் கொண்டிருப்பவர் யாராவது உள்ளனரா என்பது சந்தேகம். இறைவனின் பராமரிப்பிற்குத் தன்னையே ஒப்படைத்து வாழ்பவர் இவர் போல் வேறு யாராவது உண்டா என்பது சந்தேகமே. புனித கன்னி மரியாளை நேசிப்பவர்களுள் அவரே தலை சிறந்தவர் என்பது என் கருத்து”

புனிதரின் சுய சரிதை எழுதியவர் கூறுவது :

“ லூயி பிறப்பிலிருந்தே புனிதர் போல் வாழ்ந்தார். இறை அருட்கொடைகளை அவ்வளவு பெற்றிருந்தார். சொல்லப்போனால் மாதாவின் நேரடிப்பாதுகாப்பில் மட்டுமல்ல அவளது திருமடியிலேயே வளர்ந்தார் எனலாம் “.

நன்றி : ஜெபமாலை ஜெப வெற்றி வீரர் “ புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் “ வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் முன்னாள் சென்னை மயிலை பேராயர் அருட்தந்தை இரா. அருளப்பா.

சிந்தனை : மாதா பக்தி ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு எவ்வளவு தேவை என்பது புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் நன்கு தெறியும்.. அதே போல் ஜெபமாலையின் வல்லமையை நன்கு அறிந்தவர். “ மாதாவின் மீது உண்மையான பக்தி “, ஜெபமாலையின் இரகசியம்” “ அன்னை மாமரியாளுக்கு புனித அடிமையாதல் “ “ மரியாயின் இரகசியம் “ என்று மாதா சம்மந்தப்பட்ட எத்தனையோ நூல்கள் எழுதியுள்ளார்…

மாதாவின் வணக்கமாதத்தை நிறைவு செய்யும் நாம் மாதாவின் பக்தியில் மேலும் வளரவும், அதிகமாக ஜெபமாலை ஜெபிக்கவும், மாதாவின் மாசற்ற இருதயத்திற்குள் பாதுகாப்பாக வாழவும் உறுதி எடுப்போம்.. நம் கத்தோலிக்க விசுவாச வாழ்வை அன்னையிடம் ஒப்படைத்து விடுவோம்.. நம் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் ஏன் ஒவ்வொரு நொடியையும் அன்னையிடமே ஒப்படைத்து விடுவோம். அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள், நம்மை காப்பாற்றுவார்கள். நம்மை சரியாக வழி நடத்துவார்கள்.. நம் சொந்த தாயே நம்மை நன்றாக வழி நடத்தும்போது, நம் தேவதாய், உலகத்தாய், நம் எல்லோருக்கும் தாய், தாயினும் மேலாய் தாயுமாய் இருக்கும் இந்த தெய்வீகத்தாய் நம்மை சரியாக வழி நடத்தமாட்டாரா என்ன? வழி நடத்துவார்கள் நம் கரங்களை பிடித்து வழி நடத்தி ஆண்டவர் இயேசு சுவாமிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள்…

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !