ஃபெப்ரவரி 4 - வலாய்ஸ் நகர் புனிதர் ஜோன் ***


வலாய்ஸ் நகர் புனிதர் ஜோன்

(St. Joan of Valois)

அருட்சகோதரி/ நிறுவனர்:

(Nun and Religious Foundress)

பிறப்பு: ஏப்ரல் 23, 1464

நோஜென்ட்-லெ-ரோய், ட்ரக்ஸ் இராச்சியம்

(Nogent-le-Roi, County of Dreux)

இறப்பு: ஃபெப்ரவரி 4, 1505 (வயது 40)

பர்கெஸ், பெர்ரி - இராச்சியம்

(Bourges, Duchy of Berry)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

(மரியாளின் விண்ணேற்பின் அருட்சகோதரியர்)

(Sisters of the Annunciation of Mary)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 18, 1742

திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்

(Pope Benedict XIV)

புனிதர் பட்டம்: மே 28, 1950

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

(Pope Pius XII)

நினைவுத் திருநாள்: பிப்ரவரி 4

புனிதர் ஜோன், ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் (King of France) பதினோராம் லூயிஸின் (Louis XI) இரண்டாவது மகளாவார். ஓர்லியன்ஸ் பிரபுவான (Duke of Orléans) லூயிஸுக்கு (Louis) திருமண நிச்சயம் செய்யப்பட்டார். இவர்களது திருமணம், கி.பி. 1476ம் ஆண்டு, நடைபெற்றது. இவரது சகோதரரும், ஃபிரான்ஸ் நாட்டின் அரசனுமான (King of France) எட்டாம் சார்லஸின் (King Charles VIII) மரணத்தின் பின்னர், இவரது கணவர் அரசனாக முடி சூட்டிக்கொண்டதும், இவர்களது திருமணம் செல்லாது என்று அறிவித்தான்.

ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் (King Louis XI of France) பதினோறாம் லூயிஸுக்கும், அவரது இரண்டாம் மனைவியான "சார்லட்" (Charlotte of Savoy) ஆகியோருக்குப் பிறந்த இரண்டாம் மகளான ஜோன், அரசன் எட்டாம் சார்லஸ் (King Charles VIII of France) மற்றும் "அன்னி" (Anne of France) ஆகியோரின் சகோதரியாவார். இவர் பிறந்து சிறிது காலத்திலேயே, இவரை அப்போதைய ஓர்லியன்ஸ் பிரபுவும், பின்னாளில் ஃபிரான்ஸ் நாட்டின் அரசனான "பன்னிரெண்டாம் லூயிஸுக்கு" (King Louis XII of France) திருமணம் செய்து வைப்பதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது அவருக்கு வயது இரண்டு.

அரச பணிகளின் காரணமாக அடிக்கடி வெளியே சென்றுவந்த அரசன் லூயிஸ், தமது மகள்கள் ஜோன் மற்றும் அன்னி ஆகிய இருவரையும் தமக்கு மிகவும் நம்பிக்கையான அரச உயர் அதிகாரியான (Baron) "ஃபிரான்கொயிஸ் டி லினியெர்ஸ்" (François de Linières) மற்றும் அவரது மனைவியான "அன்னி டி குலன்" (Anne de Culan) ஆகியோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துச் செல்வார். குழந்தைப்பேறு இல்லாத ஃபிரான்கொயிஸ் தம்பதியருக்கு இக்குழந்தைகளை மிகவும் பிடித்துப் போனதால், மிகவும் அக்கறையுடனும் பாசமாகவும்  அவர்களை பார்த்துக்கொண்டனர். சிறுமிகளின் கல்வியையும் பொறுப்பேற்றுக்கொண்ட அவர்கள், அவர்களுக்கு கவிதைகள், கணிதம், ஓவியம் மற்றும் எம்பிராய்டரி (Embroidery) ஆகியனவையும் கற்பித்தனர்.

உண்மையான, விசுவாசமுள்ள கத்தோலிக்கர்களாய் விளங்கிய அத்தம்பதியர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடையே நம்பிக்கைக்கு உறுதியான ஆதாரமாக விளங்கினர். ஜோனுடைய இளம் வயதில் ஒருமுறை, அவர்களது தந்தை அவரிடம், "உனக்கு வேண்டிய ஒப்புரவாளர் ஒருவரின் பெயரைச் சொல்லு" என்றார். அவர் சிறிது சிந்திக்காமல், தமக்கு மிகவும் அறிந்திருந்த "ஜீன் டி லா ஃபோண்டெய்ன்" (Jean de La Fontaine) எனும் துறவியின் பெயரைச் சொன்னார். அவர், அக்காலத்தில் மத்திய ஃபிரான்சின் ஒரு பெரும் நகரான "அம்போய்ஸ்" (Amboise) என்னுமிடத்திலிருந்த ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்தின் (Franciscan friary) பாதுகாவலராயிருந்தார். ஜோனின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட அரசன், அதே துறவியை அப்பதவிக்கு நியமனம் செய்தார். துறவியானவர், அவர்களுக்கு இடையேயான தூரம் அதிகம் இருந்தபோதிலும், இளவசியின்  ஒப்புரவு வாக்குமூலம் கேட்பதற்காக, வழக்கமாக பயணம் செய்வார். செபம் செய்வதில் வலுவான மகிழ்ச்சியை உருவாக்காத தொடங்கியிருந்த ஜோன், கோட்டையின் சிற்றாலயத்தில் வெகு நேரம் செலவிடவும் தொடங்கினார். அவர்களை வளர்ந்துவந்த உயர் அதிகாரி, ஜோனுக்கு ஆதரவு அளித்ததுடன், மோசமான கால நிலையிலும், கோட்டையிலிருந்து இலகுவாக சிற்றாலயம் நடந்து செல்ல ஒரு நடைபாதை கட்டிக் கொடுத்தார். துறவியின் வழிநடத்துதலின்படி, அவர் ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை (Third Order of St. Francis) சபையில் சேர்ந்தார்.

கி.பி. 1471ம் ஆண்டு, இராச்சியத்தின் அமைதிக்காக, இராச்சியம் முழுதும் "அருள்நிறை மரியே வாழ்க" எனும் மங்கள மந்திரத்தை செபிப்பதை வழக்கமாகக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மங்கள மந்திரம் செபிப்பதில் வலுவான ஓட்டுதல் கொண்டிருந்த ஜோன், அர்ச்சிஸ்ட அன்னை கன்னி மரியாளிடமிருந்து ஒரு தீர்க்கதரிசன முன்னறிவித்தலைப் பெற்றிருந்த அதே வருடத்தில்தான் அன்னையை கௌரவிக்கும் விதமாக, அன்னையின் பெயரிலேயே ஒரு ஆன்மீக சமூக சபையை தாம் நிறுவியாதாக பின்னாளில் எழுதி வைத்தார்.

கி.பி. 1473ம் ஆண்டு, அரசன் லூயிஸ், தனது மகள்களுக்கான திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கி.பி. 1476ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், எட்டாம் தேதி, தமது பன்னிரெண்டு வயதில் ஜோன், ஓர்லியன்ஸ் பிரபுவான (Duke of Orléans) இளம் லூயிஸுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இளம் லூயிஸுக்கு ஜோனை திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை. ஜோன் சற்றே ஊனமுற்றவர் என்ற காரணத்தாலும், அவர் மலட்டுத்தன்மை உள்ளவராக இருக்கலாம் என்ற அனுமானம் காரணத்தாலும், இளம் லூயிஸுக்கு இது கட்டாயத் திருமணம் ஆயிற்று. இளம் லூயிஸ் கட்டாய திருமணத்தில் கோபமடைந்தார். அவர், தமது புதிய மனைவியை நடத்திய விதத்தில் இது பிரதிபலித்தது.

கி.பி. 1483ம் ஆண்டு, அரசன் லூயிஸ் இறந்துவிட்டார். அவருடைய மகன் சார்லஸ் அவருக்குப் பின் ஆட்சிக்கு கட்டிலுக்கு வந்தார். ஆனால் அவர் இன்னும் சிறுவனாக இருந்த காரணத்தால், அவரது சகோதரி "அன்னி டி பியூஜுவ்" (Anne de Beaujeu), இராச்சியத்தின் ஆட்சி பொறுப்பை (Regent ) பெற்றார். கி.பி. 1484ம் ஆண்டு, பிரபு இளம் லூயிஸ், இராச்சியத்திற்கு எதிராக தொடர் இராணுவப் பிரச்சாரங்களை ஆரம்பித்தார். கி.பி. 1488ம் ஆண்டுவரை தொடர்ந்த இது, இறுதியில் அரச படைகள் இவரை கைதுசெய்யும் வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில், அவருக்கு சட்டவிரோதமாக "மைக்கேல் டி பஸ்ஸி" (Michel de Bussy) எனும் குழந்தை பிறந்தது. பிற்காலத்தில், அக்குழந்தை "பௌர்க்ஸ் ஆயராக" (Bishop of Bourges) நியமிக்கப்பட்டார். இளம் லூயிஸ் சிறையில் இருந்த காலத்தில், அவரது ஆதிக்கத்துக்கு உட்பட்ட (இத்தாலிய (Italy) நகங்களான "மிலன்" (Milan) மற்றும் "அஸ்டி" (Asti) உள்ளிட்ட) பிராந்தியங்களின் நிர்வாகப் பொறுப்பை ஜோன் ஏற்றிருந்தார். ஜோன், தனது கணவன் தமது குணங்களை இழந்துவிட்டார் என்று கற்பனை செய்துகொண்டு, தனது துன்பங்களைக் குறைப்பதற்கும், அவரை விடுதலை செய்வதற்குமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கி.பி. 1491ம் ஆண்டு, பிரபு இளம் லூயிஸ் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் சில வருட காலத்திலேயே அவர் அரசன் சார்லசுடன் இணைந்து இத்தாலியில் தனது இராணுவப் பிரச்சாரம் செய்ய கிளம்பினார்.

கி.பி. 1498ம் ஆண்டு, அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜோனின் சகோதரன் அரசன் எட்டாம் சார்லஸ் (King Charles VIII) எதிர்பாராத விதமாக மரித்ததும், அரியணையில் அமர்ந்த லூயிஸ், தமக்கும் ஜோனுக்கும் நிகழ்ந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி திருத்தந்தையிடம் விண்ணப்பித்தான். அத்துடன், மரித்த மன்னன் எட்டாம் சார்லஸின் விதவையான "அன்னியை" (Anne of Brittany) மறுமணம் செய்துகொண்டால், அன்னியின் ஆதிக்கத்திலுள்ள "பிரிட்டனி" (Duchy of Brittany) பிராந்தியத்தையும் ஃபிரான்ஸின்  இராச்சியத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என்ற பேராசையில் அதற்கும் விண்ணப்பித்தான்.

திருத்தந்தையரவையில் நிகழ்ந்த நீண்ட வாத பிரதிவாதங்களின் பின்னர், லூயிஸ் தரப்பு தோற்று, ஜோனின் தரப்பு வெற்றிகொள்ளும் நிலை  வந்தது.ஆனால்,  நிர்ப்பந்தகளுக்கு  திருத்தந்தை ஆறாம் அலெக்ஸாண்டர், (Pope Alexander VI) லூயிஸ்  தரப்புக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். லூயிசுக்கும் ஜோனுக்கும் இடையே நடந்த திருமணத்தை இரத்து செய்தும் தீர்ப்பளித்தார்.

திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட விசாரணை கவுன்சில் (Commission of Investigation), லூயிஸின் ஒப்புதல் இல்லாத காரணத்தால், ஜோன் உடனான திருமணம் தவறானது என்றும், அவர்கள் கணவன் மனைவியாக நடந்துகொள்ளாத காரணத்தாலும் அது தொடரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தமது அறிக்கையை திருத்தந்தையிடம் அளித்தது. ஆகவே, அவர் அரசிக்கு எதிராக தீர்ப்பளித்தார். கி.பி. 1498ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் தேதி, இவர்களது திருமண ரத்து அறிவிக்கப்பட்டது. தனியே ஒரு பக்கமாய் அடியெடுத்து வைத்த ஜோன், தமது முன்னாள் கணவனுக்காக செபிப்பதாக கூறினார். "பெர்ரி" பிராந்தியத்துக்கு (Duchess of Berry) கோமாட்டியாக நியமிக்கப்பட்ட ஜோன், "பெர்ரியின்" (Berry)  தலைநகரான "பௌர்ஜெஸில்" (Bourges) ஓய்வுபெற சென்றார்.

புதிய இடத்தில் குடியேறிய ஜோன், தமது ஆன்மீக குருவும் இயக்குனருமான "அருளாளர் கேப்ரியல் மேரி" (Blessed Gabriel Mary, O.F.M) என்பவரிடம் தம்மை துறவற வாழ்வுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தார். ஜோனின் இம்முயற்சியில் அவர் ஜோனுக்கு ஆதரவு அளித்தார். அவர் ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் விண்ணேற்பு சபைக்கான திட்டமிடலைத் தொடங்கினார். இது "எளிய கிளாரா" (Poor Clares) சபையின் ஒரு சுயாதீனமான கிளையாக நிறுவப்பட்டது. சபை உறுப்பினர்களுக்கான, இவரால் எழுதப்பட்ட  வாழ்க்கை நெறிமுறை சட்டதிட்டங்கள், கி.பி. 1502ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 12ம் தேதி, திருத்தந்தை அலெக்ஸாந்தர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. முதல் மடாலயத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த வருடம் தொடங்கப்பட்டது. கி.பி. 1504ம் ஆண்டு, "பெந்தகோஸ்து" (Pentecost Sunday) எனப்படும் தூய ஆவி திருவிழா தினத்தன்று, ஜோன் மற்றும் கேப்ரியல் மேரி ஆகியோர், இந்த விதிமுறைகளை பின்பற்றுவதற்காக தனியார் பொறுப்புக்களை மேற்கொண்டனர். அதன்மூலம், தங்களை சபையின் இணை நிறுவனர்களாக (Co-Founders of the Order) நிலைநிறுத்தினர். அதே வருடம், நவம்பர் மாதம், 21ம் நாளன்று, அன்னை மரியாளை ஆலயத்தில் அர்ப்பணிக்கும் விழா (Feast of the Presentation of Mary) அன்று, ஜோன் மற்றுமுள்ள பெண்கள், பகிரங்கமாகவும் சட்டபூர்வமாகவும் தங்களை சபைக்கு ஒப்புக்கொடுத்தனர்.

கி.பி. 1505ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 4ம் தேதி, ஜோன் நித்திய அமைதியில் மரித்தார்.