இரட்சணியத்தின் தன்மை

62. மனித இரட்சிப்பு என்கிற பரம இரகசியம் ஆவதென்ன?

பாவத்தினின்றும் நரகத்தினின்றும் மனிதனை மீட்கும்படி மனிதனுக்காக சேசுநாதர்சுவாமி தம்மையே பிணையாளியாக்கிக் கொண்டு, பாடுபட்டுத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்தது மனு­ இரட்சிப்பு எனப்படும்.


1. இரட்சணியம் என்றால் என்ன?

பெருத்த ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுவதுதான் இரட்சணியம்.


2. பிணையாளி என்றால் யார்?

மற்றொருவன் பட்ட கடனைத் தன்மேல் சுமந்து கொள்ளுகிறவன் பிணையாளி எனப்படுவான்.


3. எப்பேர்ப்பட்ட ஆபத்தில் இருந்து சேசுநாதர் மனிதரை இரட்சித்தார்?

பாவத்தினின்றும், நரகத்தினின்றும் இரட்சித்தார்.


4. இரட்சணியத்தின் கதி என்ன?

(1) சர்வேசுரனுக்கு ஆதாமும் நாமும் பாவத்தினால் செய்த துரோகத்தைப் பரிகரித்தலும். 

(2) அதன் மூலமாய் மனிதரைப் பசாசின் அடிமைத் தனத்தினின்று மீட்டு, நமது பாவங்களை நிவிர்த்தி செய்வதும். 

(3) இஷ்டப்பிரசாதத்தை நமக்குத் தந்து நம்மைச் சர்வேசுரனுடைய சுவீகாரப் பிள்ளைகளாக்கி, நமக்கு நித்திய சீவியத்தைக் கொடுத்தருளுவதுமே இரட்சணியத்தின் கதியாகும்.


5. பாவத்தை மன்னித்து மோட்சத்தை அளிக்க சர்வேசுரன் கடமைப்பட்டிருந்தாரா?

இல்லை. சர்வேசுரன் அப்படிக் கடமைப்பட்டிருந்த தில்லை. கெட்ட சம்மனசுகள் பாவங்கட்டிக் கொண்டபின் தாங்கள் செய்த பாவத்துக்கு மனஸ்தாபப்படும்படி நேரமும் தேவ வரப்பிரசாதமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் தீமையில் நிலை நின்று உடனே நரகத்தில் தள்ளப்பட்டார்கள். சர்வேசுரன் அவர்கள் மட்டில் செய்ததுபோல், மனிதரையும் பாவ நிலையிலேயே விட்டுவிட்டிருக்கலாம்.  ஆனால் சுவாமி மனிதர் மேல் மனமிரங்கி, அவர்களுடைய பாவத்தை மன்னிக்கத் தீர்மானித்தார்.


7. அந்தப் பரிகாரத்தைச் செய்தது யார்?

அர்ச். தமதிரித்துவத்தின் இரண்டாமாளாகிய சுதனாகிய சர்வேசுரன்.


8. சுதனாகிய சர்வேசுரன் மனுஷாவதாரம் செய்து மனிதருக்காக பிணையாளியாகி ஏன் அந்தப் பரிகாரத்தைச் செய்தார்?

முன்சொன்னபடி பாவமானது சர்வேசுரனுக்கு விரோதமான அளவில்லாத துரோகமாயிருக்கிறபடியால், அதற்கு முழுப் பரிகாரம் செய்வது சிருஷ்டிகளுக்கும் அதி உன்னதமான வஸ்துவால் முதலாய்க் கூடாத செயல்.  சம்மனசுகளும், அர்ச். தேவ மாதாவும்கூட சரியான பரிகாரம் செய்திருக்க முடியாது. கடவுளும், மனிதருமாகிய ஒருவர் மாத்திரம் தேவ நீதிக்கு ஒத்தபடி பூரண மாய்ப் பரிகாரம் செய்யக் கூடியவராயிருக்கிறபடியால் சேசுநாதர் மனிதருக்காகப் பிணையாளியானார்.


9. முழுப் பரிகாரம் செய்ய ஏன் கடவுளும், மனிதருமாகிய ஒருவர் அவசியமாயிருந்தார்?

பாவிகளாகிய மனிதர் பேரால் அந்தப் பரிகாரம் நிறைவேறுவதற்குப் பரிகாரம் செய்பவர் நம்மைப்போல் மனிதராயிருக்க வேண்டியிருந்தது.  மேலும் அளவற்ற துரோகத்துக்கு அளவற்ற பரிகாரம் அவசியமாயிருந்ததால், நமது இரட்சகர் சர்வேசுரனாயும் இருக்க வேண்டியிருந்தது.


10. சேசுநாதர் கட்டாயப்பட்டு மனிதருக்காகப் பிணையாளியாகி பரிகாரம் செய்தாரா?

சேசுநாதர் யாதொரு கட்டாயமின்றி மனச்சுயாதீனத்தோடு உத்தரித்தார்.  “அவர் இஷ்டப்பட்டு நிவேதனமாயினார் (பலியானார்)” என்று இசையாஸ் எழுதியிருக்கிறார் (இசை.53:7).  “என்னிடத்திலிருந்து என் சீவனைப் பறிகொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரமுண்டு; மறுபடி அதைக் கைக் கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு” என்று சேசுகிறீஸ்துநாதர் தாமே சொல்லியிருக்கிறார்.


11. எப்போது சேசுநாதர் மனிதரை இரட்சிக்கத் துவக்கினார்?

உற்பவித்த மாத்திரத்திலேதான்.


12. அவர் பிறந்தவுடனே மனிதரை இரட்சிக்க என்ன செய்தார்?

செபித்து, பாடுபட்டு, நன்மாதிரிகை காண்பித்தார்.


13. சேசுநாதர் மனிதரை இரட்சிக்கிறதற்காகப் பாடுபட அவசியமா?

அவசியமில்லை. ஏனென்றால், அவருடைய ஒவ் வொரு கிரியையும் தன்னிலேதான் அளவற்ற மதிப்புடையது.  ஆகையால் அவருடைய ஒரு சிறு கிரியை, ஓர் துளி இரத்தம், சொற்பக் கண்ணீர், ஒரு செபம் முதலாய் உலகத்தை இரட்சிக்கப் போதுமான பேறுபலனுடையது.


14. அவர் நம்மை இரட்சிக்க சிலுவையில் மரணமடைவது அவசியமா?

தன்னிலே அது அவசியமாயிருந்ததில்லை. தம்முடைய பாடுகளின் மூலமாய் மாத்திரம் சேசுநாதர் பேறுபலன்கள் அடைந் தாரென்று ஒருக்காலும் எண்ணக்கூடாது. ஏனெனில், நமதாண்டவர் தேவமாதாவின் கர்ப்பத்தில் உற்பவித்த கணம் துவக்கித் தமது கடைசி மூச்சு விடுமட்டும், இடைவிடாமல் பேறுபலன்களுள்ள முயற்சிகள் செய்து கொண்டு வந்தார்.  அவர் உற்பவித்த உடனே செய்த முதல் கிரியையே  அளவற்ற பேறுபலன் கொண்டிருந்ததால், அது மனுக்குலத்தை இரட்சிக்கிறதற்கு அவசியமாயிருந்ததற்கு மேல் அதிகப் பலனுடையதாயிருந்ததென்பதற்குச் சந்தேகமில்லை.


15. அப்படியானால் ஏன் நமது திவ்விய கர்த்தர் தமது பாடுகளின் வழியாக மாத்திரம் மனிதனை இரட்சிக்கச் சித்தமானார்?

ஏனென்றால்: 

(1) பிதாவாகிய சர்வேசுரனுக்கு மேலான மகிமை செலுத்தவும், 

(2) தேவ நீதிக்குத் தக்கபடி நமது பாவங்களுக்கு முழுப் பரிகாரம் பண்ணவும்,

(3) நமது பேரில் தமக்குள்ள அணைகடந்த அன்பை அதிகத் தெளிவாய்க் காண்பிக்கவும்,

(4) பாவத்தின் அகோர அவலட்சணமும், கொடூரமும் எப்பேர்ப்பட்டதென்று நமக்குக் காட்டவும்,

(5) அதைச் சர்வேசுரன் எப்படி அருவருக்கிறாரென்று நமக்குக் காண்பிக்கவும்,

(6) அதினால் நம்மிடத்தில் பாவத்தின் மட்டில் அதிக வெறுப்பை ஏற்படுத்தவும்,

(7) நாம் நமது பாவங்களுக்காகப் பரிகாரம் பண்ண வேண்டிய அவசியத்தை நமக்குப் போதிக்கவும்,

(8) பாவம் செய்வதை விட நமது உயிரை முதலாய்க் கொடுக்க நம்மைத் தூண்டவும்,

(9) சோதனை வருத்தங்களை நாம் பொறுமையோடு சகிக்க நமக்குத் தைரியம் கொடுக்கவும்,

இவ்வகைப் பாடுகளையும் மரணத்தையும் அநுபவிக்கச் சித்தமானார்.


16. சேசுநாதருடைய சிலுவை மரணம் நமது ஈடேற்றத்துக்குக் காரணமென்று எப்படி அறிவோம்?

அது வேத ஆகமத்தில் பற்பல இடங்களில் சொல்லி யிருக்கிறது.  “இவர் நம்மைச் சிநேகித்து, தமது இரத்தத்தினால் நம்மிடத்தினின்று நம்முடைய பாவங்களைக் கழுவியருளினார்” (அரு. காட்சி. 1:5) - “அவர் சிலுவை மரத்திலே தமது சரீரத்தின் மேல் நமது பாவங்களைச் சுமந்தார்.  அவருடைய காயங்களினால் குணமாக்கப்பட்டோம்” (1 இரா. 2:24) - “நமக்கு எதிரிடையா யிருந்த தீர்ப்பின் கையயழுத்தை அழித்து, அதைச் சிலுவையில் அறைந்து முழுதும் ஒழித்து விட்டார்” (கொலோ. 2:14).


17. சேசுகிறீஸ்துநாதர் தாம் சிலுவையில் உயிர்விடும்போது சர்வேசுரனுக்கு ஏற்ற மெய்யான பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்தாரா?

சேசுகிறீஸ்துநாதர் சிலுவையில் உயிர்விடும்போது, மனிதர்களை இரட்சிக்கும்பொருட்டு, சர்வேசுரனுக்கு ஏற்ற விலைமதிக்கப்படாத ஓர் மெய்யான பலியாகத் தம்மை ஒப்புக் கொடுத்தார்.  மனிதர் பேரால் தேவநீதிக்கு அளவற்ற மதிப்புள்ள பரிகாரஞ் செய்தார்.


18. மனுக்குலத்தின் இரட்சிப்பானது பரம இரகசியமென்று சொல்லுவது ஏன்?

னென்றால், தேவசுதன் மனுஷாவதாரமெடுத்தார் என்னும் சத்தியத்தை ஒத்துக் கொண்டபின், அவர் மரிக்கவும் கூடுமென்று கண்டுபிடிப்பது எளிதான காரியம்.  ஆனால் நமது பாவங்களுக்குத் தக்க பரிகாரம் செய்யவும், நமக்குப் பதிலாய்ப் பலியாகவும் தமது ஏக குமாரனை நமக்குக் கொடுக்கச் சித்தமான சர்வேசுரனுடைய அளவில்லாத நேசத்தை நாம் ஒருபோதும் கண்டு பிடிக்க முடியாது.


63. (31) எந்தச் சுபாவத்திலே பாடுபட்டார்?

மனுஷ சுபாவத்திலே பாடுபட்டார்.


தேவனாகிய மட்டும் சேசுநாதர் பாடுபட முடியுமா?

சேசுநாதர் தேவனாகிய மட்டும் பாடுபட முடியாது. ஏனென்றால், சர்வேசுரன் சகல நன்மை சம்பூரணராயிருக்கிறார்.  இந்தச் சம்பூரணத்திற்கும் பாடுகளுக்கும் ஐக்கியமிருப்பது கூடாத காரியம்.  ஆகையால் சேசுநாதர் மனிதனாக மாத்திரம் பாடுபட்டார். ஆயினும் பாடுபட்ட மனுஷ சுபாவம் தேவ ஆளுக்குச் சொந்தமானதினாலே, அவருடைய பாடுகளுக்கு மட்டற்ற பேறுபலன்களுண்டு.