புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 18 :

ஆண்டவருடைய திருப்பாடுகளில் புனிதையின் பங்கு..

சகோ. மரிய கிறிஸ்டினா கீழ்க்கண்ட வாக்குமூலத்தை அளித்தார் :

“ இந்தத் தாயாரோடு நான் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். மனுவுருவெடுத்த வார்த்தையானவர் இந்தப் பூமியில் வாழ்ந்தபோது எப்படி இருந்தார் என்பதற்கான உயிர் உள்ள பிரதிபிம்பமாக இந்தத் தாயார் இருந்தார். இந்த எண்ணத்தை மனதில் இருத்தாமல் நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் அரிது “

மனுவுருவெடுத்த வார்த்தையானவரை ஒரு கண்ணாடியாகக் கொண்டு அதனைப் பார்த்தே தன்னையும், பிற ஆன்மாக்களையும் புனிதை வார்த்தெடுத்தாள். அவளுக்கு மிகப்பெரும் ஏவுதலைத் தந்தது ஆண்டவரது துயரங்களே. அவளின் சிறுவயது முதலே அவளது தியானத்திற்கான ஒரே பொருளாக இருந்தது ஆண்டவரது பாடுகள்தான். அவள் துறவியான பின்பும் ஆண்டவரின் பாடுகளே அவளது ஆன்மாவிற்கு “பிரியமான உணவாக “ இருந்தது. 

“ என் அன்புடையாளே, என் சின்னப் புறாவே, வா, என் பாடுகளுக்காக நீ வருத்தப்படு. நான் மனிதர்கள்மீது கொண்ட நேசத்தை யாருமே அறிந்துகொள்ளாததிற்காக நீ வேதனைப்படு. நான் உன்னை புறா என்று அழைத்தேன். ஆனால் நீ வானம்பாடியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் “ என்று நமதாண்டவர் புனிதையிடம் 1584-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி உரைத்தார். இந்த வார்த்தைகள்தான் நமது புனிதையின் முழு வாழ்வின் பரம இரகசியத்தையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவளது வாழ்வின் ஒரே நோக்கம் நேசமும் வருத்தமுமேயாகும். அவளது கடைசி நாள்வரை, நேசரை யாரும் அறிந்துகொள்ளவும், நேசிக்கவும் முன்வராது குறித்து அவள் மிகுந்த வேதனைப்பட்டாள். மனிதர்கள் அனைவரின் பாவச் சுமையைத் தன் தோள்மீது சுமத்திவிட்டு, தனது மிகுதியான வேதனையிலிருந்து ஓய்வுவெடுக்குமாறு அவள் ஆண்டவரிடம் மன்றாடினாள்.

ஆண்டவரின் தலைமீது முள்முடி சூடிய பரம இரகசியத்தின் மீது புனிதை சிறப்பான பக்தி கொண்டிருந்தாள். சிறுவயதில் அவள் தன் தலைமீது முள்முடி சூடியிருந்தாள் என்பதை நாமறிவோம். சேசு நாதர் தம் தலையில் சூடியிருந்த முள்முடியின் பரம இரகசியம்தான் அவள் விரும்பி தியானிக்கும் கருப்பொருள். 1584- ம் ஆண்டு, சேசு அவளது இருதயத்தில் அவரது முள்முடியை வைத்தார். 1585- ம் ஆண்டு, அதே முள்முடியை ஆண்டவர் அவளது தலையில் வைத்தார். அதுமுதல் புனிதை இடைவிடாத தலைவலியால் வேதனைப்பட்டாள்.

1585-ம் ஆண்டு திருப்பாடுகளின் திங்கட்கிழமை புனிதையும், நவகன்னியரும் தோட்டத்தில் இருந்தனர். திடீரென புனிதை தன் சுய நினைவை இழக்க ஆரம்பித்தாள். அவளது முகமும் கண்களும் பரவச நிலையில் இருப்பது போல் இருக்கும்போது தோற்றமளிப்பது போல மாற ஆரம்பித்தன. இதனை கவனித்த சகோ. மரிய பசிபிக்கா கைத்தாங்கலாக நவகன்னியர் தங்கும் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு படுக்கையில் புனிதை முழந்தாளில் இருந்தாள். யாரும் பார்க்காதவாறு படுக்கையை, அதைச் சுற்றியிருந்த திரையால் மூடினாள். அவளது படுக்கைக்கு மேலே இருந்த சேசு நாதரின் சுரூபத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் புனிதை.  அவளது கரங்கள் விரிந்திருந்தன. அர்ச். சியென்னா கேத்ரின்போல அவளது தோற்றம் இருந்தது.

ஐந்து ஒளிக்கதிர்கள் சிலுவையில் அறையுண்ட அவளது மணவாளரின் காயங்களில் இருந்து புறப்பட்டன. அவை புனிதையின் கரங்கள், கால்கள் மற்றும் விலாவை நோக்கி பாய்ந்தன. இவை ஆண்டவரின் சொல்லொண்ணா வேதனையில் புனிதையையும் பங்கு பெற வைத்தன. உடனடியாகப் புனிதை “ ஆண்டவரே, இக்காயங்கள் வெளியே தெறியவேண்டாம். அவற்றின் வலியை மட்டும் நான் உணரச் செய்யும்” என்று மன்றாடினாள். அவளது மன்றாட்டு கேட்கப்பட்டது. ஒளிக்கதிர்கள் மறைந்தன. ஆனால் வலி தொடந்தது.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !