கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 5 /25 ***


“ இம்மானுவேல் என்றால் நம்மோடு கடவுள் “ என்று பொருள்

                              மத்தேயு 1 : 23

கடவுளின் அன்பு : அளவில்லா அன்பு அதிசய அன்பு

கடவுளே மனிதனாக பிறக்கமுடியுமா ? ஏன் பிறக்க வேண்டும் ? அதன் அவசியம்தான் என்ன?

 “ எனக்கு அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா மனுசனா மட்டும் பிறக்கவே மாட்டேன். எதாவது ஒரு குருவியா, பறவையாதான் பிறப்பேன் “

என்று  நம்மில் பலர் சொல்வதுண்டு ஏன் நாமே சொல்லியிருப்போம்..

ஏன் மனிதப்பிறவி அவ்வளவு மோசமானதா ? அதெல்லாம் எங்களுக்கு தெறியாது ஆனா மனுசனா பொறந்தா வர்ற கஷ்ட்டம் இருக்கே அதை யார் அனுபவிப்பது...

மேலே சொன்ன அத்தனை கேள்விகளுக்கும் ஒரே விடை, ஒருவரே விடை அவர்தான் இயேசு இயேசு இயேசு...

முடியும் கடவுள் மனிதனாக பிறக்கவும் முடியும், மனிதன் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையையும் பட முடியும் அது தான் அவர்..

ஏன் ஏன் நமக்கு எல்லாருக்கும் விடை தெரியும்.. நம் பாவங்களுக்காக,  நம்மை மீட்பதிற்காக பிறந்தார். நமக்காக இறந்தார். ஈசியாக சொல்லிவிடுவோம்

ஆனால் அவருக்காக அவர் அன்புக்காக அவருக்கு திருப்பி நாம் என்ன செய்தோம்? என்ன செய்கிறோம்.. 

 நாம் யாரிடமாவது அண்ணன், தம்பி, தங்கை, தோழன், தோழியிடம் அன்பை காட்டிவிட்டு பதிலுக்கு ஒரு ரெஸ்பான்சும் இல்லை என்றால்  நமக்கு எப்படி இருக்கிறது..நான் எப்படியெல்லாம் என் அன்பை காட்டினேன். பதிலுக்கு ஒன்றுமே செய்யலையே கண்டுக்காமல் போய்விட்டானே, போய்விட்டாளே என்று புலம்பி தீர்த்துவிடுகிறோம்.

 எதிர்பார்ப்பு நமக்கு மட்டும்தானா ? அது கடவுளுக்கு மட்டும் கிடையாதா ? அவருக்காக நாம் மெனக்கெடுகிறோமா? எதாவது செய்கிறோமா ? அவரை சந்தோச படுத்துகிறோமா ?

கிறிஸ்துமஸ்க்காக வீட்டை சுத்தப்படுத்துகிறோம், வண்ணம் பூசுகிறோம், குடில் அமைக்கிறோம், புத்தாடை வாங்குகிறோம், நண்பர்களை வீட்டுக்கு அழைக்கிறோம் இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று யோசிக்கிறோம்..

ஆனால் நம் ஆன்ம வீட்டை முற்றிலும் மறந்துவிடுகிறோம். அதை சுத்தப்படுத்துகிறோமோ ? அலங்கரிக்கிறோமா ? அதிலும் ஒரு குடில் அமைத்து பாலன் இயேசுவை வைத்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமா? இல்லை நள்ளிரவு வழிபாடோடு அவரை மறந்துவிட்டு மற்ற காரியங்களில் கவனத்தை திருப்புகிறோமா?

நம்மில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் கொண்டு வந்து கொண்டே இருக்கவேண்டும் அவருக்கும், நமக்கும் இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா அர்த்தமுள்ளதாக இருக்கும்..

ஜெபம் : தன்னையே தந்த தெய்வமான இறைவா ! உமக்கு நாங்கள் எங்களையே உடனே தரவேண்டாம் என்றாலும் பரவாயில்லை. உம்மை  நோக்கி எங்கள் கவனத்தை திருப்பி, எங்கள் பாதங்களை உம்மை நோக்கி நடக்க ஆரம்பிக்க வரம் தாரும். அதுவும் வர இருக்கும் உம்முடைய பிறப்பு விழாவை கொண்டாட எங்களையே நாங்கள் முழுமையாக தயாரித்து உம்மோடு கொண்டாடும் வரம் தாரும் இறைவா - ஆமென்