கூட்டுச் செபமாலை.

1. பலன் கொடுக்கும் நவநாள் : 
செபமாலை நவநாளைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறது . அதிலும் கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் நவநாள் என்று ஒன்றைச் சொல்லுவார்கள் . இந்த நவநாள் போம்பேயி மாதா ஆலயத்தில் உதித்தது . 50 மணிச் செபமாலை தொடர்ந்து 54 நாட்கள் சொல்லுவதாம் . சந்தோஷ , துக்க , மகிமை மற்றும் ஒளியின் தேவ இரகசியங்கள் மாற்றிச் சொல்ல வேண்டும் . 27 நாட்களுக்கு கிருபையைப் பெறுவதற்காகவும் 27 நாட்களுக்கு அடைந்த கிருபைக்கு நன்றி செலுத்துவதற்காகவும் செபமாலை சொல்ல வேண்டும் . இதன் வல்லமையின் இரகசியம் விடாமல் செபம் செய்வதாம் .. எண்ணிக்கையில் அல்ல!

2. உயிருள்ள செபமாலை : 
150 மணி செபமாலையை ஒரு நாளில் சில கருத்துக்களுக்காகச் சொல்லி முடிக்க 15 பேர் கூட்டு சேர்கிறார்கள் . ஒருவரே 153 மணி செபமாலையை நாள்தோறும் சொல்ல அவகாசம் இல்லாமல் இருக்கலாம் . அல்லது 15 பேருடைய பக்தியினாலே கேட்பதை அடையலாம் என நம்பிக்கை இருக்கலாம் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பத்துமணி செபம் சொல்ல உடன்பாடு செய்து கொள்ளுகிறார்கள் . ஆளுக்கொரு தேவ இரகசியம் . குருஸ் மங்கள வார்த்தை சொன்னது ; சவரி எலிசபெத்தம்மாளை வினவினது ; பால் கர்த்தர் பிறந்தது எனலாம் . இப்பொதுக் கருத்துக்காக பத்து மணி சொன்னால் வேறு சொல்லக் கூடாது என்று அர்த்தமல்ல . சங்கேதப்படி ஒரு பத்து சொன்னபின் , அவகாசம் இருந்தால் தனிப்பட்ட முறையில் 50 மணிச் செபமாலையோ அதற்க்கு மேலோ சொல்லலாம்.

உலக வாசிகளோ , குருக்களோ , துறவிகளோ இக்கூட்டை ஏற்படுத்தலாம் . பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , விடுதிகள் பாசறைகள் என எங்கு வேண்டுமானாலும் இக்கூட்டை அமைக்கலாம் . அமெரிக்காவில் ஒரு பங்கில் 75 ஆண்டுகளாக 2000 பேருக்கு மேல் இக்கூட்டு செபமாலையைச் செய்து வருகின்றனர் .

3. குடும்பச் செபமாலை 
குடும்பத்தில் சமாதானத்தையும் பரிசுத்தத் தனத்தையும் காப்பாற்றுவதற்கு குடும்பத்தார் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கம் போற்றற்குரியது . அச்சமயத்தில் கிறிஸ்துவே குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கிறார் என்று சொல்லலாம் . தனிப்படச் சொல்லுவதை விட இக்கூட்டு செபத்துக்கு எவ்வளவோ பலன்கள். " என் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்திருப்பார்களேயாகில் நான் அங்குள்ளேன்" என்று ஆண்டவர் சொல்லவில்லையா ? தாயும் தந்தையும் மக்களும் யாவரும் ஒன்றித்து வர வேண்டும் . அதற்க்க்காகச் சரியான நேரத்தைக் குறிக்க வேண்டும் . குழந்தைகள் தூங்கிப் போகும் சமயம் பின்னிரவில் வைத்தலாகாது . அலுவலகத்திற்குச் சென்றோர் திரும்பும் முன் வைத்தலாகாது . சில கடற்கரைகளிலோ, ஆலைகளிலோ வேலை செய்வோர் ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டுப் போவதால் ஆறு மணிக்கு முன் வைக்கலாம் .அப்பொழுது பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திரும்பி விடுவர் . அல்லது பகல் உணவு உண்டு வேலைக்குப் போகும் முன் செபிக்கலாம் . பொதுவில் இரவு உணவுக்கு முன் கூடி செபிப்பது சிறந்த நேரம் எனலாம்

புதிதாய் மணம் செய்த இளம் தம்பதிகள் , மணமானவுடனே  இப்பழக்கத்தைத் துவங்க வேண்டும் . தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நாள் பலர் செபமாலைக்கு வர முடியாவிட்டாலும் இரண்டு பேராவது சேர்ந்து குடும்பத்தின் பேரால் அன்று செபமாலை சொல்ல வேண்டும் . விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்று செபமாலை சொல்லாமல் விட்டு விடக் கூடாது . விருந்தாளிகள் எம்மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் குடும்ப செபமாலை நடத்த வேண்டும் . வந்தவர்கள் குடும்பத்தைக் கண்ணியப்படுத்துவார்கள் . குடும்ப செபமாலை விசேசமாய்த் தற்காலத்தில் குடும்பத்தைக் காக்க செபமாலை அன்னை உருவாக்கிய கோட்டை . செபமாலை இராக்கினி ஆட்களையும் , குடும்பங்களையும் தேசங்களையும் சாதி சனங்களையும் ஏன் உலகையே காப்பாற்றி வருகிறார் . உலக சரிதை இதைச் சாற்றுகிறது

இங்கும் பற்பல இடங்களில் இதைக் கண்டோம் . இன்றைக்கோ குடும்பங்களைத்தான் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது . குடும்பத்தை அழித்து அதன் வழியாகச் சமுதாயத்தையும் நாடுகளையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது நரகம் . குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் . குடும்பம் காப்பாற்றப்பட்டால் உலகையே காப்பாற்றுவோம் .குடும்பத்திற்கு தன்னிலேயே ஒரு செல்வாக்கு உண்டு . குடும்பங்களின் சேர்க்கை தானே ஊரும் நாடும் ? அன்பினால் ஒன்றித்திருக்கும் குடும்பம் செபமாலையைச் செய்து வருமே யாகில் அதன் செல்வாக்கு இன்னும் அதிகரித்து , உலகைக் காப்பாற்றும் . குடும்பச் செபமாலை தாயின் மன்றாட்டினால் ஆண்டவரது உள்ளத்தையே கரைக்கிறது எனலாம்

உலக சிந்தை ,உலகப் பற்று , உலக நோக்கம் என்னாளுமே குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நஞ்சு. இக்காலத்தில் புதிய ஆபத்துக்கள் குடும்பத்தின் அன்பையும், ஒற்றுமையையும் சுகத்தையும் அழித்து சாக்கடையில் தள்ளிப் புதைக்கத் தேடுகின்றன . குடும்பக் கட்டுப்பாடு , மதச் சார்பற்ற சீர்திருத்த திருமணம், தற்காலிக உடன்பாடு , விவாகரத்து , காணா சிசுக்கொலை (கருக்கலைப்பு) போன்றவை சில. சில காலத்திற்கு முன் ஆடை நன்றாய் அணியத் தெரியாத நாடோடிகள் முதலாய் பகிரங்கமாய் இதைப் பற்றிப் பேசக் கூசுவார்கள். தற்காலமோ நாட்டின் உயிரையும் மதிப்பையும் காப்பற்றப் போவதாகச் சொல்லி அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்போரும் அதிகாரிகளும் நாட்டு மக்களின் பணத்தை ஓட்டைப் போலக் கருதி இந்த நரக போதனைகளைக் கற்றுக் கொடுக்க சாவடிகள் அமைத்தும் , இக்காணாக் கொலைக்கு வேண்டிய ஆயுதங்களை உற்பத்தி செய்தும் மலிவான விலைக்கு வழங்கப் போகிறார்களாம் . ஐயோ கேடு ! ஐயோ கேவலம் ! இந்த அக்கிரமங்களைப் பிரச்சாரப்படுத்த சுவரொட்டித் தாள்கள் என்ன ? ஏடுகள் என்ன , சினிமாக்கள் என்ன ? குடும்பங்களைக் குலைக்கவும் அழிக்கவும் தேடும் இந்நாட்களில் குடும்பத்தைக் காப்பாற்றக் கூடியவர் செபமாலை இராக்கினியும் குடும்ப செபமாலையுமே.

எங்குக் குடும்ப செபமாலை மலர்கிறதோ அங்கே மேற்சொன்ன தீமைகளை எதிர்த்து நிற்கத் தைரியம் உண்டு . நோய் வறுமை முதலியவைகளைச் சகிக்க சக்தியுண்டு . ஏனெனில் தந்தையும் தாயும் முழந்தாளில் இருந்து செபமாலை சொல்லுகிற போது நாம் இறைவனுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்னும் சத்தியத்தை மக்களுக்கு ஊட்டுகிறார்கள். "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே " என்று சொல்லும்போதே நாம் உலக மக்களைப் போல் மன்றாடுவதில்லை . நாம் தேவ மக்கள் ; அளவில்லாத அன்பும் வல்லமையும் உள்ள கடவுள் தாம் நம் தந்தை . தந்தைக்குரிய பட்சத்தோடு அவர் நம்மைப் பாதுகாத்து வருவார் , நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என பெற்றோரும் , பிள்ளைகளும் யாவரும் கற்றறிகிறோம்

"அருள் நிறைந்த மரியே " என்னும் மந்திரத்தை ஒரு பாதியை ஒருவரும் மறு பாதியை யாவரும் சொல்லுவதற்குப் பதில் யாவரும் முழுவதையும் சொல்லலாம் . அல்லது பாதிப் பேர் ஒரு பகுதியையும் சொல்லலாம் . தலைவர் தேவ இரகசியங்களை அறிவிக்கலாம் . அல்லது இறுதியில் கொடுத்திருக்கும் தியானத்தை அவர் வாசிக்கலாம் . அல்லது யாவரும் வாசிக்கலாம் .

குடும்பச் செபமாலை தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகவே வழக்கில் இருந்தது எனலாம் . மதுரை மாகாணத்திற்கு வந்த இத்தாலிய , பிரெஞ்சு மிஷினரி குருக்கள் இவ்வழக்கத்தை ஊன்றினர். பாப்புமார்கள் குடும்பச் செபமாலையைப் பெரிதும் போற்றி இருக்கின்றனர் . " உங்கள் உள்ளத்திலும் , தேசத்திலும் சமாதானம் நிலவ வேண்டும் என்று ஆசிப்பீர்களேயாகில் ஒவ்வொரு மாலையும் ஒன்று சேர்ந்து செபமாலை சொல்லுங்கள் .வத்திக்கான் அரண்மனை முழுவதிலுமே செபமாலையை போல வேறொரு பொக்கிஷம் இல்லை. பல பலன்கள் கொடுக்கப்பட்ட இந்த எளிய முறைச் செபமான செபமாலை ஒவ்வொரு குடும்பத்திலும் மாலைதோறும் பிரமாநிக்கமாய் சொல்லப்படுவதாக . இவைதான் நான் உங்களுக்குச் சொல்லும் கடைசி மொழிகள் .நான் விட்டுச் செல்லும் ஞாபகச் சின்னம் " என்றார் 9ம் பத்திநாதர்

செபமாலையை பற்றி நிருபத்துக்கு மேல் நிருபம் எழுதிப் போன 13ம் சிங்கராயர் "குடும்பத்தில் செபமாலை சொல்லாத நாள் இருத்தலாகாது . தனிப்பட்டோரின் பக்தியை வளர்க்கவும் , சமூகத் தேவையை பரிகரிக்கவும் அது ஏற்ற வழி . மாதாவின் செபமாலையைக் குடும்பங்களில் சொல்லி வரும் பழைய மகிமை தழைத்திருக்குமேயாகில் , தப்பறைகளினாலோ மனம் பொருத்த மூடத்தனமான அறியாமையினாலோ  விசுவாசத்தை இழந்து போகும் நிர்பாகியம் ஏற்படாது " என்று வரைந்தார்

11ம் பத்திநாதர் பெற்றோர்களுக்குச் சொல்லுவார் : குடும்பத்தின் தாயும் தந்தையும் குழந்தைகளுக்கு எதிலும் நன்மாதிரியாகக் காட்ட வேண்டும் . எனினும் பிரியமாய் மாலை நேரத்தில் ஒன்றாய்க் கூடி முழந்தாள் படியிட்டு செபமாலை சொல்லுவதில் நன்மாதிரியாயிருக்க வேண்டும் . இது மகா லாபகரமான இன்பமயமான வழக்கம் . இதனால் குடும்பங்களுக்கு சமாதானமும் ஏராளமான மோட்ச கிருபைகளும் கிடைக்கும் "

மாமரியின் பாப்பாண்டவரும் , மாமரியைத் திருக்காட்சியில் கண்டவருமான நம் திருத்தந்தை 12 ம் பத்திநாதர் குடும்ப செபமாலையைப் பற்றி பற்பல முறை இடை இடையிலே கூறி இருந்தாலும் 1952ம் ஆண்டு ஜூலை மாதம் குடும்ப செபமாலையைப் பற்றி நீண்ட நிருபம் அனுப்பினார் . குடும்பங்களில் மகிழ்ச்சியையும் கடவுளுடைய பெரும் கொடைகளையும் அடைவதற்கு நிச்சயமான வழி வேறொன்றுமில்லை . குடும்பச் செபமாலை வழக்கில் இருக்கும் குடும்பங்களில் உள்ள சிறார்கள் , பிற்காலத்திலும் செபமாலைப் பக்தி உள்ளவர்களாய் ஒழுக்கமுள்ளவர்களாய் இருப்பார்கள் . பொது செபத்துக்குரிய ஆசீர்வாதங்களும் அக்குடும்பத்துக்கு வரும் என்றார்

4.ஆலயத்தில் பொதுச் செபமாலை 

பங்கிலுள்ள யாவரும் ஒன்று சேர்ந்து கோவிலில் செபமாலை சொல்லும் வழக்கத்தையும் போற்ற வேண்டும் .அதனால் பங்குக்குப் பெருத்த இலாபம்.