சாம்பல் புதன்.

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே!...!!!

கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன. பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன்.

சாம்பல் புதன் என்றால் என்ன?

உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்களை கிறிஸ்தவர்கள் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.

தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.

பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.

கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் "மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே" என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.

இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் "குருத்தோலை தினம்" என கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, "சாம்பல் புதன்" தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.

பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே "சாம்பல் புதன்" தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.

நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.

நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.

இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.

தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.

இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.

சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.

இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.

திருநீறு பூசும் நிகழ்ச்சி.

திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.

திருநீற்றுப் புதன் வரும் நாள்.

பொதுவான கிரகோரியன் கிறித்தவ நாட்காட்டிப்படி, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வருகின்ற முழுநிலா நாளையொட்டி வருகின்ற ஞாயிறு அவ்விழா நிகழும். இது பண்டைய யூத மரபுப்படி அமைந்த பாஸ்கா விழா கணிப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே, திருநீற்றுப் புதன் பெப்ருவரி 4ஆம் நாளிலிருந்து மார்ச் 10ஆம் நாள் வரை ஏதாவது ஒரு புதனன்று வரலாம். 2011ஆம் ஆண்டு இவ்விழா மார்ச் 9ஆம் நாள் வந்தது. 2012ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் பெப்ருவரி 22ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

திருநீற்றுப் புதன் கொண்டாட விவிலிய அடிப்படை.

கிறித்தவ விவிலியத்தில் அடங்கியுள்ள புதிய ஏற்பாட்டில் இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. நற்செய்தி நூல்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் புதன்.

முன்னாள்களில் விபூதிப் புதன் என்றும் இப்பொழுது திருநீற்றுப் புதன் (சாம்பல் புதன்) எனவும் வழங்கப்படுகின்ற இந்நாளில் கிறித்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலைத் தம்மீது தடவிக் கொள்கிறார்கள். சாம்பல் தவத்திற்கும் தன்னொறுத்தலுக்கும் மன மாற்றத்திற்கும் அடையாளம்.

கத்தோலிக்க சபை வழக்கப்படி, கடந்த ஆண்டு குருத்து ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, சாம்பலாக்கிக் கோவிலில் வைப்பர். அங்கே வழிபாட்டின்போது அச்சாம்பல் மந்திரிக்கப்படும். அதைக் கிறித்தவ குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது (நெற்றியில்) பூசுவார்; வழக்கமாக சிலுவை அடையாளத்தில் இப்பூசுதல் இருக்கும். அவ்வாறு பூசும்போது, குரு (திருத்தொண்டர்) கீழ்வரும் சொற்களைக் கூறுவார்:

மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே! என நினைத்துக்கொள் (தொடக்க நூல் 3:19). (ஆண்டவராகிய கடவுள் நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்″ என்றார் தொடக்க நூல் 3:19)