ஃபெப்ரவரி 1 - அருளாளர் லூய்கி வேரியரா ***


அருளாளர் லூய்கி வேரியரா

(Blessed Luigi Variara)

சலேசிய குரு & நிறுவனர்:

(Priest of the Salesians & Founder)

பிறப்பு: ஜனவரி 15, 1875

வியரிகி, அஸ்தி, இத்தாலி இராச்சியம்

(Viarigi, Asti, Kingdom of Italy)

இறப்பு: ஃபெப்ரவரி 1, 1923 (வயது 48)

சான் ஜோஸ் டி குக்குடா, நோர்டே டி சாண்டாண்டர், கொலம்பியா

(San José de Cucuta, Norte de Santander, Colombia)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஏப்ரல் 14, 2002

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

(Pope John Paul II)

நினைவுத் திருநாள்:

ஃபெப்ரவரி 1

ஜனவரி 15 (சலேசியா குருக்கள் - (Salesians)

பாதுகாவல்:

இயேசு மற்றும் மரியாவின் திருஇதய மகள்கள் சபை

(Congregation of Daughters of the Sacred Hearts of Jesus and Mary),

மிஷனரிகள்

அருளாளர் லூய்கி வேரியரா, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். இவர், புனிதர் தொன் போஸ்கோ (St. Don Bosco) நிறுவிய சலேசியன் (Salesians) சபையின் உறுப்பினருமாவார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கொலம்பியா (Colombia) நாட்டில் மேற்கொண்ட பணிகளின் ஒரு பகுதியாக செலவிட்டார். அங்கு அவர் தொழுநோயாளிகளுடனும், கைவிடப்பட்ட தொழுநோயாளிகளின் குழந்தைகளுடனும் பணியாற்றினார். அவர் அங்கு பணியாற்றும்போது குருத்துவ அருட்பொழிவு பெற்றார். மேலும், தொழுநோயாளிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆறுதல் இரண்டையும் வழங்குவதே அவருடைய பிரதான பணியாக அமைந்தது.

தொழுநோயாளிகளுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் மத வாழ்க்கையில் நுழைய வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன், அவர் "இயேசு மற்றும் மரியாவின் திருஇருதயங்களின் மகள்கள்" (Daughters of the Sacred Hearts of Jesus and Mary) சபையை நிறுவினார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) அவர்கள், 2002ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் நாளன்று, வேரியராவை முக்திப்பேறு பட்டமளித்து, அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.

லூய்கி வேரியரா, கி.பி. 1875ம் ஆண்டில், வடமேற்கு இத்தாலியின் (Northwestern Italy), "பியெட்மன்ட்" (Piedmont) பிராந்தியத்திலுள்ள, "ஆஸ்டி" (Asti) நகரில், "பியட்ரோ வேரியரா" () மற்றும் "லிவியா புஸ்ஸா" ஆகியோருக்குப் பிள்ளையாக பிறந்தார்.

இவர், தம்முடைய பன்னிரெண்டு வயதில், "டுரின்" (Turin) நகரிலுள்ள சலேசிய பள்ளியில் (Salesian Oratory) கல்வி கற்க இணைந்தார். கி.பி. 1856ம் ஆண்டு, தூய ஜான் போஸ்கோ (St. John Bosco) பிரசங்கிப்பதைக் கேள்விப்பட்ட இவரது தந்தை, இவருடைய கல்வியை நிறைவு செய்வதற்காக "வால்டோக்கோ" (Valdocco) நகருக்கு அழைத்துச் சென்றார். ஒரு சந்தர்ப்பத்தில் இந்த உயிருள்ள புனிதரைச் சந்திக்கும் பாக்கியத்தை லூய்கி பெற்றார். அது, அவரது வாழ்க்கையை மாற்றிய ஒரு சந்திப்பாக அமைந்ததுடன், அவரில் ஆழ்ந்த தாக்கத்தை விட்டுச்சென்றது. ஜான் போஸ்கோ அந்த சிறுவனின் கண்களை உற்றுப் பார்த்தார். இந்த பார்வை லூய்கிக்கு அவரது எதிர்கால சலேசிய பணிகளை உறுதிப்படுத்தியது. ஜான் போஸ்கோ, ஒரு மாதத்திற்குப் பிறகு, கி.பி. 1888ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் தேதி, மரித்தார்.

1891ம் ஆண்டில், புதுமுகப் பயிற்சியில் (Novitiate) இணைந்த இவர், சிறிது காலத்திலேயே தனது பிரமாணங்களை தூய ஜான் போஸ்கோவின் முதல் வாரிசான அருளாளர் மைக்கேல் ருவாவின் கைகளில் செய்தார். தமது புதுமுகப் பயிற்சியின் பின்னர், "வால்சலிஸ்" (Valsalice) நகரில், தத்துவக் கல்வி பெற்றார். அங்கே, தம்முடைய பணிகள் பற்றி, தமது சலேசிய சமூகத்தினருடன் கலந்தாய்வு செய்ய வந்திருந்த கொலம்பியா நாட்டின் தொழுநோயாளிகளின் சலேசிய அப்போஸ்தலரான (Salesian Apostle of Lepers of Colombia) அருட்தந்தை மைக்கேல் யூனியாவைச் (Fr Michele Unia) சந்தித்தார். அவரது பேச்சு லூய்கியை வென்றது. கி.பி. 1894ம் ஆண்டு, அவர் திரும்பிச் சென்றபோது, அருட்தந்தை மைக்கேல் யூனியாவுடன் லூய்கியும் கொலம்பியாவுக்கு புறப்பட்டார்.

இங்கே அவர் "அகுவா டி டியோஸ்" (Agua de Dios) நகரின் தொழுநோயாளிகளுக்கு தன்னை அர்ப்பணித்தார். இசை மற்றும் நாடகம் மீதான தனது ஆர்வத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். லூய்கி மற்றும் மூன்று குருக்களை தொழுநோய் காலனிக்கு பொறுப்பாக்கிவிட்டு, அருட்தந்தை யுனியா சிறிது நேரத்திலேயே இறந்து போனார். அங்கே வசித்த சுமார் 2000 மக்களில், சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் தொழு நோயால் பாத்திக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சேவை செய்வதில் காலத்தை செலவிட்ட லூய்கி, கி.பி. 1898ம் ஆண்டு, கொலம்பியா நாட்டிலேயே குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

சிறிது காலம், அங்குள்ள "மரியன்னையின் குழந்தைகளின் தோழமைக் கூட்டுறவு" (Sodality of the Children of Mary) எனும் அமைப்பின் ஆன்மீக இயக்குனராகவும் பணியாற்றினார். அவர் தினமும், பெரும்பாலும் ஒப்புறவு அளிப்பதில், சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் பணியாற்றினார். 

1905ம் ஆண்டில், தாம் மிகுந்த அபிமானம் கொண்டிருந்த அருட்தந்தை யூனியாவுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, "தந்தை மைக்கேல் யூனியா மழலையர் பள்ளியை" (ather Michele Unia Kindergarten) நிறுவினார்.

தொழுநோயாளிகளும் - உண்மையில் தொழுநோயாளிகளின் பிள்ளைகளும் - மத வாழ்க்கையில் நுழைய முடியாது என்பதைப் உணர்ந்த அவர், ருவாவின் ஆலோசனையின்பேரில் ஒரு மத சபையை நிறுவ அனுமதிக்க முடிவு செய்தார். "போகோடா" (Archbishop of Bogotá) உயர்மறைமாவட்ட பேராயரின் அனுமதியுடனும், 1905ம் ஆண்டு, மே மாதம், 7ம் தேதி, இதை நிறுவ அனுமதித்ததற்கான முறையான ஒப்புதலுடனும் இதைச் செய்ய அவர் முடிவு செய்தார். இது, 1952ம் ஆண்டில் திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) அவர்களிடமிருந்து பாராட்டுக்குரிய ஆணையைப் பெற்றது. 1964ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 6ம் தேதி, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்களிடமிருந்து முறையான அனுமதி கிட்டியது.

தொழுநோயாளிகள் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பை தருவதற்காக சபை நிறுவப்பட்டதால், அருட்தந்தை லூய்கியின் முன்முயற்சி மற்ற மத சபைகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டதுடன், தவறாகவும் மதிப்பிடப்பட்டது. 

எவ்வாறாயினும், லூய்கி கடவுளின் விருப்பத்தின்படி நடக்க உறுதியாக இருந்தார். மேலும் அவருக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டியவர்களால் புரிந்துகொள்ளப்படாமலோ அல்லது ஏற்றுக்கொள்ளப்படாமலோ கல்வாரி ஏறத் தொடங்கினார். எவ்வாறாயினும், அவர் கீழ்ப்படிதலுக்கு புறம்பாக செயல்படுகிறார் என்பதை அறிந்தும், தொன் பாஸ்கோவின் முதல் வாரிசான அருட்தந்தை மைக்கேல் ருவா அவருக்குப் பின்னால் நின்று, அவருக்கு ஆறுதலையும் நிவாரணத்தையும் அளித்தார். லூய்கி உருவாக்கிய நிறுவனத்தை தொடர அவரை ஊக்குவித்தார்.

அவரது மிகப் பெரிய சோதனை, "அகுவா டி டையோஸ்" (Agua de Dios) நகரிலிருந்து, வெனிசுலாவுக்கு (Venezuela) அவர் மாற்றப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டது. இது அவரது சபையிலிருந்து அவரை பிரித்தது. இது, அவருடைய சபையின்மீது மர்ம நிழலைத் தந்தது. மற்றும் லூய்கிக்கு 18 ஆண்டுகால தவறான புரிதல்களைத் தொடங்கியது. "அகுவா டி டையோஸ்" நகரை விட்டு வெளியேறிய பின்னர், அவர் ஒரு நகரத்திலிருந்து வேறொரு நகரத்திற்கு அடிக்கடி மாற்றப்பட்டார். மேலும் 1921ம் ஆண்டில் அவர் டெரிபாவுக்கு இறுதியாக மாற்றப்பட்டார். எவ்வாறாயினும், சபையின் இணை நிறுவனரான அன்னை லோசானோவுடன் (Mother Lozano) தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். "பயப்பட ஒன்றுமில்லை - அது கடவுளின் பணி என்றால், அது நீடிக்கும்" என்று அவர் அன்னை லோசானோவுக்கு உறுதியளித்தார்.

லூய்கி வேரியரா 1923ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 1ம் தேதியன்று, தமது 48 வயதில் "குக்குட்டா" (Cucuta) நகரில் மரித்தார்.