திவ்ய நற்கருணை நவநாள் ஜெபம் - இரண்டாம் நாள்.

இயேசு பேசுகிறார்:

எனது நேச மகனே / மகளே, வருக. நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். உனக்கு நான் தருவதற்கு ஏராளம் உண்டு. உனக்கும் நீ அன்பு செய்பவர்களுக்கும் தருவதற்காக ஏராளமான கொடைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கிறேன். உங்கள் கனவுகள் உள்ளது அனைத்தையும் நனவாக்கும் அன்பும் ஆற்றலும் என்னிடம் உள்ளது. நொறுங்கிய இந்த உலகை குணமாக்கி அன்பையும் சமாதானத்தையும் அருளவேண்டுமென்ற எனது கனவுகள் நனவாக வேண்டும். குஷ்டரோகியின் உடலைத் தொட்டு அவனை சுத்தப்படுத்திய எனது கரங்கள் வெறுமனே காத்துக்கிடக்க இலட்சக்கணக்கான மக்கள் குணம் பெறாது நோயில் வருந்தி ஏன் சாக வேண்டும்? எனது மக்கள் எனதண்டை வந்து எனது சந்நிதியில் மௌனமாக இருக்கக்கூடாதா என்று நான் எவ்வளவு ஆவல் கொண்டுள்ளேன் தெரியுமா?

எண்ணிலடங்காத கோபமும், அநீதியும், துன்பமும் இவ்வுலகில் நிறைந்திருக்கிறது. பசாசினால் அபகரிக்கப்பட்ட அனைத்தையும் மீட்டு உங்களை குணப்படுத்தி, புதுப்பித்து, இரட்சிக்கக்கூடிய வல்லமையுடைய ஒருவர் இருக்கிறார். ஆம், அந்த வல்லமை இங்கேதான் இருக்கின்றது.

சிந்தனை.

தேவ நற்கருணைக்கு முன்பாக வந்திருக்கும்பொழுது இறைவனின் ஆற்றல் கிடைக்கப்பெறும். நானே இந்த ஆற்றலை பெருகச்செய்கின்றேன். இறைவனின் இந்த வல்லமை எமது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் பயன்படக்கூடியதாக அவை நமக்குத் தரப்படுகின்றன.

இறைவன் யோசுவாவுக்குக் கூறியதாவது. "நான் எப்பொழுதும் உன்னோடிருப்பேன், உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்". (யோசுவா 1:5)

சங்கீதங்களில் இவ்வாறு பாடப்படுகின்றது. "ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் என்னைக் காப்பவர், அவரே என் ஆன்மாவையும் பாதுகாப்பார். நான் உள்ளே வரும்போதும், வெளியே போகும்போதும் அவர் என்னைக் காப்பார்". (சங்கீதம் 120: 7,8)

புனித சின்னப்பர்:

"சமாதானத்தின் ஊற்றாகிய ஆண்டவர் எப்பொழுதும், எல்லா வகையிலும் உங்களுக்கு சமாதானம் அருளுவாராக" (2 தெச. 3:16)

புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். (2 கொரி 9: 8,9)

இறைவன் உனக்கு தேவையானதை விட அதிகமாகத் தரவல்லவர்.

(முன் சொன்ன மறைநூல் வாசகங்களை பலமுறை தியானித்து உனது விசேஷ தேவைகளுக்காகச் செபிக்கவும்)

செபம்.

ஆண்டவராகிய இயேசுவே! உமது வருகை வரலாற்றின் போக்கை மாற்றியமைத்துள்ளது. என்றென்றும் மங்காத ஒளி நீர்தாமே என்பதை நான் அறிவேன். எந்த இருளும், துர்பாக்கிய நிகழ்வுகளும் அந்த ஒளியின் பிரபையை அணைத்துவிட முடியாது.

செபம்.

இயேசுவே! உமது அன்பு நிலைத்திருக்கும். அந்த அன்புதான் குரோதங்களையும், கசப்புணர்வுகளையும், சச்சரவுகளையும் வெற்றிகொள்ளும். உயர்ந்த மதிற்சுவர்களாலும் உம்மைத் தடுத்துவிட முடியாது. யுத்த ஆயுதங்கள் உமது சமாதானம் பரவுவதை நிறுத்திவிட முடியாது. இவ்விடத்திலேயே உமது வல்லமை இருக்கின்றது. எமது வாழ்க்கையைக் குணமாக்கி அமைதியளிக்கக் கூடிய வல்லமை அதுவே. எதிர்மாறான அனைத்திலுமிருந்து எம்மை விடுவிக்கக்கூடிய சக்தியும் அதுவே.

ஆண்டவரே, நாம் உம்மிடம் எதிர்பார்க்கும் சமாதானத்தை மற்றவர்களுக்கு கொடுக்க மறுக்கும் எனது குருட்டாட்டத்தை உணராது அதை உம்மிடம் கேட்கின்றேனே. எனது சகோதரனுக்கு எனது கைகளையும் எனது இருதயத்தையும் திறக்க முடியாத நான் வெற்றி தரும் உமது வலக்கரம் என்னைத் தாங்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

(இசை 41:10)

ஆண்டவரே, மனம் திரும்பும்படி நீர் விடுத்த அழைப்புக்குச் செவிமடுக்காதிருந்தேனே. எனது சுயநலங்கள் என்னை குருடாக்கிவிட்டன. ஆண்டவரே எனது தவறுகளை மன்னித்தருளும். நீர் விரும்பும் மனிதனாக நான் வாழ எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

இயேசு பேசுகிறார்.

எனது மகனே, மகளே, உனது பிரச்சினைகள் அனைத்தையும் நீ வெற்றி கொள்ளத்தக்கதாக உனக்கு உதவி செய்ய எனது கரங்களை அகல விரித்தவண்ணம் இதோ நான் இருக்கிறேன். எனது பலம் உனக்குப் போதுமானது. நற்கருணையில் இருக்கும் என்னை உற்றுப்பார். கடந்த கால துன்பங்களை குணமாக்கவும், வருங்காலத்தை மீட்டுத்தரவும் நான் உங்கள் மத்தியில் வாசம் பண்ணுகிறேன். உனது பெயரைச் சொல்லி நான் உன்னை அழைக்கின்றேன். ஆம்! எனது அன்பையும் சமாதானத்தையும் இதோ பெற்றுக்கொள்.