திவ்ய நற்கருணை நவநாள் ஜெபம் - எட்டாம் நாள்.

இயேசு பேசுகிறார்.

எனது அன்பு மகனே, மகளே, என்னை நெருங்கி வா. எனது அருகில் அமரு. நிபந்தனையற்ற ஆழமான எனதன்பை உட்சுவாசி. உனக்காகவே நான் மனுவுரு எடுத்தேன். உனக்காகவே நான் இவ்வுலகில் வாழ்ந்தேன். உனக்காகவே மரித்தேன். உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுந்தேன். உனக்காவே இந்தப் பீடத்தில் நான் வாழுகின்றேன். உனது உள்ளத்திலிருந்து உன்னை வருந்திக்கொண்டிருக்கும் மறைவான உனது துன்பங்களை நான் அறிவேன். உனது இதயத்தின் ஆழத்திலிருக்கும் உனது அச்ச உணர்வை, சந்தேகங்களை, ஏக்கங்களை நானறிவேன். எனது சமூகத்திலிருக்கும் ஒவ்வொருவரதும் இதயங்களில் உறைந்திருக்கும் அவநம்பிக்கைகள் அனைத்தையும் காண்கின்றேன். பசித்திருப்பவர்களின் பசியையும், தனித்திருப்பவர்களின் கண்ணீரையும், புறக்கணிக்கப்பட்டோரின் துயர்களையும், சிறைப்பட்டோரின் வேதனைகளையும் அறிவேன். ஒவ்வொரு மனிதனதும் வருத்தங்களையும், வேதனைகளையும் எனதாக்கிக்கொண்டேன். எனது அன்பும் வல்லமையும் அறியப்படக்கூடுமானால் என்னிடம் வா, உனக்காக மாத்திரமல்ல பிறருடைய தேவைகளையும் என்னிடம் கேள். பசித்திருப்போர், ஊனமுற்றோர், பாவத்தில் வீழ்ந்தவர்கள், அடக்கப்படுவோர், மூர்க்கத்தனமானவர்கள், தற்பெருமைக்காரர் அனைவரையும் என்னிடம் கொண்டுவா. மக்கள் அனைவரையும் என்னிடம் அழைத்துவா. எனது மக்களின் துன்பத்தைக் கண்டு நான் மகிழ்பவன் அல்ல. அவர்களுக்கு மீட்பும், விடுதலையும் கொண்டுவரவே நான் வந்தேன். எனதருமை மகனே, என்னை நம்பு. செபத்திலும் செயலிலும்  எனது சீடனாய் இரு.

சிந்தனை.

1. (எசேக். 22:30)

நமக்கும், இந்நாட்டு மக்களுக்கும் நடுவில் சுவர் போல நின்று எனது கோபத்தினிமித்தம் நாம் இந்த நாட்டை அழிக்காதபடி தடுக்கக்கூடியவன் எவனையும் காணோம்

2. (இசை. 62:6)

எருசலேமே, உனது மதில்களின் மேல் சாமக்காவலரை ஏற்படுத்தினோம். இரவும் பகலும் நாள் முழுவதும் அவர்கள் மௌனமாய் இரார்கள். ஆண்டவரை நினைவுகூறும் நீங்கள் என்றென்றும் வாய்மூடிக் கிடக்காதீர்கள்.

3. (யோபு. 42:10)

யோபு தம் நண்பர்களுக்காக வேண்டிக்கொண்ட பின்பு ஆண்டவர் அவருடைய செல்வச் சிறப்புக்களை முன்னர் இருந்ததைவிட இருமடங்காகக் கொடுத்தார்.

செபம்.

ஆண்டவரே, நீர் எனக்குச் செய்த சகல நன்மைகளுக்காகவும் உம்மைப் புகழ்ந்து உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் இந்தப் பீடத்தில் உம்மை காணுகின்ற காரணத்தால் உமதன்பில் நான் ஒருபோதும் சந்தேகப்பட முடியாது. ஆண்டவரே, இந்த உலகின் தேவைகளை என் செபத்தில் முன்வைக்க எனக்கு விழிப்புணர்வைத் தாரும். பசித்திருந்த பல்லாயிரம் மக்களுக்கு உணவளித்த ஆண்டவரே, பசியால் வாடும் மக்கள் மேலும், பொருளாதாரச் சுமையால் வருந்துவோர் மேலும் இரக்கமாயிரும். உமது இரக்கப்பெருக்கத்திற்கேற்ப அவர்களது தேவைகளைக் கவனித்தருளும் ஆண்டவரே, இவ்வுலகுக்குச் சமாதானத்தையும் அன்பையும் தருவதற்காகவே நீர் வந்தீர். ஆனால் துன்பத்தையும், வன்முறைகளையும், இரத்தக்களரியையும்தான் நான் காண்கின்றேன். உம்மைத் தவிர யார்தான் இவ்வாறான துன்பத்திலும் அவநம்பிக்கையிலுமிருந்து எம்மைக் காப்பாற்ற முடியும்? பசாசைத் துரத்தி, அதை நசுக்க வல்லவர் நீர்தாமே. நீரே மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தவர். இந்தப் பீடத்தில் உமது வல்லமை குறைவற்றதாகவே உள்ளது. உமது அன்பு உறுதியானதும், நீடித்ததாயும் இருக்கின்றது. எல்லையற்ற உமது அன்பு எம்மைக் குணப்படுத்தும், எமக்கு மன்னிப்பருளி எம்மை விடுதலை செய்யும். உமது அன்பின் ஆற்றலானது எல்லாக் கோபங்களையும் தணியச் செய்வதாக. எமது கசப்புணர்வுகளைக் களைந்து, யுத்தக்கருவிகள் அனைத்தையும் அமைதிப்படுத்தும். பலாத்காரம், வன்முறைகள், துயரங்கள் என்ற சாத்தான்களைத் துரத்தி உமது மக்களை விடுவித்தருளும். ஓ! ஆண்டவரே, ஆமென்.

(உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக இறை இரக்கச் செபமாலையைச் செபிக்கவும்)