திவ்ய நற்கருணை நவநாள் ஜெபம் - நான்காவது நாள்.

இயேசு பேசுகிறார்.

உனது வரவு நல்வரவாகட்டும். எப்போது வருவாய் என, உனது வரவுக்காக எனது இதயம் ஆவலுடன் காத்திருக்கின்றது. இங்கே வருவதற்கு தகுதியற்றவன் / தகுதியற்றவள் என்ற பொய்யான பணிவு மனப்பான்மையை மறந்துவிடு. உனது தவறுகள் நானறிவேன். உனது தோல்விகளும் எனக்குத் தெரியும்.

எனது மகனே / மகளே, மறைவானவை ஒன்றும் எனக்கில்லை. உனது பலவீனங்களின் மத்தியிலும் நான் உன்னை விரும்புகிறேன். எனக்கு நீ பரிகாரங்களைச் செலுத்தும் வேளையிலும் எனது அன்பையும், மன்னிப்பையும் அருளி உன்னை ஏற்றுக்கொள்கிறேன். எனது ஆவியே உனது பாதங்களை இங்கு வழிநடத்தியது. இவ்வுலகுக்கு ஒரு தூதுவனாக நான் உன்னைத் தெரிவு செய்துள்ளேன். நான் உயிர்த்தெழுந்த செய்தியை இவ்வுலகிற்கு அறிவிக்கும்படி மரிய மதலேனைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை எண்ணிப்பார். அது போல் இவ்வுலக மக்களுக்காக தேவ நற்கருணையில் நான் உயிரோடு காத்திருக்கிறேன் என்பதை உலகுக்குக் தெரியப்படுத்தும்படி நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.

இயேசு பேசுகிறார்.

வாழ்க்கையை மாற்றியமைக்கவும், உடைந்த உள்ளங்களைக் குணப்படுத்தவும், பாவங்களை மன்னிக்கவும், பசித்தவர்களுக்கு உணவளிக்கவும், குழம்பிய உள்ளங்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அருளவும் என் இதய அன்போடும், ஆற்றல் மிக்க எனது கரங்களுடனும், இங்கு பிரசன்னமாயிருக்கிறேன்.

எனது அருமை மகனே / மகளே, துன்பத்தால் வருந்தும் எனது பிள்ளைகளைப் பார்க்க எனது இதயம் வருந்துகின்றது. என்னிடம் வந்து தங்கள் உடலிலும், உள்ளத்திலும், ஆன்மாவிலும் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற மறுப்பவர்களை எண்ணி மனம் வருந்துகின்றேன். இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்து. உனது உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள். அவர்களுடன் நீ உரையாடும் ஒவ்வொரு கணமும் எப்படியானவை என அவர்களுக்கு எடுத்துச் சொல். எனது அன்பின் தூதுவனாக இரு. நான் உன்னோடு இருப்பேன்.

சிந்தனை.

நற்கருணை நாதர் இயேசு தனது சந்நிதியிலிருந்து அவரது எல்லையில்லா அன்பை அனுபவிப்பவர்களின் வாழ்க்கையை ஆழமாகத் தொடுகின்றார். அவரது அந்த அன்பை மறந்துவிட முடியாது. எமது அறிவுக்கெட்டாத வகையில் அவர் எம்மைத் தொட்டு அற்புத விதமாக எமது வாழ்க்கையை மாற்றியமைக்கின்றார். ஒருவர் எச்சமயத்தவராயிருப்பினும் இயேசுவின் அணைகடந்த அன்பு அனைவரையும் அரவணைக்கின்றது. கிறிஸ்து மொழி, மதம் என்ற தடைகளைக் கடந்து அன்பெனும் பொதுமை அனுபவத்தினூடாக அனைவரையும் ஐக்கியப்படுத்துகிறார். பீடத்தின் அமைதியில் வாசம் செய்யும் இறை வல்லமை இவ்வுலகை ஆசிகளால் நிரப்ப விசாலமாக விரிகின்றது.

இறைவார்த்தை சிந்தனை.

இறைவன் எமது இதயத்தின் அந்தரங்களைப் பார்த்து எம்மை சீர்படுத்துகிறார். "உங்கள் செல்வம் எங்குள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" (மத் 6:21)

"மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கிறான், ஆண்டவரோ இதயத்தைப் பார்க்கிறார்" (1 சாமுவேல் 16:7)

"நாம் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இதயத்தை அருளுவோம். அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியை ஊட்டுவோம். அவர்களது கல்லான இதயத்தை எடுத்துவிட்டு உணர்ச்சியுள்ள இதயத்தைக் கொடுப்போம். அப்போது அவர்கள் நம் கட்டளைப்படி நடப்பார்கள். நம் நீதிச்சட்டங்களைக் கடைபிடிப்பார்கள். அவர்கள் நமக்கு மக்களாகவும், நாம் அவர்களுக்குக் கடவுளாகவும் இருப்போம்". (எசேக்கியேல். 11:19, 20)

"நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன், உன்னை விட்டுப் பிரியேன்". (எபிரேயர் 13 : 5)

*"நான் அவர்களை கைவிடவும் மாட்டேன், அவர்களை விட்டுப் பிரியவும் மாட்டேன்"*.

செபம்.

அன்பான இயேசுவே, நீர் தந்த இந்த நாளுக்காக உமக்கு நன்றி. மன்னிக்கும் உமது அன்பின் உறுதிமொழிக்காகவும் என்னை ஏற்றுக்கொண்ட உமது திருவுளத்திற்கும் நன்றி. உமது அன்பின் மிருதுத்தன்மையை அறிவது எவ்வளவோ நல்லது. எனது பலவீனங்களையும், தவறுகளையும் நீர் அறிந்திருந்தும் என்னை நேசிக்கின்றீர். ஆண்டவரே, நான் வெளியே சென்று என் வீட்டாரோடும், நான் சந்திக்கும் ஒவ்வொருவரோடும் உமது அன்பைப் பகிர்ந்துகொள்ளும்படி நீர் விடுக்கும் அழைப்பை நான் கேட்கின்றேன்.

ஆம் ஆண்டவரே, எத்தனையோ பேர் இருளிலும், தனிமையிலும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும், நீரே அந்தத் துன்பங்கள் அனைத்தையும் குணமாக்க வல்லவர் என்பதை அறியாத அவர்கள் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்துகொண்டு வாழ்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆண்டவரே, உமது வல்லமையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க தவறிவிட்டேன். எவ்வளவுக்கு எவ்வளவு நான் உமது வல்லமையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகின்றேனோ, அவ்வளவுக்கு அதிகமாக உம்மிடமிருந்து பெற்றுக்கொள்வேன் என்பதை இன்று அறிந்துகொண்டேன். ஏனெனில் "கொடுங்கள், உங்களுக்கு அதன் இரு மடங்காகத் தரப்படும்", என்று நீர் சொல்லுவதை நான் கேட்கின்றேன். கடந்துபோனவை எதுவாயிருப்பினும் இன்று புதிய ஆரம்பமாய் இருக்கட்டும். இந்தப் பீடத்திலிருந்து உமது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, எனது கரங்களை நீட்டி அந்த ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்கு கொண்டுசெல்லும் கருவியாக என்னை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன்.

உண்மையையும் அன்பையும் தேடி அலைபவர்களை ஆண்டவரே நாடிச்செல்லும். அவர்களை உமது ஒளியில் வழிநடத்தும். பொய்யான தெய்வங்களை வழிபடுபவர்களைத் தேடி வாரும். நீர் அவர்களை நேசித்தீர். அவர்களுக்காக உம்மை பலியாக்கினீர். எமது செபங்களின் வழியாக அவர்களை ஆசீர்வதித்து அவர்கள் உம்மை நெருங்கி வர வரம் தாரும். உடலிலும், உள்ளத்திலும், சிந்தனையிலும், ஆன்மாவிலும் வருந்துபவர்களைத் தேடி வாரும். அவர்களது துன்பங்களில் அவர்களுக்கு ஆறுதல் அளித்தருளும். வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கும் ஆற்றலை அவர்களுக்களித்து அவர்களைப் பாதுகாத்தருளும். வழிதவறிச் செல்பவர்களை மனந்திருப்பி, அவர்களுக்கு புதிய இதயத்தைக் கொடுத்து, அவர்கள் உம்மில் விசுவாசம் கொள்ளச் செய்யும். ஆண்டவரே என்னை ஆசீர்வதியும். எனது சொல்லிலும், செயலிலும் உமது தெய்வீக ஒளி பிரகாசிக்கச் செய்யும்.

(உலகில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் மனஸ்தாபம் என்னும் கொடையைப் பெற்றுக்கொள்வதற்காக இறை இரக்கத்தின் செபமாலையை செபிக்கவும்)