முதல் காட்சி!
நாகப்பட்டினத்தருகே வேளாங்கண்ணி என்னும் சிற்றூரில் அண்ணாப் பிள்ளைத் தெருவில் உள்ள சிறு குளம். அதன் கரையில் ஒரு ஆலமரம் நாகைக்குப் பால் கொண்டு சென்ற சிறுவன் களைப்பாற அந்த மரத்தடியில் அமர்ந்த சிறிது நேரத்தில் திடீரென ஒரு பேரொளி அவன் முன் வீசியது. அழகு மங்கையும் அவள் கையில் தவழ்ந்த பால் முகத்தான மாசில்லாக் குழந்தையும் அவனிடம் வந்தனர். அம்மங்கை அச்சிறுவனிடம் குழந்தைக்குப் பால் கேட்டாள். சிறுவன் கொடுத்து குழந்தை குடிப்பதைக் கண்டு மகிழ்ந்தான். ஒளி தேய்ந்து காட்சி மறைந்தது. மெய் மறந்து நின்ற சிறுவன் தன்னுணர்வு பெற்றவுடன் எழுந்து நாகைக்கு நடந்தான். காலம் தாழ்ந்து வந்ததற்கும் குறைந்துள்ள பாலுக்கும் மன்னிப்புக் கோரி பாத்திரத்தைத் திறந்தான். ஆச்சரியம்! பால் குறையவில்லை, மாறாக நிறைந்து வழிந்தது. வேளாங்கண்ணியில் நடந்த நிகழ்ச்சியை அறிந்த நாகைப் பெருங்குடி மகனார் அன்னை தோன்றிய ஆலமரத்தடிக்கு விரைந்து சென்றார். அன்னையைக் காட்சியில் கண்டு இறும்பூது எய்தி வேரறுந்த மரம் போல் வீழ்ந்து அன்னையை வணங்கினார். அந்தக் குளமே இப்பொழுது மாதா குளம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
இரண்டாம் காட்சி!
இப்பொழுதுள்ள மாதா குளத்துக்கும் கோயிலுக்கும் இடையில் இருந்த நடுத்திட்டு என்னும் இடத்தில் முடவனான சிறுவன் மோர் விற்றுக் கொண்டிருந்தான். கொடூரமான வெயிலில் நடந்து களைத்தவர் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் திடீரென பேரொளி கண்டான். அதனூடே பேரழகியான ஒரு தாயையும் குழந்தையையும் கண்டு ஆனந்தப் பரவசமானான். மோர் கேட்ட அந்த தாய்க்கு மோர் கொடுக்க இருவரும் பருகினர். மேலும் நாகைக்குச் சென்று நல்ல மனிதர் ஒருவரிடம் கூறி தனக்கொரு ஆலயம் அமைத்திடுமாறு அம்மாது அவனைக் கேட்டாள். முடவன் தயங்கினான், தன் இயலாமையை எண்ணி வருந்தினான்.எழுந்து நட என்றாள் அன்னை. முடவன் எழுந்தான் நடந்தான் ஓடினான். நாகைக்குச் செய்தியை அறிவித்தான். அவனே அந்த செய்திக்குச் சாட்சி நம்பி ஓடி வந்த அந்த நல்ல குடிமகனும் நடுத்திட்டில் ஒரு ஓலைக் கோயிலைக் கட்டி வைத்தார். காட்சி தந்தவாறு ஒரு சுரூபமும் செய்து வைத்தார். அன்னை தந்த சிறுவனின் அற்புத உடல்நலம் அனைவர் காதிலும் எட்டத் துவங்கியது. மக்கள் கூட்டம் வரத் துவங்கியது. அவ்வன்னையை ஆரோக்கிய மாதா என்று அழைத்து வணங்கினர்.
மூன்றாம் காட்சி!
பதினேழாம் நூற்றாண்டில் ஒரு போர்த்துகீசியக் கப்பல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வங்கக் கடலில் புயலால் தாக்குண்டது. கப்பலோட்டிகள் கதிகலங்கி விண்ணக அன்னையை நோக்கி மன்றாடினர். தாயே நலமுடன் கரை சேர்த்தருளும், ஆலயம் ஒன்று அழகுற அமைப்போம் என்று நேர்ந்து கொண்டனர். பேய்க்காற்று ஓய்ந்தது. இருண்ட வானம் ஒளி தந்தது. மரக்கலமும் வேளாங்கண்ணிக் கரை போய் சேர்ந்தது. அன்று செப்டம்பர் 8 ஆம் நாள். அதே இடத்தில் அன்னைகோர் ஆலயம் எழுப்பினர். அது தான் இன்று அழகுற எழுந்து நிற்கும் புனித ஆரோக்கிய ஆன்னை திருத்தலங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. அந்த மாலுமிகள் கொண்டு வந்து பதிய வைத்த ரோசிலைன் கற்களாலான பீடம் இன்றும் அதே இடத்தில் உள்ளது. அதே செப்டம்பர் 8 ஆம் நாள் தான் பேராலய ஆண்டுத் திருவிழாவும் இன்றும் வருடாவருடம் சிறப்பாக நடைபெறுகிறது.