உத்தரியம் - பாகம் 21 - மாதாவின் பாதுகாப்பு உடனடியாக கிடைக்க ஒரே வழி உத்தரியம் அணிவதுதான்!

பிரிவினை சபையினரும், பிற மத சகோதர்களும் கூட உத்தரியம் அணியலாம்.. அன்னையின் பாதுகாப்பைப் பெறலாம்..

கடவுளின் மாபெரும் இரக்கத்தையும், அன்பையும் மனிதர் உருவில் காண வேண்டும் என்றால் அது முதலில் இயேசுவின் உருவம்.. அதன் பின் மாதாவின் உருவமே..

அதில் அன்பு இருவருக்கும் சரிசமமாக இருக்கும்… ஆனால் இரக்கத்தைப் பொறுத்தவரை மாதா ஒரு படி மேலே போய்விடுவார்கள்..

நேச பிதாவோ ! இயேசு சுவாமியோ ! தூய ஆவியானவரோ அவனை.. அவளை கைவிட்டு விட்டு.. “ இதற்கு மேல் இவன் சரிபட்டு வரமாட்டான்(ள்) நரகத்தில் எரிந்து விடுங்கள் “ என்று அவர்களால் கைவிடப்பட்டுவிட்ட கேஸ்களையும் கூட மாதா மன்றாடி, உதவி தேர்த்தி, காப்பாற்றி விடுகிறார்கள்.. அதுதான் மாதா..

இரக்கத்தின் எல்லைக் கோட்டையும் தாண்டியது அவரது இரக்கமும், அன்பும்..

உலக மக்களின் தாயாக பொறுப்போடு நாம் நினைத்துப் பார்க்க முடியாத கருணையோடு தன் பிள்ளைகளுக்கு உதவி வருகிறார்கள்..

இரக்கத்தின், அன்பின் உச்சமே உத்தரியம்.. கடவுளிடம் மன்றாடி அவரின் இரக்கத்தைப் பெற்று நமக்கு அளித்த மாபெரும் கொடையே உத்தரியம்.. மிகப்பெரிய பாதுகாப்பு கருவி உத்தரியம்.. குறிப்பாக நம் ஆன்மாவிற்கு..

வேடிக்கயாக ஒரு கதையை சொல்லுவார்கள்.. ஆனால் அது 100 சதவித உண்மையும் கூட..

மோட்ச வாசலில் புனித இராயப்பரை சந்தித்த நம் இயேசு சுவாமி இப்படிக் கேட்கிறார்..

“ அவன் எப்படி மோட்சத்திற்குள் வந்தான்? அவள் எப்படி மோட்சத்திற்குள் வந்தாள்.. அவர்கள் நரகத்திற்கு போக வேண்டிய ஆளாச்சே.. வாசல்ல நீதானே நிக்கிறே? “

அதற்கு இராயப்பர் இப்படி பதில் சொல்லுகிறார்..

“ அதை ஏன் ஆண்டவரே கேட்கிறீங்க, நான் திருப்பி அனுப்புற ஆட்களையெல்லாம் உங்க அம்மா, இன்னொரு வாசல் வழியாக உள்ளே அனுப்பி விடுறாங்க? நான் என்ன செய்வது ?”

உடனே, ஆண்டவர் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு  நகர்ந்தாராம்..

இது தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது… கடவுளால் கைவிடப்பட்ட கேஸ்களையும் மாதா ஜெபித்து மன்றாடி எப்படியாவது உருப்பட வைத்துவிடுகிறார்கள்.. சிலரை கடைசி வரை நரகத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்..

இப்படிப்பட்ட மாதாவின் இரக்கத்தின்.. அன்பின்.. அடையாளமே கடவுளின் இரக்கத்தின் அடையாளமே உத்தரியம்..

உத்தரியத்தை அணிந்திருந்தாலே நரகத்திலிருந்து எஸ்கேப்.. இது எப்பேர்பட்ட பாக்கியம்..

உத்தரியத்தை அணிந்திருப்பதில் என்ன கஷ்ட்டம்…

நாம் சிலுவை தூக்க வேண்டியது இல்லை.. பெரிய பெரிய பரித்தியாகங்கள் செய்ய வேண்டியது இல்லை..

மாதாவின் ஆடையான உத்தரியத்தை அணிந்திருந்தாலே போதும் மற்றதை மாதா பார்த்துக்கொள்வார்கள்..

இது எப்பேர்பட்ட சலுகை..

இதையும் ஒரு ஆன்மா பயன்படுத்த தவறி நரகம் சென்றால் அதற்கு மாதா பொறுப்பாளி அல்ல..

முன்பு கூறியதைப் போல உத்தரியம் முதன் முதலில் அணியும் போது அல்லது அணிவிக்கப்படுவது குருவானவரின் கரங்கலாலேயே அதற்குரிய ஜெபங்களை சொல்லியே அணிவிக்கப்பட வேண்டும்.. அதன் பின்பு தேவையில்லை..

உத்தரியம் அணியும்போது  நாம் கார்மேல் சபையின் உறுப்பினர்கள் ஆகிறோம்.

அந்த ஜெபத்தையும் அனுப்புகிறேன் (அது போட்டோ இமேஜாக வரும்) அதை டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்..

குறிப்பு : 

1. உத்தரியம் ஒரு புனிதப் பொருள். உத்தரியம் கிழிந்தாலோ அல்லது பழசானாலோ அதை மண்ணில் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும். புதிய உத்தரியத்தை அணியும் போது மீண்டும் குருவானவரால் மந்திரிக்கப்பட, அணிவிக்கப்பட தேவையில்லை.  நாமே அணிந்துகொள்ளலாம்.. குருவானவர்கள், கன்னியர்களும் உத்தரியத்தை அணியலாம்.

2. உத்தரியம் நீங்கள் இருக்கும் ஆலய டிப்போக்களில் பெரும்பாலும் கிடைக்கும். நீங்கள் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். பிளாஸ்டிக் உத்தரியம் உத்தரியம் அல்ல (டூப்ளிகேட்). கம்பளித் துணி உத்தரியமே உத்தரியம். அதில் இருக்கும் படங்கள் யார் படங்களாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.

உத்தரியம் ஆலய டிப்போக்களில் கிடைக்கவில்லையென்றால் கீழே உள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்..

அது ஒரு அருட் சகோதரியின் தொலைபேசி எண். போனை எடுக்கவில்லையென்றால் அவர்கள் ஜெபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.. பின்பு அவர்கள் பேசுவார்கள். நீங்கள் மெசேஜாகவும் அனுப்பலாம்..

உத்தரியம் கிடைக்கும் முகவரி :

Sr. Maria Felicita (Mother Prioress), Reparation Sisters of the Immaculate Heart of Mary, 39A, 15th Street, Rahmath Nagar, Palayamkottai - 627 011, Tirunelveli. Mob: 96981 24004. Email: reparationsistersimhmary @gmail.com 

( மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் சகோதரிகளின் சபை, Reparataion sisters of the Immaculate Heart of Mary,  பெண் சகோதரிகள் அருட் சகோதரிகளாக விரும்பினால் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்)

ஜெபமாலை, உத்தரியம்.. தாய் பிள்ளை உறவிதுவே..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !