இன்றைய புனிதர் - ஜனவரி 30 - புனிதர் ஹியாஸின்தா மாரிஸ்கொட்டி ***


புனிதர் ஹியாஸின்தா மாரிஸ்கொட்டி

(St. Hyacintha Mariscotti)

கன்னியர் மற்றும் மறைப்பணியாளர்:

(Virgin and religious)

பிறப்பு: மார்ச் 16, 1585

விக்னநெல்லோ, விட்டெர்போ, திருத்தந்தையர் மாநிலம்

(Vignanello, Viterbo, Papal States)

இறப்பு: ஜனவரி 30, 1640 (வயது 54)

விட்டெர்போ, திருத்தந்தையர் மாநிலம்

(Viterbo, Papal States)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1726

திருத்தந்தை பன்னிரெண்டாம் பெனடிக்ட்

(Pope Benedict XIII)

புனிதர் பட்டம்: மே 14, 1807

திருத்தந்தை ஏழாம் பயஸ்

(Pope Pius VII)

முக்கிய திருத்தலம்:

புனிதர் ஹியாஸின்தா மாரிஸ்கொட்டி தேவாலயம், விட்டெர்போ, இத்தாலி

(Church of Santa Giacinta Marescotti, Viterbo, Italy)

நினைவுத் திருநாள்: ஜனவரி 30

புனிதர் ஹியாஸின்தா மாரிஸ்கொட்டி, “புனிதர் ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை” (Third Order Regular of St. Francis) சபையைச் சேர்ந்த அருட்கன்னியும், ஒரு இத்தாலிய மறைப்பணியாளரும் ஆவார். இப்புனிதர் தமது ஆழ்ந்த வல்லமையுள்ள ஆன்ம பணிகளுக்காக கத்தோலிக்க திருச்சபையால் குறிப்பிடப்படுபவர் ஆவார்.

ஹியாஸின்தாவின் திருமுழுக்குப் பெயர் "க்லேரிஸ்" (Clarice) ஆகும். இவரது தந்தை அந்நாளைய கோமகன் ஆவார். அவரது பெயர், "மார்கண்டோனியோ" (Marcantonio Marescotti) ஆகும். இவர் "பேரரசன் சார்ல்மேக்னே" (Emperor Charlemagne) அவர்களின் இராணுவத்தில் ஒரு தலைமைப் பொறுப்பிலிருந்தார். "க்லேரிஸின்" தாயாரின் பெயர், "ஒக்டாவியா ஓர்ஸினி" (Ottavia Orsini) ஆகும்.

"க்லேரிஸும்" அவரது சகோதரிகளான "கிநேர்வா" (Ginevra) மற்றும் "ஒர்டேன்ஸியா" (Ortensia) ஆகிய மூவரும் "புனித பெர்னார்டினோ" (St. Bernardino) துறவு மடத்தில் கல்வி கற்றனர். இவர்களுக்கு கல்வி கற்பித்தது, "மூன்றாம் நிலை ஃபிரான்ஸிஸ்கன் சபையின்" (Franciscan Third Order Regular) அருட்சகோதரிகளாவர்.

இவர்கள் தமது கல்வியை பூர்த்தி செய்ததும், "க்லேரிஸின்" மூத்த சகோதரியான "கிநேர்வா" துறவறத்தில் இணைந்தார். அவரது துறவு பெயர், "சகோதரி இம்மகொலட்டா" (Sister Immacolata) என்றானது. "க்லேரிஸ்" சிறு வயதில் பக்தி மார்க்கத்தில் சிறந்து விளங்கினார்.

இருபது வயதான க்லேரிஸ், "மார்ச்சீஸ் கெபிஸுச்சி" (Marchese Capizucchi) என்ற இளைஞனுடன் திருமணம் செய்ய நாட்டம் கொண்டார். ஆனால் அவ்விளைஞனோ க்லேரிஸின் இளைய சகோதரியான "ஒர்டேன்ஸியாவின்" (Ortensia) மீது விருப்பம் கொண்டார். ஏமாற்றமடைந்த க்லேரிஸ், தாம் ஏற்கனவே கல்வி கற்ற "விடெர்போ" (Viterbo) நகரிலுள்ள துறவு மடத்தில் இணைந்தார். "ஹியாஸின்தா" (Hyacintha) என்ற பெயரை தமது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார்.

தாம் துறவறம் ஏற்றதன் காரணம், இவ்வுலக வாழ்வின் சுகபோகங்களை ஒதுக்குவதற்காக அல்லவென்றும், தமது திருமண விருப்பம் நிறைவேறாமல் போனதால் ஏற்பட்ட பெரும் ஏமாற்றம், துன்பம், சங்கடம், மன உளைச்சல் மற்றும் அவமானம் ஆகியவையே என்றும் அவற்றை மறைப்பதற்காகவே தாம் துறவறம் பெற்றதாகவும் ஹியாஸின்தா மறைக்காமல் பின்னாளில் ஒப்புக்கொண்டார்.

ஹியாஸின்தா தமக்கென்று விசேட உணவுகளை தனியாக வைத்திருந்தார். உயர்தர ஆடைகளை உடுத்துவதிலும், பணம் கொடுப்பவர்களின் இல்லம் செல்வதையும், வழக்கமாக வைத்திருந்தார். சுமார் பத்து வருட காலம் இவ்விதமாக வாழ்ந்த ஹியாஸின்தா, தாம் எடுத்திருந்த பிரமாணங்களுக்கெதிராக வாழ்ந்திருந்தார். ஆனால் இவர் தமது சமய விசுவாசத்திலும் அன்றாட துறவற நடவடிக்கைகளிலும் அன்னை கன்னி மரியாள் மீது கொண்ட அளவற்ற பக்தியிலும் குறைவோ மாசோ படாது பார்த்துக்கொண்டார்.

ஒருமுறை, ஹியாஸின்தா மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது, துறவு மடத்தில் பாவமன்னிப்பு வழங்கும் மத குருவானவர் ஹ்யாஸிந்தாவுக்கு நற்கருணை அளிக்க அவரது அறைக்கு வந்தபோது, அங்கேயிருந்த ஆடம்பர பொருட்களைக் கண்டு அதிர்ந்து போனார். துறவற வாழ்க்கையில் மிக நெருக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய உறுதிகளை விட்டுக்கொடுத்ததற்காக குருவானவர் ஹியாஸின்தாவை கடுமையாக கடிந்துகொண்டார்.

இச்சம்பவத்தின் பின்னர் ஹியாஸின்தா தம்மை முழுமையாக மாற்றிக்கொண்டார். ஆடம்பர பொருட்களையும் ஆடைகளையும் விட்டுவிட்டார். ஒரு பழைய அங்கி போன்ற ஆடையையே அணிந்தார். பாதணிகள் இல்லாது வெறும் கால்களுடனேயே நடந்தார். அடிக்கடி விரதமிருந்து ஒருத்திருந்தார். நேரத்துக்கு உண்ணாமலும் உறங்காமலும் தம்மைத் தாமே தண்டித்துகொண்டார். நகரில் பிளேக் தொற்று நோய் வெடித்துப் பரவியபோது அவர் நோயாளிகளுக்கு ஆற்றிய தொண்டும் சேவையும் குறிப்பிடத்தக்கது.

ஹியாஸின்தா இரண்டு "தோழமைக் கூட்டுறவு (Confraternities) (துறவரமற்ற சமய வாழ்வு வாழ்பவர்கள்) அமைப்புகளை நிறுவினார். இதன் உறுப்பினர்கள் "அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அல்லது ஸகோணி" (Oblates of Mary or "Sacconi) என்று அழைக்கப்பட்டனர். இதிலொன்று, "புனித வின்சென்ட் தெ பவுலின் சமூகம்" (Society of St. Vincent de Paul) போன்றது. இதன் நோக்கமும் செயல்பாடுகளும் நோயில் அவதிப்படுபவர்களுக்காகவும், பிச்சை எடுக்க வெட்கப்படுபவர்களுக்காகவும், கைதிகளுக்காகவும், பிறரிடம் இரந்து பொருள் பெற்று சேவை புரிவது ஆகும். மற்றொன்று, முதியோர் இல்லங்களை உருவாக்குவது.

ஹியாஸின்தா மரணமடையும் சமயத்தில் அவரது கீர்த்தியும் மிகவும் அதிக அளவில் பரவியிருந்தது. அவரது மனம் திரும்புதலால் மிக உன்னத தூய்மை நிலையை அடைந்திருந்தார்.