இடைவிடா சகாயத்தாய் நவநாள் வேண்டுதல்.

ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கிணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே! எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும். எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக்கொண்டு, எங்கள் விண்ணப்பங்களை கேட்டு அருள்புரிவீராக.

ஓ! இடைவிடாத சகாயத்தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம். வாழ்வோரின் பாதுகாவலும், மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே! உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும், மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக. உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும். நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம். நீரே எங்கள் இடைவிடா சகாயத்தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.

(நமது இகபரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக.)

ஓ! இடைவிடா சகாயத்தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் உம்முன் முழந்தாளிடுகிறோம். எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம். துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே, எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் தேவைகளை நிறைவேற்றும். எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும். ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால் நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத்தாயே, இந்த வரங்களையெல்லாம் எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல, ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.

ஆமென்.