அழுகின சரீரம்

நாம் அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணத்தில் அறிக்கையிடுவது போல, நம் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதரின் இரண்டாம் வருகையின் போது, ஆதாம் தொடங்கி, கடைசி மனிதன் வரை, இவ்வுலகில் வாழ்ந்த சகல மனிதர்களின் சரீரங்களும் உயிரோடு எழுப்பப்பட்டு, அதனதன் ஆத்துமத்தோடு இணைக்கப்படும். 

பரிசுத்தர்களின் சரீரங்கள் ஒளி வீசுபவையாகவும், எந்த விதமான பாரமும் இல்லாதவையாகவும் இருக்கும். அவை சுவர்கள் போன்ற திடப்பொருட்களை ஊடுருவிச் செல்லக்கூடியவையாகவும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மனோ வேகத்தில் செல்லக் கூடியவையாகவும் இருக்கும். அவர்கள் இனி சாக மாட்டார்கள், துன்பப்படவோ, அழுகலுக்கு உட்படவோ அவர்களால் இயலாது.

ஆனால் தீயவர்களின் சரீரங்கள் சடப் பொருட்களுக்குரிய பாரத்தோடு உயிர்த்தெழும். அழுகிய நிலையில் அவை தத்தம் ஆத்துமத்தோடு ஒன்றிக்கப்படும். இனி நித்திய காலத்திற்கும் அது பாவிக்கு ஒரு சகிக்கக்கூடாத சுமையாக ஆகிவிடும்.

புழுத்து அழுகிய ஒரு பிணத்தை உன்னோடு, கண்ணோடு கண்ணும், முகத்தோடு முகமுமாய்ச் சேர்த்துக் கட்டி, ஒரு இராமுழுதும் இருட்டறையில் உன்னை அடைத்துப் பூட்டி வைக்க சம்மதிப்பாயா? நீ நரகத்திலே விழுந்தால் புழுத்து அழுகி உன் சரீரம் துர்நாற்றம் வீசுமே!

உன்னோடு கட்டப்பட்ட அதை நித்தியத்திற்கும் இழுத்துக் கொண்டு திரிய உனக்கு சம்மதமா?


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...