அக்டோபர் 29

செபமாலையும் சம்மனசுக்களும்!

செபமாலை சொல்லும் வழக்கம் சிறிது பரவின காலை சம்மனசுக்களின் பக்தியும் பெரிதும் போற்றப்பட்டது என்று சொல்லலாம் . 12ம் நூற்றாண்டில் பற்பல தப்பறைகள் சம்மனசுக்க்ளைப் பற்றி நடமாடின . 1215 ஆம் ஆண்டில் 4ம் லூத்தரன் பொதுச்சங்கம் அழுத்தமாக தெளிவாய் மொழிந்தது என்னவெனில் , சம்மனசுக்கள் படைக்கப்பட்டவர்கள் . மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் சம்மனசுக்களைப் படைத்தார். வேதத்தில் சம்மனசுக்களுக்கு வழங்கும் பேரின் தமிழாக்கம் அஞ்சல் தூதர்கள் என்பதாம் .அவர்கள் சுத்த அரூபிகள் . உடலோடு - மனிதனைப் போல - இணைக்கப்படாதவர்கள் . இணைக்கப்படவும் உண்டாக்கப்பட்டவர்கள் அல்லர் அவர்கள் . அருமையான கானங்கள் இசைத்து ஆண்டவர் அருகில் அமர்ந்து அவரைத் துதித்து தோத்தரிக்கின்றனர். ஒரு நாளும் பாவத்தை அறியாதவர்கள் . ஆனதால் அவர்கள் கொழுந்து விட்டு எரியும் சிநேகத்தின் சோதிச் சுடர்கள் . கடவுளுடைய வேலைப்பாட்டின் மணிகள் , இறைவனுடைய ஆணைக்கு விரைந்து பணியத் தயாராய் இருக்கின்றனர்

கடவுள் அவர்களுக்குப் பிறகு மனுமக்களைப் படைத்தார் . மனிதர்களும் அவருடைய சட்டங்களுக்குப் பணிந்து ஈடேற்றத்தைச் சம்பாதிக்க வேண்டியவர்கள் . இச்சட்டம், இக்கதி , கடவுளின் இந்த இனிமையான நோக்கம் மனிதனுக்கு நன்றாய்த் தெரியும் . எனினும் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் புதிய சட்டத்தின் நாளிலும் இறைவனுடைய மதுரமான சித்தத்தை மனிதருக்கு அறிவிக்க கண்ணுக்குத் தோன்றும் விதம் சம்மனசுக்கள் தோன்றி இருக்கிறார்கள் . தோன்றுகிறார்கள் . ஈடேற்றத்தின் மக்களுக்கு உதவி செய்யும் ஆவிகள் என்று அவர்களைக் குறித்து சின்னப்பர் சொல்லிப் போனார் அல்லவா ? நமது ஈடேற்றத்தை நிறைவேற்றியவர் மனித அவதாரம் எடுத்த தேவ குமாரன் ஆனபடியால் அவருக்குப் பணிந்து நடக்கும் அவ்வலுவலில் அவர்களும் பங்கெடுப்பதில் அதிசயம் உண்டா ? ஆதலின் செபமாலையின் இரகசியங்களில் மறைந்தோ திறந்தோ சம்மனசுக்கள் தோன்றுவதைக் காண்கிறோம்

சம்மனசுக்களின் ஒன்பது விலாசம் , அவர்கள் எண்ணிக்கை அநந்தம். நம் கணக்குக்கு எட்டாதவை . கால பரிபூரணம் வந்த போது ஆதாமுக்கு ஆண்டவர் அளித்த வாக்கு நிறைவேறும் நாள் வந்தபோது அச்சுப செய்தியை அறிவிக்க கபிரியேல் என்னும் அதிதூதர் அனுப்பப்பட்டார்

கன்னிமரி செபத்தில் ஆழ்ந்திருந்தபோதோ , வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதோ அழகு வடியும் இந்த அஞ்சல் தூதர் மரிக்கு அதை அறிவிக்க அனுப்பப்பட்டார் . பிதாவாகிய கடவுளே உருவாக்கிய மேலான இதமான " அருள் நிறைந்த மரியே " என்ற வாசகத்தை முதன் முதல் உச்சரிக்கக் கபிரியேல் பாக்கியம் பெற்றார் . தம் புத்தி சாதுரியத்தினால் கன்னியின் சந்தேகங்களைத் தீர்த்து அவரது சம்மதத்தைப் பெற்று ஆவலோடு காத்திருந்த சம்மனசுக்களின் கூட்டத்திற்கு " வார்த்தையானவர் மனு உருவானார் " என்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை அறிவித்தார் . நவவிலாச சம்மனசுக்களுக்கு பொங்கி வழிந்த மகிழ்ச்சியை எடுத்து மொழிய முடியுமா ?

அடுத்த ஒன்பது மாதங்கள் அவர்கள் எவ்விதம் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திருந்தார்கள் என்பது ஒரு அதிசயம் . கடைசியில் முதல் கிறிஸ்துமஸ் வந்தது . கூட்டம் கூட்டமாய் மாலை மாலையாய் விண்ணுலகை விட்டு வானதூதர்கள் மண்ணுலகுக்கு இறங்கினர் . " உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாவதாக " என்று இசைத்தனர் . மோட்சத்தில் தங்களுக்கு தோழர்களாக இருக்க வேண்டிய மானிடரையும் மறக்காமல் " பூலோகத்தில் நல்ல மனதுள்ளோருக்கு சமாதானம் உண்டாவதாக " என்று இச்சமாதான ஆவிகள் ஆர்ப்பரித்தனர் . தங்கள் இனத்தாரில் சிலர் அகங்காரத்தினால் மனுதாவதாரம் எடுக்கப்போகும் மனுமகனுக்குச் செய்த துரோகத்துக்கு இவ்விதம் இன்று முதல் முதலாகப் பரிகாரம் செய்யப் பாக்கியம் பெற்றனர் . கடவுளுக்கு ஊழியம் செய்வதில் அவர்களுக்குள்ள மகிழ்ச்சியால் மனிதர்களும் மகிழ்ச்சியோடு ஊழியம் செய்யக் காந்தம் போல அவர்களை இழுப்பர். தங்களுக்கு இன்றிருந்த ஆனந்தத்தால் எல்லாச் சந்தோஷ தேவ இரகசியங்களையும் நிரப்புவர் . மலங்காட்டில் மலடியான உறவினளை மாமரி  பார்க்கச் சென்ற போது இஸ்ராயேலரின் வனாந்தரப் பிரயாணத்தில் ஒளி மேகம் அவர்கள் மேல் படர்ந்து சென்றது போல , சம்மனசுக்களின் பிரகாசத் திரள் படர்ந்து சென்றிருக்க வேண்டும் . இயேசுவைத் தூக்கி எருசலேம் ஆலயம் சென்ற பொது இம்மகிமைக் காப்பாளர் தாயையும் சேயையும் விட்டு தூரம் பிரிந்திருக்க முடியுமா ? இயேசு எருசலேமில் தங்கிய முத்தினமும் சம்மனசுக்கள் தாயின் உள்ளத்தில் நம்பிக்கையின் ஆவி பறக்கச் செய்திருப்பார்கள் என்று நம்பலாம் அல்லவா?

பூங்காவனத்தில் மனம் ஒடிந்து கசப்பான பாத்திரத்தைக் கண்டு தளர்ந்து ஆண்டவர் தவிக்கும்போது பயம், பாவம் , மரணம் என்பவைகளோடு ஆண்டவர் மல்யுத்தம் தொடுத்த போது தம்மைச் சூழ்ந்து நின்ற சம்மனசுக்களின் பிரசன்னம் அவர் உள்ளத்தில் ஆறுதலின் ரேகைகளை ஒட்டியிருக்க வேண்டும்

அவர் தெரிந்து கொண்ட மூவரையும் நித்திரை கவர்ந்து கொண்ட போது , மனிதர்கள் தம்மை விட்டுப் பிரிந்து போவார்கள் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பாய்ந்த போது , சம்மனசுகள் தம்மை விட்டுப் போகார்கள் என்ற எண்ணமான தைலம் மனதில் சிறிது குளிர்ச்சியைப் பரப்பியது . கற்றூணில் ச்கசையடிகள் அலறியபோது அவர்கள் தங்கள் சிறகுகளை விரித்து அண்டையில் இருப்பார்கள் . ஜனத்திரள் இழி சொல்லையும் பழி வசனத்தையும் பொழிந்தபோது அவைகளை அமர்த்தியது போல மக்கள் செவிக்கு எட்டாவண்ணம் இவர்கள் பண் இசைப்பார்கள் . பிலாத்தின் அரண்மனை முற்றத்தில் " அவனைச் சிலுவையில் அறையும் அறையும் " என்று மானிடப் பதர்கள் இரைந்த போது , அந்த இரைச்சலுக்கு மேலே பதின்மடங்கு சத்தமாய் நாவற்ற குரலில் " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக " என்று ஞானாதிக்கர்களின் ஆதிக்கத்தில் இவர்கள் கோஷிப்பார்கள். ஏரோதன் அரண்மனை வாசலில் மரியாதையற்ற கேள்விகளையும் சொல்லையும் வழங்கியபோது , அதைவிட ஆயிரமடங்கு சத்தமாய்த் தொனியற்ற குரலில் " பரிசுத்தர் , பரிசுத்தர் , மகிமையும் , பெருமையும் , செல்வாக்கும் பெற நீர் தகுதியுள்ளவர் " என்று பண் இசைப்பர் . உடல் எல்லாம் கிழிந்து உடைந்த தூணில் உட்கார்ந்து கொண்டு , முள்முடி சூட்டி , ஈன சேவகர்களின் பரிகாசத்துக்கு ஆளான போது," அவரிடம் உள்ளது அரச இதயம் ; தெய்வீகத்தின் இரத்தம் அவரது நாளத்தில் ஓடுகிறது . முள்முடி சூடி இரத்தத்தால் தோய்ந்த அவரது சிரசு , தெய்வீக ஞானத்திற்கு இருப்பிடம் " என்று விழுந்து விழுந்து அவரை ஆராதித்தனர் . கல்வாரிக்குப் போகும்போது மெய்க்காப்பாளர்கள் போல அவரைச் சுற்றித் தரையில் விழும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் , பூலோக ஆஸ்தியெல்லாம் சேர்த்து வாங்க முடியாத வைடூரியங்களைப் போல பாவித்து பதனமாய் பொறுக்கி எடுப்பர். வெளியரங்கமாய்த் தோன்றி இருந்தால் கசடர்கள் ஓட்டம் எடுத்திருப்பார்கள் , கர்த்தனின் திட்டம் நிறைவேறாதென்று மறைந்தே சென்றனர். இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே சேனை சேனையாய் வானதூதர்கள் இக்காட்சியைக் கண்டு அதிசயித்து ஆண்டவரை ஆராதித்தனர்

மகிமைத் தேவ இரகசியங்களில் என்றும் இல்லாத விதமாய் மக்கள் அருகில் இந்த மோட்ச மன்னர்களைப் பார்க்கிறோம். புத்தி பேதலித்த சில யூதர் இயேசுவின் கல்லறையைக் காவல் புரிய சில சேவகர்களை நிறுத்தினர் . வீண் வேலை . ஆயிரக்கணக்கான பரலோக இளவரசர்கள் திருச்சரீரத்தை பயபக்தியோடு காவல் காத்து நின்றனர் . மரிய மதலேனாளும் மற்ற பெண்களும் கல்லறையைக் காண வந்த காலை " உயிரோடிருப்பவரை மரித்தோரிடத்தில் ஏன் தேடுகிறீர்கள் " என்கிறார்கள் அத்தூதர்கள் . இயேசு மரித்ததாக அச்சம்மனசுக்கள் கருதவில்லை போலும் ."நீங்கள் இயேசுவைத் தேடுகிறீர்களா ?" அச்சம்மனசுக்களுக்கு இயேசுவைத் தேட அவசியமே இல்லை . அவர்கள் தாம் அல்லும் பகலும் கல்லறையைச் சூழ்ந்து நிற்கின்றனரே . உலக முடியுமட்டும் வானதூதர்கள் இயேசு மூன்று நாள் தங்கிய கல்லறையைக் காவல் புரிந்து நிற்பர். பெத்லேகேமின் நற்செய்தியை வானதூதர் உலகுக்கு அறிவித்தனர் . பூங்காவில் சம்மனசானவர் இயேசுவுக்கு ஆறுதல் சொல்லுகிறார் . கல்லறையில் அவர் வேலை முடிந்ததென்று வானதூதர் அறிவிக்கின்றனர் . " உயிர்த்தெழுந்து விட்டார் . அவர் இங்கில்லை . மரித்தோரிடமிருந்து எழுந்தவர் இனி ஒருநாளும் மரிக்க மாட்டார் "

நாற்பது நாள் இயேசு பூலோகத்தில் இருந்தபோது அவரது சிறிய ஆசையையும் நிறைவேற்றத் தேடுவது போல அவரைச் சூழ்ந்து சுற்றி சுற்றி வந்தனர் . அவர் பரலோகத்துக்கு ஆரோகணமானபோது மெய்க்காப்பாளர்கள் போல மகிமைப் பிரதாபத்தோடு இனிய குரலோடும் வீணை நாதத்தோடும் சங்கீதம் முழங்கிச் செல்லுகின்றனர் . அவர்களை நோக்கித்தான் " உங்கள் சிரசை உயர்த்துங்கள் "என்று தாவீது அரசர் பாடினாரா ?இப்பூவுலகில் முதலாய் அரசனுடைய மரணத்திற்குப் பின் அவன் தாயை பிரஜைகள் புறக்கணித்து விடுகிறார்களா ? முப்பத்து மூன்று ஆண்டுகளோ அதற்க்கு மேலோ தாயோடு தங்கியிருந்த சம்மனசுக்கள் அவருக்குத் துணையும் மகிமையுமாய் நின்றனர் . அவர் மரணத்திலும் அகலவில்லை . அவர் தேவ மகன் வந்து அவரைத் தாங்கி பரலோகம் எடுத்துச் சென்ற போது வானதூதர்களின் மோன மகிழ்ச்சி என்ன ? நம் மானிட மொழியில் அவர்களது மகிழ்ச்சியை விளக்க வேண்டுமேயாகில் விதம் விதமாய்ப் பாடினர் , பிரிவு பிரிவாய்ச் சங்கீதம் இசைத்தனர் . வாத்தியங்கள் கோஷித்தன . மேளங்கள் முழங்கின . ஆடினர் . நர்த்தனம் புரிந்தனர் . என்ன மகிழ்ச்சி ! மகுடாபிஷேக நேரத்தில் அரசிக்கு விதவிதமாய்க் காணிக்கை கொண்டு வர , போட்டி போட்டது போல வந்தனர் . தங்கள் வணக்கத்தைச் சமர்ப்பித்தனர் . கை கொட்டினர் . "அகில உலக அரசி வாழ்க , பரலோக பூலோக அரசி வாழ்க வாழ்க " என்று ஆர்ப்பரித்தனர் .

சரிதை.

மக்கள் செபமாலை சொல்லுவது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று படித்து படித்து நமக்கு தாய் சொல்லி வருகிறார் . செபமாலை எல்லா வரப்பிரசாதங்களுக்கும் வற்றாத ஊற்றாயிருக்கும் என்று 12ம் நூற்றாண்டில் இருந்து பக்திமான்கள் பலருக்கு ஆண்டவள் சொல்லி இருக்கிறார்  .மசபியேல் குகையில் 18 முறை காட்சி கொடுத்த போதும் தம் செபமாலையைக் கரத்தில் ஏந்தி வந்தார் . பெர்னதெத்தையும் அவருடன் சென்றவர்களையும் செபமாலை செபிக்கச் சொன்னார் . அவர்களுக்கு முன் மாதிரியாக அவரே செபமாலையை உருட்டினார் . மேலும் பாத்திமாவில் தோன்றி செபமாலை பக்தியை வற்புறுத்தினார் . அவர்கள் செபமாலை செய்து முடித்த உடனே தோன்றினார் . என்ன சொன்னார்? " நான் செபமாலை ஆண்டவள் . உலகம் நாசமாகாதபடி உலக வாசிகள் செபமாலை செபிக்க வேண்டும் " என்று துவக்கத்திலேயே கூறினார் . மூன்று சிறுவர்களுக்கும் எச்சமயம் தோன்றினார் ? "பிரான்சீஸ்கோ மோட்சத்திற்குப் போவானா ? போவான் .. ஆனால் அவன் இன்னும் அநேகம் தடவை செபமாலை செபிக்க வேண்டும் " என்றார் . முதல் காட்சியிலே செபமாலை ஆண்டவள் என்ன கேட்டுக் கொண்டாள்?"உலகிற்குச் சமாதானம் வரும் வண்ணம் தினந்தோறும் செபமாலை சொல்லுங்கள்  "

இது எவ்வளவு தூரம் அவர்களின் பிஞ்சு மனதில் பதிந்திருந்ததெனில், காட்சி முடிந்து அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் என்ன சொன்னார்கள் ? " உலகிற்கு சமாதானம் கொண்டு வரும்படி நாம் ஒவ்வொரு நாளும் செபமாலை செய்ய வேண்டுமென்று ஆசிக்கிறார் "

ஜூன் மாதக் காட்சியிலும் செபமாலை செய்யத் தூண்டியபின் ஒரு புது செபம் சொல்லக் கற்றுக் கொடுக்கிறார் ." ஓ எங்கள் இயேசுவே , எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும் . சகல ஆத்துமாக்களையும் உமது பரலோகத்தின் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களுக்கு விசேச தயை புரியும் "

செப்டெம்பர் மாதம் 13ம் தேதி முப்பதாயிரம் பேருக்கு மேல் கூடி இருக்கின்றனர் . செபமாலை சொல்லுகின்றனர் . தேவ தாய் காட்சியில் மறுபடியும் என்ன கேட்டுக் கொள்ளுகிறார் ? "சமாதானத்திர்க்காக ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் "

அக்டோபர் மாதம் 13ம் தேதி கொட்டும் மழையில் நனைந்தாலும் அறுபதாயிரம் மக்களுக்கு மேல் மணிக்கணக்காய் "அருள் நிறைந்த மரியே, பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ........அருள் நிறைந்த மரியே ......பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ..." என்றும் பஜனை முழங்குகிறார்கள் . கடைசி முறையும் இச்சன சமுத்திரத்தை நோக்கிய வண்ணம் செபமாலை ஆண்டவள் மொழிந்த கடைசிப் பத்தி என்ன ? "இவர்கள் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கத்தைப் பின்பற்றுவார்களாக"

செபம்.

செபமாலை இராக்கினியே , சம்மனசுக்களின் அரசியே , இறைவனுடைய கன்னி மாதாவே , எங்களுடையவும் எங்கள் தந்தையாகிய பாப்பரசருடையவும் விண்ணப்பத்தைச் செவி சாய்த்துக் கேட்டு மனுமக்கள் யாவருக்கும் திருச்சபையின் மேல் உண்மையான நேசத்தைத் தந்தருளும் . மற்ற ஆத்துமங்களை விட உம்முடைய பரிசுத்த ஆத்துமம் இயேசுக்கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியால் நிறையப்பெற்றிருந்தது. மனுக்குலத்தின் பேரால் தேவ குமாரன் மனுக்குலத்தோடு மணமுடிக்கச் சம்மதம் தந்தீர் . கிறிஸ்துவின் அவயவங்களின் அன்னை நீர் . உம்முடைய பரிசுத்த இருதயத்திற்கு எங்கள் தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மனுக்குல முழுவதையும் நேர்ந்து கொண்டார் . உம்முடைய ஆத்துமும் சரீரமும் மோட்ச மகிமையின் கதிரை எப்பக்கமும் வீச உம்முடைய திருமகனோடு ஆட்சி செலுத்தும் ஆண்டவளே மகிமையுள்ள ஞான சரீரத்தின் சிரசினின்று ஞான சரீரத்தின் அவயவங்களில் எல்லாம் வரப்பிரசாதம் ஓயாமல் தாராளமாய் வழிந்தோடும்படி உமது திருக்குமாரனை ஒவ்வொரு நிமிஷமும் மன்றாட மறந்து போகாதே அம்மா , செபமாலை இராக்கினியே வாழ்க!

ஆமென்.