நரகம் தவிர்க்க.. பதிவு -6 :

நரகத்தைத் தவிர்க்கும் வழிகள்..

நரகத்திலிருந்து தப்புவதற்கு ஆத்துமம் எப்போதும் தன் உயிரை இழக்காதிருப்பது, அதாவது அதை எப்போதும் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்த்தில் காப்பாற்றிக் கொள்வது அத்தியாவசியமானது. சாவு கள்ளனைப் போல வரும் என்கிறார் நம் ஆண்டவர். ஆகவே எப்போதும் விழிப்பாயிருப்பதும், எப்போது மரணம் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகவும், தகுந்த தயாரிப்போடும் இருத்தல் அவசியம்.

இந்த தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தைக் காத்துக் கொள்ள,

1. ஞான உபதேச அறிவு ( மறைக் கல்வி)

2. தேவத்திரவிய அநுமானங்கள் ( ஞானஸ்தானம் முதல்  நோயில் பூசுதல் வரை)

3. திவ்ய பலி பூசை

4. ஜெபமாலை

5. ஞான வாசகம், தியானம் (பைபிள் வாசித்தல், அதை தியானித்தல்)

6. தேவ கற்பனைகளை மனவுறுதியோடு அனுசரித்தல் ( பத்து கட்டளைகள்)

7. பாவ சோதனைகளை சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றை வெல்லுதல்

8. மரியாயின் மாசற்ற இருதய பக்தி அனுசரித்தல்

ஆகியவை உத்தமமான காரியங்கள்.

நரகத்திற்கு தீர்ப்பிடப்படுவதற்காகத் தம் திருமுன் நிற்கும் ஒரு தீய ஆத்துமத்திற்கு ஒரு கடைசி வரமளிக்க கடவுள் முன் வருவார் என்றால், அது கேட்பது என்னவாக இருக்கும் தெறியுமா?

“ நான் மனஸ்தாபப்பட்டு பாவசங்கீர்த்தனம் செய்ய ஒரே ஒரு மணி நேரம் தாரும் “ என்பதுதான்.

இதை வாசிக்கிறவர்களே ! அகமகிழுங்கள் ! இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். இந்த கொடிய நரகத்திலிருந்து தப்ப நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்த பட்சம் அடிமை மனஸ்தாபப் பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வது மட்டுமே..

( பாவசங்கீர்தனம்  நம்மை உடனடியாக நரகத்திலிருந்து விடுதலையாக்கும் தேவ திரவிய அருட்சாதனம் என்பதை எப்போதும் மறவாதீர்கள்)

ஞான உபதேச அறிவு : ( முக்கியமானது.. கவனிக்கவும்.. ஒரு போப் ஆண்டவரின் கடிதம்)

பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் தமது ஆச்செர்போ நிமிஸ் என்னும் மடலில் ( 15.4.1905),

“ தற்காலத்திய அசட்டைத்தனத்திற்கும், ஒரு வகையில் ஆத்துமாக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதற்கும், அதன் விளைவாக எழும் மோசமான தீமைகளுக்கும் முதன்மையான காரணம் தெய்வீகக் காரியங்களைப் பற்றிய அறியாமைதான்..

இரட்சண்யத்திற்கு அவசியமான இந்த சத்தியங்களை முற்றிலுமாக அறியாதிருக்கிற கிறிஸ்தவர்கள் நாம் வாழும் இந்தக் காலத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்… அந்த இருள் எவ்வளவு ஆழ்ந்ததாக இருக்கிறது என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடைப்பது கடினமாயிருக்கிறது.

எல்லாவற்றிலும் அதிக புலம்பலுக்குரியதாயிருக்கிறது என்னவென்றால், இந்த இருளுக்கு மத்தியிலும் எவ்வளவு ஆழ்ந்த அமைதியில் அவர்கள் இளைப்பாறுகிறார்கள் என்பதுதான்.

உன்னத சிருஷ்டிகரும், சகலத்தையும் ஆண்டு நடத்துபவருமான சர்வேசுவரனைப் பற்றியோ, அல்லது கிறிஸ்து நாதருடைய விசுவாச போதனையைப் பற்றியோ மிக அரிதாகவே நினைக்கிறார்கள். தேவ வார்த்தையானவரின் மனித அவதாரத்தைப் பற்றியும், (தமது திவ்ய பலியின் மூலம்) மனுக்குலத்தை அதன் தொடக்கப் பரிசுத்த நிலையில் மீண்டும் ஸ்தாபித்ததை அவர் பூரணமாக செய்து முடித்தது பற்றியும் அவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை.

நித்திய காரியங்களை அடைந்து கொள்வதற்கான தேவ உதவிகளில் எல்லாம் மிக மேலானதாகிய வரப்பிரசாதமும், எவற்றின் வழியாக நாம் வரப்பிரசாத்தைப் பெற்றுக் கொள்கிறோமோ அந்த திவ்ய பலிபூசை மற்றும் தேவத்திரவிய அநுமானங்களும் அவர்களால் முற்றிலுமாக அறியப்படாதவைகளாக இருக்கின்றன.

பாவத்தின் கெடுமதி, அதன் இழிந்த தன்மையைப் பற்றிய எந்த உணர்வும் அவர்களிடம் இல்லை; இதன் காரணமாக பாவத்தைத் தவிர்ப்பது பற்றியோ, அதைவிட்டு விலகுவது பற்றியோ அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆகவே பரிதாபத்திற்குரிய நிலையில் அவர்கள் தங்கள் வாழ்வில் முடிவுக்கு வந்து சேருகிறார்கள்..” என்று கூறுகிறார்.

சர்வேசுவரனை அறியாமல் அவரை நேசிக்க முடியாது. நேசியாமல் அவருக்கு ஊழியம் செய்ய முடியாது. ஊழியம் செய்யாமல் மோட்சத்தை அடைய முடியாது. ஆகவே மோட்சத்தை அடைய அடிப்படைத் தகுதியாயிருக்கிற இந்த ஞான உபதேச அறிவைக் கத்தோலிக்கர்கள் தங்களில் வளர்த்துக்கொள்வது மட்டுமின்றி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆத்துமங்களுக்கு அந்த அறிவைத் தர தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குருக்கள் தங்கள் மந்தைக்கும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுத் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்..

நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,

சிந்தனை : நரகம் பற்றிய பதிவுகள் பயமுறுத்த அல்ல.. நாம் விழிப்பாய் இருக்க.. நாம் சிறு பிள்ளைகளாய் இருக்கும்போது நாம் ஏதாவது தவறு செய்தால் நம்மைக் கண்டிக்கும் பெற்றோர் அல்லது பெரியோர்கள் என்ன சொல்வார்கள்.. 

“ டேய் நீ செய்றது தப்பு.. இப்படிச் செய்தாயென்றால் உன்னை ஆண்டவர் நரகத்துல தூக்கி போட்டுடுவாரு.. அங்கே உன்னை கொதிக்கிற எண்ணெய் சட்டியில போட்டு வறுத்து எடுப்பாரு” இந்த அட்வைஸ் மற்றும் எச்சரிக்கையை நாம் கேட்கவில்லையா.. நம் நினைவில் இல்லையா?

யார் இப்போது இந்த மாதிரி அட்வைஸ் சொல்கிறார்கள்.. எல்லாம் மறந்து மண்ணாய்ப் போய்விட்டது..

நம் பிள்ளைகளை “ படி படி “ என்று சொல்லத் தெறியும்.. அந்த கிளாஸ், இந்த கிளாஸ் என்று டியூசன் அனுப்ப தெறியும்.. அவர்கள் படிப்பிற்காக என்னெவெல்லாமோ செய்யத் தெறியும்.. ஆனால் அவர்கள் ஆன்ம விஷயத்தில் நாம் என்ன செய்கிறோம்.. என்ன கொடுக்கிறோம்.. அக்கரை காட்டுகிறோமா..

அவர்களை ஜெபமாலை செய்ய வைக்கிறோமா? மோட்சம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் பற்றி சொல்லிக் கொடுக்கிறோமா? கடவுளைப் பற்றி அவர்களிடம் பேசுகிறோமா?

திருப்பலியில் நல்லபடியாக பங்கேற்க வைக்கிறோமா?? நாமே ஒழுங்காக பங்கேற்பதில்லை.. மேலே பாருங்கள் போப் ஆண்டவர் திருப்பலி குறித்தும், தேவதிரவிய அனுமானங்கள் குறித்தும் என்ன சொல்லுகிறார்? எப்படி கவலைப்படுகிறார்..

எண்ணற்ற வரப்பிரசாதங்கள் வந்து குவியும் திருப்பலியில் நாம் ஒழுங்காக பங்கேற்கிறோமா?? அதை பயன்படுத்துகிறோமா?..

நரகத்தில் இருந்து தப்பிக்க எளிய வழிகள் பற்றி பார்த்தோம்.. ஜெபமாலை, உத்தரியம், பாவசங்கீர்த்தனம் என்று.. 

அதே போல் நரகத்தைத் தவிர்க்க நாம் முதலில் மோட்சத்தைத் தேட வேண்டும்.. அதற்கு இடையூராக இருக்கும் பாவத்தை விட்டு விட வேண்டும்.. பாவ சந்தர்ப்பங்களை தவிர்க்க வேண்டும்.. பரிசுத்தத்தை தேட வேண்டும்.. நம் சிந்தனைகளிலும்.. செயலிலும்.. மொத்தத்தில் நாம் நல்லவர்களாக.. நல்ல கிறிஸ்வர்களாக வாழ வேண்டும்..

அப்புறம் ஏன் நரகத்தைப் பற்றி நாம் பயப்பட வேண்டும்.. ?

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !